செய்திகள்,திரையுலகம் நீ என் உயிரே (2014) திரை விமர்சனம்…

நீ என் உயிரே (2014) திரை விமர்சனம்…

நீ என் உயிரே (2014) திரை விமர்சனம்… post thumbnail image
நாயகன் நவரசன் கார் மெக்கானிக். ஒருநாள் நாயகி வைசாலி பழுதான தனது மொபைட்டை எடுத்துக் கொண்டு நாயகன் வேலை செய்யும் மெக்கானிக் ஷாப்பிற்கு வருகிறாள். அவளை பார்த்ததும் அவள் மீது காதல் வயப்படுகிறார் நாயகன். நாளடைவில் தனது காதலை அவளிடம் வெளிப்படுத்தி இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.

ஒருநாள் இவர்களுடைய காதல் நாயகியின் பெற்றோருக்கு தெரிந்துவிடுகிறது. அந்தஸ்தை காரணம் காட்டி இவர்களுடைய காதலுக்கு நாயகியின் அப்பா எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதனால் வீட்டை விட்டு வெளியேறி இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.தனிக்குடித்தனம் நடத்தும் இந்த காதல் ஜோடியின் திருமண வாழ்க்கை சந்தோஷமாக போய்க் கொண்டிருக்கிறது. இவர்களது காதல் திருமணத்திற்கு பரிசாக ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தையும் வளர்ந்து பள்ளிக்கு சென்று வருகிறாள். நாயகன் தன்னுடைய குழந்தையை எப்படியாவது டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என்ற கனவுடன் கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார்.

இந்நிலையில், ஒருநாள் ஷாப்பிங் செல்லும்போது இவருடைய மனைவி அங்கிருக்கும் நெக்லஸ் மீது பிரியப்படுகிறாள். அதை எப்படியாவது தனக்கு வாங்கித் தரும்படி கேட்கிறாள். ஆனால், நாயகனோ தன்னால் இப்போதைக்கு முடியாது என்று அவளை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வருகிறான்.ஆனால், நாயகிக்கோ அந்த நகையின் மீதிருந்த பிரியம் காதல் கணவன் தன் மீது வைத்துள்ள ஆசையை மறைத்துவிடுகிறது. இந்த நகைப் பிரச்சினை இருவருக்குள்ளும் சண்டையை ஏற்படுத்துகிறது.
ஒருபக்கம் நாயகி மீது அந்த ஏரியாவின் மிகப்பெரிய தாதா ஆசைப்படுகிறான். அவளை எப்படியாவது அடையவேண்டும் என்ற நினைப்பில் இருக்கிறான். நாயகியின் பேராசையைப் பற்றி அறியும் அவன் அதை வைத்து அவளை எப்படியாவது மடக்க நினைக்கிறான்.

இறுதியில், நாயகன் தனது மனைவி ஆசைப்பட்ட நகையை வாங்கிக் கொடுத்து அவளை திருப்திபடுத்தினாரா? இல்லை தாதாவின் வலையில் நாயகி விழுந்தாளா? நாயகியின் பேராசை அவளது குடும்பத்தை எந்தளவுக்கு ஆளாக்கியது? என்பதை சொல்லியிருக்கிறார்கள்.நாயகன் நவரசன், ஒரு மாஸ் ஹீரோவுக்குண்டான பில்டப்புடன் அறிமுகமானாலும், எதிரிகளை அடித்து துவம்சம் செய்யும் காட்சிகளில் இவர் சண்டை போடுவது சிரிப்பைத்தான் வரவழைக்கிறது. படத்திற்கு இவர்தான் திரைக்கதை, கதை எழுதியிருக்கிறார். தன்னை ஹீரோவாக காட்டிக் கொள்ளவேண்டும் என்பதற்காக படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களையெல்லாம் காமெடியாக்கி இருக்கிறார். படத்தின் இறுதிக் காட்சியில் குழந்தையுடன் இவர் அழுதுகொண்டே பேசும் காட்சி மட்டும் இவருடைய நடிப்பை பேசும்படியாக இருக்கிறது.

நாயகி வைசாலிக்கு பேராசைப் பிடித்த பெண் என்பதுபோன்ற கதாபாத்திரம். நாயகனுடன் இவர் கொஞ்சி பழகும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் கதை என்பதால் மற்ற கதாபாத்திரங்கள் அவ்வளவு வலுவாக இல்லை. நாயகனின் மகளாக நடித்திருக்கும் குழந்தை கடைசி காட்சியில் நம்மையும் கண்கலங்க வைத்திருக்கிறாள்.ஒரு பெண்ணுக்கு பேராசை வந்தால், அது அவளை மட்டும் பாதிப்பதில்லை. அவளது குடும்பத்தையும் பாதிக்கும் என்ற கருத்தை வலியுறுத்தி கதையாக உருவாக்கியிருக்கும் நவரசன் திரைக்கதையில் கொஞ்சம் கதையை தேற்றியிருக்கிறார்.
விகாஷ் லலித்ராஜாவின் இயக்கம் கொஞ்சம் மெச்சும்படியாக இருக்கிறது. கடைசி 15 நிமிட காட்சிகள் ஒரே அழுகையாக வைத்திருப்பது போரடிக்க வைக்கிறது. விஜய் மந்த்ராவின் இசையில் பாடல்கள் எதுவும் கேட்கும்படியாக இல்லை. பின்னணி இசையும் ஒரே இரைச்சலாக இருக்கிறது.

மொத்தத்தில் ‘நீ என் உயிரே’ பேராசையால் அழியும் குடும்ப வாழ்க்கை……

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி