அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!…

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!…

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!… post thumbnail image
புதுடெல்லி:-கூடங்குளத்தில் இரு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் முதலாவது அணு உலை செயல்படத் தொடங்கி மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சுந்தர்ராஜன் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

அதில் கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக இயங்குவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு மே மாதம் 15 விதி முறைகளை வழங்கியது, இந்த விதிமுறைகள் எவற்றையும் பின்பற்றாமல் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் செயல்படத் தொடங்கியுள்ளது. அங்கு பாதுகாப்பை ஆய்வு செய்ய புதிய குழுவை அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் முன்பு நடைபெற்று வந்தது.பூவுலகின் நண்பர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். அவர் வாதாடும்போது, புகுஷிமாவில் நிகழ்ந்தது போன்ற பேரிடர் கூடங்குளத்திலும் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளன.

அரசுத்தரப்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டிருக்கின்றன என்று உறுதி அளிக்கப்பட்டாலும் சுனாமி, நிலநடுக்கம் போன்ற பேரிடர்கள் ஏற்படும்போது அது மிகவும் பெரிய அளவில் அழிவுகளை ஏற்படுத்தும் அபாயம் கொண்டது.நாம் மிகவும் பெரிய டைம் பாம் மீது உட்கார்ந்து கொண்டிருக்கிறோம், அந்த குண்டு எப்போது வேண்டுமானாலும் வெடித்து பேரிழப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என்று கூறினார்.
இந்திய அணுசக்தி கழகத்தின் இயக்குனர் அஷோக் சவுகான், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றும், கூடங்குளம் திட்டத்தின் பாதுகாப்பு குறித்து எவ்விதமான அச்சமும் தேவையில்லை என்று தெரிவித்தார்.
அங்கு 90 சதவிகிதம் பணிகள் முடிவடைந்து விட்டன. உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்த அனைத்து வழிமுறைகளும் முறையாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது. பல வழிமுறைகள் அங்கு கடைப்பிடிக்கப்படவில்லை என்றும் இரண்டாம் தரமான பொருட்கள் அங்கு பயன்படுத்தப்பட்டுள்ளன என்ற சந்தேகம் இருப்பதாகவும் பிரசாந்த் பூஷன் வாதாடிய போது, அரசு தரப்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நீதிமன்றம் பரிந்துரைத்த வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றவா என்று கள ஆய்வு மேற்கொள்வதற்குத் தயாராக இருப்பதாக கூறப்பட்டது.

கூடங்குளத்தில் கைது செய்யப்பட்டு வழக்கு பதியப்பட்டுள்ளவர்கள் அனைவரும் அணு உலைக்கு எதிரான செயல்பாட்டாளர்களே என்றும் அவர்கள் எந்த வன்முறை செயல்களிலும் ஈடுபடவில்லை.அவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும், பிரசாந்த் பூஷன் கேட்டுக் கொண்டார். இதற்கு தமிழக அரசு சார்பில் போராட்டக்காரர்கள் மீது தொடுக்கப்பட்ட 349 வழக்குகளில் 248 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன என்றும், போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்ச்சேதம், பொருட்சேதம், பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தல், சட்டம் ஒழுங்கு சீர்குலைத்தல் ஆகியவற்றுக்குப் பொறுப்பான 101 நபர்களின் மீதான வழக்குகள் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும் அவர்களின் மீதான வழக்கை நீதிமன்றமே முடிவு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டது.கூடங்குளத்தில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை வாரியத்தின் முன்னாள் தலைவர் ஏ.கோபால கிருஷ்ணன் மற்றும் இந்திய அணுசக்தி வாரியத்தின் தலைவர் அசோக் சவுகான் ஆகியோரைக் கொண்ட குழுவை நீதிமன்றம் நியமிக்க வேண்டும் என்று பிரசாந்த் பூஷன் வாதாடினார்.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த மனுவின் மீதான தீர்ப்பை கடந்த 5ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.இன்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. பாதுகாப்பு தொடர்பான பூவுலகின் நண்பர்கள் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:–கூடங்குளம் பாதுகாப்பு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அளித்த 15 பாதுகாப்பு வழிமுறைகளில் பெரும்பாலானவற்றை பின்பற்றியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மற்ற வழிமுறைகளை நிறைவேற்ற அவகாசம் பிடிக்கலாம். எனவே இதில் புதிய வழிகாட்டுதல்கள் எதுவும் தேவையில்லை. மேலும் பாதுகாப்பை ஆய்வு செய்ய புதிய குழு அமைக்க தேவையில்லை என முடிவு செய்து மனுவை தள்ளுபடி செய்கிறோம்.இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி