செய்திகள் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் ரோபோ உதவியுடன் மீட்பு!…

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் ரோபோ உதவியுடன் மீட்பு!…

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் ரோபோ உதவியுடன் மீட்பு!… post thumbnail image
சங்கரன்கோவில்:-நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் குத்தாலப்பேரியை சேர்ந்தவர் கணேசன் (38). இவரது மனைவி தமிழ்செல்வி. இவர்களுக்கு 3 வயதில் ஹர்ஷன் என்ற மகனும், ஒரு வயதில் வைஷ்ணவி என்ற மகளும் உள்ளனர். கணேசன் சங்கரன்கோவில் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவருக்கு சொந்தமான தோட்டம் ஊருக்கு வடக்கே காட்டுப்பகுதியில் உள்ளது.தோட்டத்து கிணற்றில் போதிய தண்ணீர் இல்லாததால் கடந்த 4 நாட்களுக்கு முன்பு 400 அடி ஆழத்தில் கணேசன் புதிய போர் போட்டார். குழாயின் மேல் பொருத்த மூடி கிடைக்காததால் ஆழ்துளை கிணற்றை சாக்கால் மூடி வைத்திருந்தார்.

நேற்று காலை 9 மணிக்கு கணேசன் தோட்டத்திற்கு புறப்பட்டார். அப்போது மகன் ஹர்ஷன் தானும் வருவதாக அடம்பிடிக்கவே அவனையும் அழைத்துச் சென்றார். தோட்டத்தில் கணேசன் வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தார். தனியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஹர்ஷன் ஆழ்துளை கிணறு மூடியிருந்த சாக்கு கிழிந்து குழாய்க்குள் விழுந்து விட்டான்.ஆழ்துளை கிணற்றிலிருந்து மகனின் அழுகுரல் கேட்டதை அடுத்து கணேசன் போலீசுக்கு தகவல் கொடுத்தார். சங்கரன்கோவில் டவுன் போலீசார், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 3 ஜேசிபி இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு ஆழ்துளை கிணறு அருகே குழி தோண்டும் பணி நடந்தது. 108 ஆம்புலன்சும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது.சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை மருத்துவ குழுவினரும் முகாமிட்டிருந்தனர். ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுவன் 15 ஆடி ஆழத்தில் இருந்தான். வெளியில் இருந்து பேச்சு கொடுத்தால் அவனும் பதிலுக்கு பேசினான். சிறுவன் சோர்வடையாமல் இருக்க டியூப் மூலம் தண்ணீர் மற்றும் குளுக்கோஸ் ஊற்றப்பட்டது. மேலும் மூச்சுதிணறல் ஏற்படாமல் இருக்க ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது.

சம்பவ இடத்திற்கு நெல்லை கலெக்டர் கருணாகரன், எஸ்.பி. நரேந்திரன் நாயர் மற்றும் அதிகாரிகள் வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். மதியம் 1.30 மணியளவில் மதுரை மேலூரை சேர்ந்த டிவிஎஸ் ரோபோ மீட்பு குழுவினர் வந்து சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், சிறுவன் ரோபோ கருவியை தட்டி விட்டுக்கொண்டே இருந்ததால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. பின்னர் 3.50 மணியளவில் சிறுவன் ஹர்ஷன் ரோபோ கருவி மூலம் உயிருடன் மீட்கப்பட்டான்.சிறுவன் மேலே வந்ததும் அங்கு குழுமியிருந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். பின்னர், அவனை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் சிறுவன் நலமுடன் உள்ளதாக கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி