ஒரு துப்பறியும் படத்திற்கே உரிய நீட்டான திரைக்கதை. அமைதியாக ஆரம்பித்து, முதல் கொலை விழுந்தது முதல் பரபரப்பாகச் செல்கிறது. அதிக நடிகர் கூட்டம் இல்லாமல், முக்கிய பாத்திரத்தில் ஏழு பேர் மற்றும் துணைப்பாத்திரங்களாக இன்னும் ஏழுபேர் என சுருக்கமாக ஆட்களை நடிக்க வைத்திருப்பதே படத்திற்கு க்ரிப்பைக் கொடுக்கிறது.ஹீரோ அசோக் செல்வனுக்கு முதல் வேலைக்கான ஆஃபர் வர, சென்னை வருகிறார். அவர் வேலையில் சேரும் டிடெக்டிவ் நிறுவனத்தின் பாலிசிகளில் ஒன்று, ஃபாலோ செய்யப்படும் நபருடன் டைரக்ட் காண்டாக் வைக்கக்கூடாது என்பது. அதன்படியே நடக்கும் ஹீரோ, ஹீரோயின் விஷயத்தில் மட்டும் காதலால் பாலிசியை மீறுகிறார். அதுவரைக்கும் சாதாரணமாகச் செல்லும்படம், அதன்பின் நடக்கும் சம்பவங்களால் சூடு பிடிக்கிறது.
கொஞ்சம் நடிகர்கள் தான் என்பதால் மெயின் வில்லன் இவராகத் தான் இருப்பார் என இரண்டு பேரை கெஸ் பண்ண முடிகிறது. ஆனாலும் படம் முடிகையில் கொடுக்கும் ட்விஸ்ட், அருமை. ஒரு ஹாலிவுட் பட ஸ்டைலில் நகரும் படத்தில் மிஸ் ஆவது, பரபரப்பான ஆக்சன் சீகுவென்ஸ் தான். வெறுமனே புலனாய்வும், தேடுவதும் ஒரு கட்டத்திற்கு மேல் சலிப்பைக் கொடுக்கிறது. அதனால் தான் முதல்பாதியிலும் இரண்டாம்பாதியிலும் செமயான ஆக்சன் ஃபைட் அல்லது சேஸிங்கை ஹாலிவுட்டில் வைத்துவிடுவார்கள். ஆனால் அது இல்லாததால், ஹீரோ பெரிதாக ஒன்றுமே செய்யவில்லையோ என்று தோன்றிவிடுகிறது. வெறும் மைண்ட் கேம், படிக்க நன்றாக இருக்கலாம், விஷுவலுக்கு அது மட்டும் போதாதே!
இன்னொரு குறை, ஹீரோவையே ஓவர் டேக் பண்ணும் ஜெயப்ரகாஷ் கேரக்டர். பிறகு இயக்குநர் சுதாரித்து தனி ரூட்டில் ஹீரோவை துப்பறிய விட்டாலும் ஜெயப்ரகாஷ்க்கு முன் ஹீரோ பம்மிக்கொண்டு சப்பையாக தோன்றுவது, இத்தகைய த்ரில்லர் படங்களில் இருக்கக்கூடாத ஒரு விஷயம். ஹீரோவை சாமானியனாக காட்டியதைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், படம் விறுவிறுப்பாகச் செல்லும் நல்ல த்ரில்லர் தான். அதிலும் கடைசியில் சொதப்பாமல், லாஜிக்கலாக எல்லாக் கொலைகளுக்கும் காரணம் சொல்லி இருப்பது அருமை.
வில்லாவுக்கு அடுத்து தனி ஹீரோவாக இவருக்கு இரண்டாவது படம். அசோக் செல்வனுக்கு வில்லாவில் அடித்த பேய் இன்னும் தெளியவில்லை போல. எப்போதும் சீரியஸான ஆளாகவே வருகிறார். முகமே அப்படியா, அல்லது சீரியஸான கேரக்டர் என்று இயக்குநர் ரொம்ப மிரட்டி விட்டாரா என்று தெரியவில்லை. ஏ செண்டருக்கு இது போதும். பி அண்ட் சி செண்டரை ரீச் செய்ய வேண்டும் என்றால், இன்னும் இறங்கி அடிக்கணும் பாஸ்!
அவன் இவனில் நடித்து பின்னர் காணாமல் போன ஜனனிக்கு இது நல்ல ஒரு ரீ எண்ட்ரி. அவருக்கு ப்ளஸ்ஸே கண்கள்(மட்டும்?) தான். அதில் பலவித எக்ஸ்பிரசன்ஸ் காட்டி, நம்மைக் கவர்கிறார். அவருக்குத் தெரியாமலேயே ஹீரோ அவரைக் காப்பாற்ற முயல்வதால், த்ரில் ஏரியாவுக்குள் அவருக்கு பெரிதாக வேலையில்லை. காதல் போர்சன் மட்டும் என்பதால் கலர்ஃபுல்லாகவே வந்து போகிறார்.
மொத்தத்தில் ‘தெகிடி’ விறுவிறுப்பான படம்…..
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி