செய்திகள்,விளையாட்டு 20 ஓவர் உலக கோப்பை: நெதர்லாந்து மோசமான உலக சாதனை!…

20 ஓவர் உலக கோப்பை: நெதர்லாந்து மோசமான உலக சாதனை!…

20 ஓவர் உலக கோப்பை: நெதர்லாந்து மோசமான உலக சாதனை!… post thumbnail image
சிட்டகாங்:-வங்கதேசத்தில் ஐந்தாவது டுவென்டி–20 உலக கோப்பை தொடர் நடக்கிறது.நேற்றிரவு சிட்டகாங்கில் நடந்த (குரூப்1) லீக் ஆட்டம் ஒன்றில் வலுவான இலங்கை அணி, தகுதி சுற்றின் மூலம் முன்னேறிய நெதர்லாந்து அணியை சந்தித்தது.‘டாஸ்’ ஜெயித்த இலங்கை அணி கேப்டன் தினேஷ் சன்டிமால், நெதர்லாந்து அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக மைபர்க், ஸ்வார்ட் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் ரன் கணக்கை தொடங்காமல் ஆட்டம் இழந்தனர்.

அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 19 சிக்சர்கள் அடித்து உலக சாதனை படைத்த நெதர்லாந்து அணியினர், இந்த ஆட்டத்தில் இலங்கை அணியின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வந்தவேகத்தில் ஆட்டம் இழந்து நடையை கட்டினார்கள். டாம் கூபர் (16 ரன்) மட்டுமே இரட்டை இலக்க ரன்னை எட்டினார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினார்கள். இதில் 5 பேர் டக்–அவுட் ஆனதும் அடங்கும்.நெதர்லாந்து அணி 10.3 ஓவர்களில் 39 ரன்னில் சுருண்டது. இது சர்வதேச 20 ஓவர் போட்டியில் ஒரு அணி எடுத்த மிகவும் குறைந்தபட்ச ஸ்கோராகும். இதற்கு முன்பு 2013–ம் ஆண்டில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கென்யா 56 ரன்னில் ஆல்–அவுட் ஆனதே குறைந்தபட்ச ஸ்கோராக இருந்தது. 20 ஓவர் உலக கோப்பை வரலாற்றில் 2010–ம் ஆண்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அயர்லாந்து எடுத்த 68 ரன்களே குறைந்தபட்சமாக இருந்தது. இலங்கை அணி தரப்பில் அஜந்தா மென்டிஸ், மேத்யூஸ் தலா 3 விக்கெட்டும், மலிங்கா 2 விக்கெட்டும், குலசேகரா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 40 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆடிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் குசல் பெரேரா 14 ரன்னில் ஆட்டம் இழந்தார். இலங்கை அணி 5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 40 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றியை ருசித்தது. தில்ஷன் 12 ரன்னுடனும், மஹேலா ஜெயவர்த்தனே 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இலங்கை வீரர் மேத்யூஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி