அடுத்த 4 மாதங்களுக்கு ரெயில்வே செலவினங்களுக்கு ஒப்புதல் பெறும் வகையில் இடைக்கால பட்ஜெட்டை கார்கே தாக்கல் செய்தார். ஆனால் தெலுங்கானா எதிர்ப்பு எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவரால் தொடர்ந்து பட்ஜெட்டை படிக்க முடியவில்லை.இதனால் அவர் பட்ஜெட்டை சபையில் தாக்கல் செய்து விட்டு அமர்ந்தார். இதையடுத்து சபாநாயகர் மீராகுமார் இடைக்கால ரெயில்வே பட்ஜெட் நிறைவேறியதாக அறிவித்தார்.ரெயில்வே பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் திட்டங்கள் விவரம் வருமாறு:–
நாடெங்கும் 72 புதிய ரெயில்கள் விடப்படும். இதில் 17 ரெயில்கள் கூடுதல் கட்டணம் செலுத்தும் பிரிமியம் ரெயில்களாக இருக்கும்.இதுதவிர 38 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் விடப்படும். 10 புதிய பாசஞ்சர் ரெயில்களும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
நாடெங்கும் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இந்த 72 புதிய ரெயில்கள் இயக்கப்படும்.தமிழ்நாட்டுக்கு 4 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கிடைத்துள்ளது. அந்த 4 விரைவு ரெயில்கள் வருமாறு:–
1. சென்னை–பெங்களூர் இடையே தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில்.
2. மன்னார்குடியில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு வாரந்திர எக்ஸ்பிரஸ் ரெயில்.
3. சென்னையில் இருந்து மும்பை வழியாக கர்நாடக மாநிலம் குல்பர்காபுக்கு புதிய வாரந்திர எக்ஸ்பிரஸ் ரெயில்.
4. நாகர்கோவிலில் இருந்து நாமக்கல் வழியாக ஆந்திராவில் உள்ள கச்சிகுடாவுக்கு வாரந்திர எக்ஸ்பிரஸ் ரெயில்.
பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு 3 பாசஞ்சர் ரெயில்கள் கிடைத்துள்ளது. அதன் விவரம் வருமாறு:–
1. மன்னார்குடியில் இருந்து மயிலாடுதுறைக்கு புதிய பாசஞ்சர் ரெயில்.
2. திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு புதிய பாசஞ்சர் ரெயில்.
3. கேரள மாநிலம் புனலூரில் இருந்து – கன்னியாகுமரிக்கு புதிய பாசஞ்சர் ரெயில்.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள 17 கூடுதல் கட்டணம் பிரிமியம் ரெயில்களில் 2 பிரிமியம் ரெயில்கள் தமிழ்நாட்டுக்கு கிடைத்துள்ளது.
அதில் ஒரு பிரிமியம் ரெயில் சென்னையில் இருந்து அசாம் மாநிலம் காமக்யா நகருக்கு இயக்கப்படும். இந்த ஏசி ரெயில் வாரந்திர ரெயிலாக ஓடும்.
மற்றொரு பிரிமியம் ரெயில் கேரள மாநிலம் தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து கோவை வழியாக கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு இயக்கப்படும். இந்த இரு பிரிமியம் ரெயில்களிலும் சீசனுக்கு ஏற்ப கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்த 9 புதிய ரெயில்கள் பட்ஜெட் மூலம் தமிழ்நாட்டுக்கு கிடைத்துள்ளது.
இடைக்கால பட்ஜெட் என்பதாலும், பாராளுமன்ற தேர்தல் வருவதாலும் பயணிகளை பாதிக்கும் வகையில் ரெயில் பயண கட்டண உயர்வு எதுவும் அறிவிக்கப்படவில்லை. அதற்கு பதில் அதிவேகம் கொண்ட ரெயில்களை அறிமுகம் செய்யப்படுகிறது.
வடகிழக்கு மாநிலங்களில் மேகாலயா முதன்முதலாக ரெயில் போக்குவரத்து பெற உள்ளது. அந்த மாநிலத்துக்கும் அருணாசல பிரதேச மாநிலத்துக்கும் இடையே புதிய ரெயில் பாதை போடப்படும்.
45566 கி.மீ. தூரத்துக்கு ரெயில் பாதை மின்மயம் ஆக்கப்பட்டுள்ளது. இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட 56 கி.மீ. தூரம் அதிகமாகும்.
ரெயில்வேயில் 6–வது நிதிக்கமிஷன் பரிந்துரைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் சரக்கு போக்குவரத்துக்கு தனி ரெயில் பாதை போடப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் ரெயிலின் பயண நேரம் பாதியாக குறைந்துள்ளது.
ரெயில் நில மேம்பாட்டு ஆணையம் மூலம் ரெயில்வேக்கு இதுவரை ரூ.937 கோடி கிடைத்துள்ளது. எனவே நடப்பு நிதியாண்டில் ரெயில் வருவாய் உபரியாக இருக்கும். எனவே பட்ஜெட்டில் பற்றாக்குறை இல்லை.இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி