அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் அரசு மரியாதையுடன் கோபிநாத் முண்டே உடல் தகனம்!…

அரசு மரியாதையுடன் கோபிநாத் முண்டே உடல் தகனம்!…

அரசு மரியாதையுடன் கோபிநாத் முண்டே உடல் தகனம்!… post thumbnail image
புதுடெல்லி:-மத்திய மந்திரி கோபிநாத் முண்டே நேற்று காலை டெல்லியில் நடந்த சாலை விபத்தில் சிக்கி, திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் மரணம் அடைந்தார். அவரது உடல் டெல்லி பா.ஜ.க. அலுவலகத்தில் நேற்று முழுவதும் வைக்கப்பட்டிருந்தது. பிரதமர் மோடி, அத்வானி, மத்திய மந்திரிகள், பா.ஜ.க. எம்.பி.க்கள், நிர்வாகிகள் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

நேற்று மாலை கோபிநாத் முண்டே உடல் தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து மும்பைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. மும்பை ஓர்லியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.இன்று காலை முண்டேயின் உடல் மும்பையில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மராட்டிய மாநில பா.ஜ.க. தலைவர்கள், நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு காலை 7.16 மணிக்கு கோபிநாத் முண்டே உடல் மும்பை விமான நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.மும்பை விமான நிலையப் பகுதியில் இன்று காலை சற்று பலத்த மழை பெய்தது. இதனால் கோபிநாத் முண்டே உடலை அவர் சொந்த ஊருக்கு கொண்டு செல்வதில் சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டது. சுமார் 1 மணி நேர தாமதத்துக்கு பிறகு இந்திய விமானப்படை மூலம் முண்டே உடல் மும்பையில் இருந்து லத்தூருக்கு சென்றது.

லத்தூரில் அவரது உடல் விமானத்தில் இருந்து ஹெலிகாப்டருக்கு மாற்றப்பட்டது. அந்த ஹெலிகாப்டர் முண்டே உடலுடன் அவரது சொந்த ஊரான பார்லிக்கு சென்று இறங்கியது. பிறகு முண்டே உடல் அவர் சொந்த கிராமத்தில் பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. பீட் தொகுதியை சேர்ந்த மக்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு வந்து முண்டேக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.இன்று மதியம் கோபிநாத் முண்டே உடலுக்கு அவர் குடும்பத்தினர் தங்கள் குல வழக்கப்படி இறுதிச் சடங்குகள் செய்தனர். அதன் பிறகு கோபிநாத் முண்டே உடல் அருகில் உள்ள பங்கிரி கிராமத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.அந்த கிராமத்தில் கோபிநாத் முண்டேக்கு சொந்தமாக வைஜ்நாத் சர்க்கரை ஆலை உள்ளது. அந்த ஆலை வளாகத்தில் முண்டே இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இறுதி சடங்கில் ஏராளமானவர்கள் திரண்டு இருந்தனர். அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். போலீசார் மீது அவர்கள் கற்களை வீசினார்கள்.

முண்டேயின் மூத்த மகளும் எம்.எல்.ஏ.யுமான பங்கஜா, கண்ணீர் விட்டு கதறியபடி தன் தந்தை உடலுக்கு இறுதிச் சடங்குகளை செய்தார். முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. சிதைக்கு அவரது மூத்த மகள் தீமூட்டினார்.முண்டேயின் இறுதிச் சடங்கில் மத்திய மந்திரிகள் சுஷ்மா சுவராஜ், நிதின்கட்காரி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி