பாராளுமன்ற தேர்தலில் 280 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜனதாவுக்கு தனி மெஜாரிட்டி கிடைத்த நிலையில் காங்கிரஸ் 2–வது இடத்தை தான் பிடித்தது. ஆனால் எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு தேவையான எம்.பி.க்கள் இல்லை.44 எம்.பி.க்கள் மட்டுமே உள்ளதால் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து காங்கிரசுக்கு கிடைக்கவில்லை. 37 எம்.பி.க்கள் கொண்ட அ.தி.மு.க. 3–வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.எதிர்க்கட்சி அந்தஸ்து யாருக்கு என்பதை சபாநாயகர் தான் முடிவு செய்ய வேண்டும். அவருக்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளது என்று பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது பற்றி பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி வெங்கையா நாயுடு கூறுகையில், ‘‘மக்கள் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை எந்த கட்சிக்கும் வழங்கவில்லை. தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்காமல் காங்கிரஸ் மீண்டும் எதிர்க்கட்சி அந்தஸ்து கேட்கிறது. அது பற்றி சபாநாயகர் தான் முடிவு செய்ய வேண்டும்’’ என்றார்.
வெங்கையா நாயுடு கருத்துப்படி இதுவரை எதிர்க்கட்சி அந்தஸ்து யாருக்கு என்பதை சபாநாயகர் அறிவிக்கவில்லை. ஜனாதிபதி உரை நிகழ்த்துவதற்கு முன்பு இது அறிவிக்கப்பட வேண்டும். அவ்வாறு அறிவிப்பு வெளியாகாததால் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து எந்த கட்சிக்கும் இல்லை என்று பா.ஜனதா முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுபற்றி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மி கூறும் போது, எதிர்க்கட்சி அந்தஸ்து என்பது முக்கியமான பதவி. அதை மிகப்பெரிய கட்சியான காங்கிரசுக்கு வழங்க மறுக்க கூடாது அரசியல் அமைப்பு சட்டப்படி எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது முக்கிய பங்கு வகிப்பதாகும். மத்திய அரசின் முடிவு என்ன என்பது சபாநாயகர் மூலமாக தெரிந்து விடும் என்றார்.அதே சமயம் மேல்– சபையில் காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. மேல் சபை எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் மத்திய மந்திரி குலாம் நபி ஆசாத்தும் அவை முன்னவராக நிதிமந்திரி அருண் ஜெட்லி நியமிக்கப்பட்டுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி