அரசியல்,செய்திகள்,திரையுலகம் ‘ஐனசேனா’ என்ற பெயரில் புது கட்சி தொடங்கினார் ‘பவர் ஸ்டார்’!…

‘ஐனசேனா’ என்ற பெயரில் புது கட்சி தொடங்கினார் ‘பவர் ஸ்டார்’!…

‘ஐனசேனா’ என்ற பெயரில் புது கட்சி தொடங்கினார் ‘பவர் ஸ்டார்’!… post thumbnail image
திருமலை:-ஆந்திர மாநிலத்தில் தற்போது தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்துள்ளதால், காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், டிஆர்எஸ் என பல்வேறு கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் சிரஞ்சீவி தொடங்கிய பிரஜா ராஜ்ஜியம் கட்சியின் இளைஞரணி தலைவராக அவரது தம்பியும் நடிகருமான பவன் கல்யாணை நியமித்தார். பின்னர் பல்வேறு காரணங்களுக்காக பிரஜா ராஜ்ஜியம் கலைக்கப்பட்டு காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கப்பட்டது. இதையடுத்து சகோதரர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். இதனிடையில் பவன் கல்யாண் புதிய கட்சி தொடங்கப்போவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை ஜனசேனா என்ற பெயரில் கட்சி தொடங்க உள்ளதாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ததாகவும் தகவல் வெளியானது. மேலும் 14ம் தேதி பவன்கல்யாண் தனது கட்சி பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்போவதாக தெரிவித்திருந்தார்.அதன்படி ஐதராபாத்தில் நேற்று இரவு நடந்த பிரமாண்ட கூட்டத்தில் ஜன சேனா என்ற பெயரில் நடிகர் பவன் கல்யாண் புதிய கட்சியை தொடங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.அப்போது அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் கைகளை உயர்த்தி ஆரவாரம் செய்து புதிய கட்சிக்கு ஆதரவை தெரிவித்தனர். பொதுக்கூட்டத்தில் அவர் பேசும்போது, காங்கிரஸ் கட்சியை தவிர மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைப்பேன். ஆந்திர மக்களுக்கு நன்மை கிடைக்கும் வகையில் ஆதரவாளர்களுடன் கலந்து பேசி கூட்டணி குறித்து முடிவு செய்வேன் என்று பேசினார்.ஆந்திராவில் நடிகல் பவன்கல்யாண் புதிய கட்சி தொடங்கியிருப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பலர் இந்த கட்சியில் இணைவார்கள் என்று பரவலாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

புதிய கட்சி ஆரம்பித்த சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண், தன் 2 மணி நேர பேச்சில் காங்கிரசை தான் கடுமையாக தாக்கிப் பேசினார். ஆந்திராவை பிரித்து துண்டாடியதற்கு மத்திய அமைச்சர்கள் ஜெய்ராம் ரமேஷ், சிதம்பரம், அகமது படேல், ஷிண்டே தான் காரணம் என்றும் குற்றம்சாட்டினார். கட்சியை துவக்கிய பவன், கட்சியின் கொள்கை பற்றியோ திட்டங்கள் பற்றியோ எதுவும் குறிப்பிடவில்லை. அவர் பேச்சு ஒரு நடிகரின் பேச்சாக தான் இருந்தது. அரசியல்வாதியை போல முதிர்ச்சியின்றி பேசினார். அவர் பேச்சில் அள்ளிவிட்ட பஞ்ச் டயலாக்குகளுக்கு பஞ்சமில்லை. காங்கிரசை தொடர்ந்து அவர் தாக்கிப் பேசியதை பார்க்கும் போது, தன் அண்ணன் சிரஞ்சீவியை திட்டமிட்டு கட்சிக்குள் இழுத்து, பிரஜா ராஜ்ஜியம் கட்சியை கலைத்து விட்டதற்கு பழி வாங்கவே இப்படி ஒரு புது கட்சியை துவக்கியதை வெளிக்காட்டியது.

கடந்த தேர்தலுக்கு முன்பு பிரஜா ராஜ்ஜியத்தை ஆரம்பித்தார் சிரஞ்சீவி. அந்த கட்சியில் இளைஞர் அணி தலைவராக பவன் அமர்த்தப்பட்டார். தேர்தலில் கட்சி எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் தன் கட்சியை இணைத்துக்கொண்டார். அப்போது பவனுக்கு அறவே பிடிக்கவில்லை. எனினும் அண்ணன் எடுத்த முடிவுக்கு கட்டுப்பட்டு பேசாமல் இருந்து விட்டார். இவ்வளவு நாள் அமைதியாக இருந்து விட்டு இப்போது அவர் புது கட்சி ஆரம்பித்ததன் நோக்கம் பலருக்கு புரியாமல் இல்லை.கடந்த தேர்தலில் பிரஜா ராஜ்ஜியம் பிரித்த ஓட்டுக்களால் தான் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அந்த காங்கிரஸ் கட்சியுடன் ஐக்கியமாகி இப்போது ஆந்திராவையே பிரிக்க துணை போய் விட்டார் சிரஞ்சீவி. இந்த நிலையில் புதுகட்சியை பவன் ஆரம்பித்திருப்பது அரசியல் விமர்சகர்களால் எள்ளி நகையாடப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி