செய்திகள்,திரையுலகம் உயிருக்கு உயிராக (2014) திரை விமர்சனம்…

உயிருக்கு உயிராக (2014) திரை விமர்சனம்…

உயிருக்கு உயிராக (2014) திரை விமர்சனம்… post thumbnail image
தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார் நாயகன் சரண்சர்மா. இவருக்கு காதல் என்றாலே சுத்தமாக பிடிக்காது. ஆனால், இவருடைய அப்பா பிரபு, செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்து மகனுக்கு காதலி தேடுகிறார். இந்த விளம்பரத்தை பார்த்து பிரபு வீட்டுக்கு வருகிறார் மருத்துவ மாணவியான நாயகி ப்ரீத்தி தாஸ்.

அவள் பிரபுவிடம் உங்கள் மகனை எனக்கு பிடித்திருக்கிறது என்று கூறுகிறார். அதற்கு பிரபு தனக்கு சஞ்சீவ் என்ற இன்னொரு மகன் இருந்ததாகவும், காதலால் அவனுடைய வாழ்க்கை சீரழிந்ததையும் அவளிடம் விளக்கிக் கூறுகிறார்.மேலும், சஞ்சீவ் மிகச்சிறந்த புத்திசாலி. அறிவியலுக்கு சவால் விடும் கண்டுபிடிப்புகளை கையாள்வதில் திறமை வாய்ந்தவன். அப்படிப்பட்டவனை இந்த காதல், அவனை தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு கொண்டு சென்றதை கூறும் பிரபு, அதனால்தான் சரண் சர்மா காதல் என்றாலே அரவே வெறுத்து ஒதுக்குகிறான் என்றும் தான் காதலித்தால் தனது அண்ணனைப் போன்று தானும் வாழ்க்கையில் லட்சியத்தை எட்டமுடியாது என்று எண்ணி காதலை வெறுக்கிறான் என்றும் கூறுகிறார்.

ஆனால், ப்ரீத்தி தாஸை பிடித்திருப்பதாகவும், சரண் சர்மாவை எப்படியாவது மனமாற்றம் செய்து அவனை திருமணம் செய்து கொண்டு, அவனது லட்சியத்திற்கு உடனிருந்து செயல்படுமாறும் கூறுகிறார் பிரபு.பின்னர், பிரீத்தி தாஸ், சரண் சர்மாவை மனமாற்றம் செய்து அவரை கரம் பிடித்தாரா? சரண் சர்மாவின் லட்சியத்திற்கு உடனிருந்து அவனை வெற்றிப்பாதையில் அழைத்துச் சென்றாரா? என்பதே மீதிக்கதை.
படத்தில் இரண்டு நாயகர்கள். முதல் பாதி முழுக்க சரண் சர்மா படத்தை கொண்டு செல்கிறார். பிற்பாதியில் வரும் சஞ்சீவ் படம் விறுவிறுப்பாக நகர அதை தாங்கிச் செல்கிறார். தனது சகோதரனை இழந்து வாடும் காட்சிகளில் சரண் சர்மா அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சஞ்சீவ், காதல் காட்சிகளில் அழகாக நடித்துள்ளார். திரையில் அழகாக பளிச்சிடுகிறார். காதலியால் ஏமாற்றப்பட்ட வருத்தப்படும் காட்சிகளில் உருக்கம்.

நாயகிகளாக ப்ரீத்தி தாஸ், நந்தனா இருவரும் நடிப்பில் மிளிர்கிறார்கள். மருத்துவ மாணவியாக வரும் ப்ரீத்திதாஸ் தனது துள்ளலான நடிப்பில் ரசிகர்களை கவர்கிறார். பாடல் காட்சிகளில் கவர்ச்சி விருந்து படைத்திருக்கிறார். நந்தனா பிற்பாதிக்கு பிறகே வருகிறார். நாயகனை வலிய வந்து காதலிப்பதாகட்டும், நாயகனுக்கு எதிராக செயல்படும் காட்சிகளாகட்டும் திறமையாக நடித்திருக்கிறார்.பிரபு தனது அனுபவ நடிப்பால் கதாபாத்திரத்திற்கு மேலும் வலுவூட்டியிருக்கிறார். சதீஷ் காமெடிக்காக வைக்கப்பட்டிருந்தாலும், இவர் வரும் காட்சிகள் சிரிக்கும்படி இல்லை.

இயக்குனர் மனோஜ்குமார் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கியிருக்கும் படம். இந்த படத்தில் முதல் பாதியிலேயே பார்ப்பவர்களுக்கு சோர்வை ஏற்படுத்தியிருக்கிறார். இதையும் மீறி இரண்டாம் பாதி பார்க்கும்போது சற்று ஆறுதலாக இருக்கிறது. தனியார் கல்லூரியை மையப்படுத்தி, அந்த கல்லூரிக்கு விளம்பரத்தை ஏற்படுத்தி கொடுக்கும் வகையிலேயே படத்தை எடுத்திருப்பது இவருக்கே உரிய சிறப்பு. இறுதிக் காட்சியில் பிரபு பேசும் வசனங்கள் படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறது.
ஷாந்தகுமார் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையும் பரவாயில்லை. ஆனந்தகுமார் ஒளிப்பதிவில் காட்சிகள் அமைக்கப்பட்ட விதம் அருமை. பாடல் காட்சிகளை இவரது கேமரா கண்கள் அழகாக படம்பிடித்திருக்கின்றன.

மொத்தத்தில் ‘உயிருக்கு உயிராக’ உயிரோட்டம்……..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி