அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் அரவிந்த் கெஜ்ரிவாலின் சிறைக்காவல் நீட்டிப்பு …

அரவிந்த் கெஜ்ரிவாலின் சிறைக்காவல் நீட்டிப்பு …

அரவிந்த் கெஜ்ரிவாலின் சிறைக்காவல் நீட்டிப்பு … post thumbnail image
புதுடெல்லி :- ஆம் ஆத்மி கட்சி தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை தம் மீது சுமத்தியதாக கூறி பா.ஜ.க முன்னாள் தலைவரான நிதின் கட்காரி, அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கின் மீதான விசாரணை நேற்று முன்தினம் டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இவ்வழக்கில் 10 ஆயிரம் ரூபாய்க்கான ஜாமின் பத்திரங்களை தாக்கல் செய்யுமாறு கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இதை கெஜ்ரிவால் ஏற்க மறுத்ததால் அவரை 23ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இரண்டு இரவுகளை திகாரில் கழித்த கெஜ்ரிவாலை நேற்று அவரது மனைவி சுனிதா சிறைக்கு சென்று சந்தித்தார். இன்று அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார் என்பதை அறிந்திருந்த அவரது ஆதரவாளர்கள் கெஜ்ரிவால் ஜாமினில் விடுவிக்கப்படுவாரா? என்ற ஆவலில் காலையில் இருந்தே கோர்ட் வாசலில் குழுமியிருந்தனர். திகார் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பிற்பகல் நீதிபதியின் முன்னர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது சிறைக்காவலை ஜூன் மாதம் 6-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

கெஜ்ரிவால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டது தொடர்பாக அதிருப்தி தெரிவித்த ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் சிலர், ‘ஒருவர் தப்பியோடி விடுவார் என்னும் நிலையில்தான் ஜாமின் பத்திரங்களை பிணையாக கேட்க வேண்டும். அரவிந்த் கெஜ்ரிவால் ஓடிப் போகும் நபர் என்று கோர்ட் கருதுகிறதா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இன்று அவர் ஜாமினில் விடுவிக்கப்படாததால், கட்சி தொண்டர்களுடன் கூடிப் பேசி அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்யப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி