இந்நிலையில் மாயமான விமானத்தின் கறுப்பு பெட்டியிலிருந்து 4 முறை ‘பிங்’ சமிக்ஞைகள் வந்தன. இதையடுத்து அந்த இடத்தைச் சுற்றிலும் கறுப்பு பெட்டியை தேடும் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.கறுப்பு பெட்டியில் பொருத்தப்பட்டிருந்த பேட்டரியின் ஆயுள்காலம் ஒரு மாதம்தான். இந்நிலையில் கடந்த 8ம் தேதிக்கு பின்னர் ‘பிங்’ சமிக்ஞை ஒன்றுகூட வரவில்லை. எனவே பேட்டரி காலாவதியாகி விட்டது என்று நம்பப்படுகிறது.இதையடுத்து விமானத்தின் சிதைவுகளை தேடும் வேட்டையில் அதிநவீன நீர்மூழ்கி ‘ரோபோ’ நேற்று களமிறக்கப்பட்டது. இது ‘புளுபின்-21’ என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான இந்த ரோபோ, அதிநவீன கருவிகளையும், தொழில்நுட்பங்களையும் கொண்டதாகும்.இந்த ரோபோ, கடலுக்கு அடியில் 4,500 மீட்டர் ஆழத்தில் உள்ள தரைமட்டத்துக்கு சென்று விமானத்தின் சிதைவுகளை தேடி கண்டுபிடிக்கும்.
இதுகுறித்து பெர்த் நகரில் நேற்று நிருபர்களிடம் பேசிய ஆஸ்திரேலிய தேடல் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆங்கஸ் ஹூஸ்டன், “கடந்த 6 நாட்களில் ‘பிங்’ சிக்னல் ஏதும் வரவில்லை. எனவே இதுதான் கடலுக்கு அடியில் செல்வதற்கு சரியான தருணம் என கருதுகிறோம். இதற்கிடையே எண்ணெய் கசிவும் தென்பட்டுள்ளது. அதில் இருந்து 2 லிட்டர் அளவுக்கு சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது.அந்த எண்ணெய் பரவல், மாயமான விமானத்துக்கு உரியதா என்பது இனிதான் கண்டறியப்படவேண்டும்.
கடலுக்கு அடியில் நீர் மூழ்கி ‘ரோபோ’வை அனுப்பி தேடினாலும், விமானத்தின் சிதைவுகளை கண்டுபிடிக்க முடியாமலும் போகலாம். இது மெதுவாக, கடுமையான உழைப்புக்கு பின்தான் தெரிய வரும்.
நீர் மூழ்கி ‘ரோபோ’, கடலுக்கு அடியில் செல்வதற்கு 2 மணி நேரம் ஆகும். 16 மணி நேரம் அது அடிமட்டப்பகுதியை துழாவிப் பார்க்கும். அதைத் தொடர்ந்து 2 மணி நேரத்தில் மீண்டும் மேல் மட்டத்துக்கு வந்து விடும். அதன்பின்னர் அது சேகரித்த தகவல்களை பதிவிறக்கம் செய்ய மேலும் 4 மணி நேரம் ஆகும்.முதல் முறை 5 கி.மீ. முதல் 8 கி.மீ. பரப்பளவு வரை தேட முடியும். அடிமட்டத்தில் சேற்றுப்படிவுகள் இருக்கலாம். இது தேடலில் சில சிக்கல்களை ஏற்படுத்தலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி