செய்திகள் போப் 6ம் பாலுக்கு அருளாளர் பட்டம்!…

போப் 6ம் பாலுக்கு அருளாளர் பட்டம்!…

போப் 6ம் பாலுக்கு அருளாளர் பட்டம்!… post thumbnail image
வாடிகன்:-மறைந்த போப் 2ம் ஜான் பால், 23ம் ஜான் ஆகியோருக்கு சமீபத்தில் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.மேலும் ஒரு முன்னாள் போப் ஆண்டவருக்கு புனிதர் நிலைக்கு முந்திய ‘அருளாளர்’ பட்டம் வழங்கப்படுகிறது. இதற்கான ஒப்புதலை போப் பிரான்சிஸ் வழங்கியுள்ளார். கத்தோலிக்கத் திருச்சபையில் புனிதர் பட்டத்துக்கு சிபாரிசு செய்யும் பேராயத்தின் தலைவர் ஆஞ்சலோ அமாத் தோ போப் பிரான்சிசை வாடிகனில் சந்தித்தார்.

அப்போது போப் ஆறாம் பால், இத்தாலியைச் சேர்ந்த பாதிரியார் லூயிஜி ஆகிய இருவரை அருளாளர்களாக உயர்த்துவதற்கான அற்புதங்கள் குறித்த ஆவணங்களை சமர்ப்பித்தார். அறிவியலால் விளக்க முடியாத அதிசயங்கள் என மருத்துவர்கள் வழங்கியுள்ள சான்றை ஏற்றுக்கொண்ட போப் பிரான்சிஸ், போப் 6ம் பால் உள்ளிட்ட இருவரையும் அருளாளர்கள் நிலைக்கு உயர்த்தும் ஆணையில் கையெழுத்திட்டார்.
அருளாளர் நிலைக்கு உயர்த்தப்படும் போப் 6ம் பால், 1963ஆம் ஆண்டு கத்தோலிக்கத் திருச்சபையின் 262வது போப் ஆண்டவராக பதவியேற்றார். 1964ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற நற்கருணை மாநாட்டில் பங்கேற்பதற்காக, இவர் இந்தியாவுக்கு வந்தார்.இந்தியா வந்த முதல் போப் ஆண்டவர் 6ம் பால் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கருக்கலைப்பு செய்வது கடவுளின் விருப்பத்துக்கு எதிரானது என்ற கத்தோலிக்கத் திருச்சபையின் போதனையை வலியுறுத்தி, 1968–ல் ‘மனித வாழ்வு’ என்ற சுற்று மடலை வெளியிட்டார். கிறிஸ்தவ சபைகளுக்கு இடையே ஒற்றுமை ஏற்படவும், உலகில் அமைதி நிலவவும் உழைத்தார். 15 ஆண்டுகள் கத்தோலிக்கர்களின் தலைவராக இருந்த போப் 6ம் பால், 1978ஆம் ஆண்டு காலமானார்.அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 2001ஆம் ஆண்டு கருவுற்றார். பனிக்குட நீர் உற்பத்தி ஆகாததால் குழந்தை பிழைக்க வாய்ப்பில்லை என்றும், அந்த கருவைக் கலைத்துவிடுமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். ஆனால் கன்னியாஸ்திரி ஒருவரின் ஆலோசனைப்படி, போப் 6ம் பாலிடம் அந்தப் பெண் வேண்டுதல் செய்தார்.

இதனையடுத்து அந்தக் கரு எந்த பிரச்சனையும் இல்லாமல் வளர்ச்சி அடைந்து, அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த சிறுவன் தற்போதும் நல்ல உடல் சுகத்தோடு இருக்கிறான். இயற்கையில் நிகழ முடியாத இந்த மருத்துவ அதிசயம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, போப் 6ம் பாலை அருளாளர் நிலைக்கு உயர்த்த போப் பிரான்சிஸ் ஒப்புதல் அளித்துள்ளார். போப் 6ம் பாலுக்கு அருளாளர் பட்டம் வழங்கும் விழா, வரும் அக்டோபர் 19ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி