பிரதமர் பதவியை ஏற்கப் போகும் மோடி, பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி மற்றும் அனைத்து தரப்பினரிடமும் ஆலோசனை நடத்தினார். நேற்று மோடி பா.ஜ.க. மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இன்று டெல்லியில் பா.ஜ.க. ஆட்சி மன்றக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் முறைப்படி நரேந்திர மோடி பிரதமராக தேர்ந்து எடுக்கப்படுவார். புதிய அமைச்சரவை பதவி ஏற்கும் தேதியும் முடிவு செய்யப்படும்.
மோடி பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி மாளிகை அதிகாரிகள் செய்து வருகிறார்கள். வழக்கமாக மத்தியில் புதிய அரசு பதவி ஏற்கும் போது, அதற்கான விழா ஜனாதிபதி மாளிகையில் உள்ள தர்பார் மண்டபத்தில் வைத்துதான் நடத்தப்படும். இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜி, முதல் பிரதமர் நேரு உள்பட பல பிரதமர்கள் இந்த மண்டபத்தில்தான் பதவி ஏற்றனர். தற்போது தர்பார் மண்டபம் புதுப்பிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. அந்த அரங்கினுள் சுமார் 500 பேர் வரை அமர வசதி உள்ளது.
மோடி பதவி ஏற்பு விழாவில் எத்தனை பேர் கலந்து கொள்வார்கள் என்ற கணக்கெடுப்பு நடந்து வருகிறது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு பிரமாண்டமான வெற்றியை பெற்றிருப்பதால் மோடி பதவி ஏற்பு விழாவை சிறப்பாக நடத்த பா.ஜ.க. மூத்த தலைவர்கள் விரும்புகிறார்கள்.எனவே, ஒவ்வொரு ஏற்பாடும் திட்டமிட்டு செய்யப்பட்டு வருகிறது. நிறைய பேர் புதிய அரசு பதவி ஏற்பு விழாவுக்கு அழைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. அழைப்பாளர்கள் எண்ணிக்கை 600க்கு மேல் இருக்கும் பட்சத்தில் தர்பார் மண்டபத்தில் பதவி ஏற்பு விழாவை நடத்த இயலாது.அத்தகைய சூழ்நிலையில் ஜனாதிபதி மாளிகையில் உள்ள மெஜஸ்டிக் கட்டிடத்தின் முன் பகுதியில் உள்ள திறந்த வெளி அரங்கில் பதவி ஏற்பு விழா நடைபெறும் என தெரிகிறது. இந்நிலையில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நரேந்திர மோடி இன்று சந்திபார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி