செய்திகள்,விளையாட்டு ஐபிஎல்: இன்று சென்னை,மும்பை அணிகள் மோதல்…

ஐபிஎல்: இன்று சென்னை,மும்பை அணிகள் மோதல்…

ஐபிஎல்: இன்று சென்னை,மும்பை அணிகள் மோதல்… post thumbnail image
துபாய்:-7வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது.துபாயில் இன்று நடைபெறும் 13வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சும், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன.தொடக்க ஆட்டத்தில் பஞ்சாப்பிடம் 205 ரன்கள் குவித்தும் அதிர்ச்சி தோல்வி அடைந்த சென்னை அணி, பிறகு டெல்லியை 93 ரன்கள் வித்தியாசத்திலும், ராஜஸ்தானை 7 ரன் வித்தியாசத்திலும் வீழ்த்தி வெற்றிப்பாதைக்கு திரும்பியிருக்கிறது.

இதே சீற்றத்துடன் மும்பை இந்தியன்சையும் போட்டுத்தாக்கி ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்யும் ஆவலுடன் சென்னை வீரர்கள் ஆயத்தமாக உள்ளனர். கடந்த 5 நாட்களில் சென்னை அணி விளையாடப் போகும் 3-வது ஆட்டம் இதுவாகும்.நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களம் புகுந்த மும்பை அணி தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் 41 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் பெங்களூரிடம் 7 விக்கெட் வித்தியாசத்திலும் மண்டியிட்டது. பலம் வாய்ந்த சென்னைக்கு எதிரான ஆட்டமும் சுலபமாக இருக்காது என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர்.

மும்பை அணியில் அம்பத்தி ராயுடுவை தவிர மற்றவர்கள் பேட்டிங்கில் சோபிக்கவில்லை. குறிப்பாக மைக் ஹஸ்சி, கேப்டன் ரோகித் ஷர்மா, கீரன் பொல்லார்ட், கோரி ஆண்டர்சன் ஆகியோர் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனால் முதல் இரு ஆட்டங்களில் முறையே 122 ரன் மற்றும் 115 ரன்களில் சுருண்டு போய் விட்டது.
சென்னை அணியில் ரன் குவிக்கும் எந்திரமாக திகழ்ந்த மைக் ஹஸ்சி, முதல் முறையாக மும்பை அணிக்கு மாறினார். முதல் இரு ஆட்டத்தில் தாக்குப்பிடிக்காத அவர் தனது பழைய அணிக்கு எதிராக அவர் கூடுதல் பொறுப்புடன் விளையாட வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறார்.

5 நாட்கள் ஓய்வுக்கு பிறகு புத்துணர்ச்சியுடனும், புதிய திட்டங்களுடனும் அவர்கள் களம் காணுவதால், கடுமையான சவால் அளிப்பார்கள் என்று நம்பலாம். பந்து வீச்சில் அனுபவம் வாய்ந்த மலிங்காவும், ஜாகீர்கானும் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பந்து வீசுகிறார்கள்.ஆனால் ஹர்பஜன்சிங், பிரக்யான் ஓஜாவிடம் இருந்து இன்னும் முழு திறமை வெளியாகவில்லை. முதல் வெற்றிக்காக போராடும் மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னையை அடக்குமா அல்லது அடங்கி போகுமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும். இவ்விரு அணிகளும் இதுவரை 15 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 9-ல் மும்பையும், 6-ல் சென்னையும் வெற்றி பெற்றிருக்கின்றன.இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ் மற்றும் சோனி செட்மேக்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி