செய்திகள்,முதன்மை செய்திகள் அந்தமானுக்கு சுற்றுலா சென்ற பயணிகள் படகு கவிழ்ந்து 32 பேர் பலி…

அந்தமானுக்கு சுற்றுலா சென்ற பயணிகள் படகு கவிழ்ந்து 32 பேர் பலி…

அந்தமானுக்கு சுற்றுலா சென்ற பயணிகள் படகு கவிழ்ந்து 32 பேர் பலி… post thumbnail image
காஞ்சிபுரம்:-காஞ்சிபுரம் அடுத்த கூரம் கிராமத்தை சேர்ந்தவர், குருசாமி செல்வராஜ், 64; ‘பூஜா டிராவல்ஸ்‘ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார் அவ்வப்போது, சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்வார்.

இம்மாதம், அந்தமான் நிகோபர் தீவுகளுக்கு, சுற்றுலா ஏற்பாடு செய்தார். காஞ்சிபுரம், பி.எஸ்.கே., தெரு, கவரை தெரு, எண்ணெய்காரத் தெரு, குமார் தெரு, மின் நகர் பகுதியைச் சேர்ந்த, 16 ஆண்கள், 13 பெண்கள், மூன்று குழந்தைகள் உட்பட 32 பேர், சுற்றுலாவிற்கு தயாராகினர்.அனைவரும், 23ம் தேதி, அதிகாலை காஞ்சிபுரத்தில் இருந்து வேனில், சென்னை விமான நிலையம் சென்றனர். அங்கிருந்து, காலை, 8:10 மணிக்கு, விமானத்தில் அந்தமான் புறப்பட்டு சென்றனர்.அவர்களுடன், மும்பையில் வசிக்கும், அவர்களின் உறவினர்கள், அந்தமானில் இணைந்து கொண்டனர்.அனைவரும் அந்தமான் பகுதியை சுற்றிப் பார்த்தனர். நேற்று காலை, அந்தமான் அருகே உள்ள, ராஸ் தீவு, நார்த் பே தீவு, வைப்பர் தீவு, அந்தமான் தலைநகர், போர்ட்பிளேர் ஆகிய இடங்களை சுற்றிப் பார்க்க, படகில் சென்றனர். படகில், சுற்றுலாப் பயணிகளை குழுவாக அழைத்து சென்ற, செல்வராஜ், 64, அவரது மகன் மணிகண்டன், 35, மருமகள் உஷா, 30, பேத்தி பூஜா, மகள் கீதா; மின்நகர் அடுத்த எஸ்.எஸ்.வி., நகரைச் சேர்ந்த, சுரேஷ்சா, 36, அவரது மனைவி நித்யாபாய்,26, மகள்கள் தர்ஷினி, 7, வினோதினி, 3, அவரது தாயார் சாந்தாபாய், 65, மாமியார் சாந்திபாய்; கவரை தெருவைச் சேர்ந்த மணி, 33, அவரது மனைவி உஷா, 30, மகள் பூஜா, 3; குமார் தெருவைச் சேர்ந்த தியாகராஜன், 60, அவரது மனைவி அனுராதா, 54, கணபதி, 64, உட்பட, 45 பேர் பயணம் செய்தனர். தீவுகளை சுற்றி பார்த்துவிட்டு, மாலை, 4:00 மணிக்கு ராஸ் தீவில் இருந்து நார்த் பே தீவுக்கு திரும்பினர்.நடுக்கடலில் சென்ற போது, திடீரென படகு கவிழ்ந்தது. அனைவரும் கடலில் விழுந்தனர். தகவல் அறிந்து மீட்பு படையினர் விரைந்து சென்று கடலில் தத்தளித்தவர்களை, மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இவ்விபத்தில், ஆறு குழந்தைகள் உட்பட, 32 பேர் இறந்தனர்; 13 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிக பயணிகளை ஏற்றிச் சென்றதால், பாரம் தாங்காமல், படகு கவிழ்ந்ததாக ஒரு தரப்பிலும், பாறை மீது மோதி, படகு கவிழ்ந்ததாக மற்றொரு தரப்பிலும் கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. நார்த் பே தீவுக்கு வரும் கடல் பாதையில், குறிப்பிட்ட பகுதியில் மட்டும் பாறைகள் கிடையாது. அந்த பகுதியை விட்டு பாறை உள்ள பகுதிக்கு படகு சென்றதால் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.விபத்தில் தப்பிய தியாகராஜன் என்பவர் கூறும்போது, ”விபத்து எப்படி நடந்தது என்பதே தெரியவில்லை. திடீரென படகு கவிழ்ந்து அனைவரும் தண்ணீரில் விழுந்தோம். எனக்கு எதுவும் புரியவில்லை,” என்றார்.நேற்று இரவு, 9:00 மணிக்கு கிடைத்த தகவலின்படி, காஞ்சிபுரத்தில் இருந்து சென்றவர்களில், இரண்டு குழந்தைகள் உட்பட, 15 பேர் மீட்கப்பட்டு, போர்ட்பிளேரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று கூறப்படுகிறது.

பிரதமர் அதிர்ச்சி:-அந்தமானில் நடந்த படகு விபத்தில், ?? பேர் இறந்தது குறித்து, பிரதமர், மன்மோகன் சிங், அதிர்ச்சியும், இரங்கலும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:அந்தமானில் நடந்த படகு விபத்தில், ?? பேர் இறந்த சம்பவம் குறித்து, பிரதமர் அதிர்ச்சி அடைந்து உள்ளார். உயிரிழந்தோருக்கு, ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளார். விபத்தில் சிக்கி, மாயமானவர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்படி, மத்திய அரசின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான தகவல்கள் அறிய…

அந்தமான் கட்டுப்பாட்டு அறை: 03192-240127,03192-238881
மருத்துவமனை : 03192-2030629

முதல்வர் ஜெயலலிதா நிவாரண உதவி:-அந்தமான், போர்ட் பிளேரில் உள்ள, பே ஐலண்ட் அருகில், தனியாருக்கு சொந்தமான சுற்றுலாப் படகு ஒன்று, கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இதில் பயணித்த, 45 பேரில், 33 பயணிகள் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள். இந்த, 45 பயணிகளில், 28 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பலர், காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள் என்ற செய்திகள் அறிந்து, மனவேதனை அடைந்துள்ளேன். இந்த செய்தி கிடைத்ததும், உடனடியாக தலைமைச் செயலரை தொடர்பு கொண்டு, விபத்துக்குள்ளான படகில் பயணித்த, தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் விவரங்கள் குறித்து, முழுத் தகவல்பெறுமாறும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் உத்தரவிட்டேன்.தமிழக அரசின் தலைமைச் செயலர், அந்தமான் யூனியன் பிரதேசத்தின், தலைமைச் செயலரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இருப்பினும், தமிழகத்தைச் சேர்ந்த எத்தனை பேர், இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்; எத்தனை பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்ற தகவல், இன்னும் அந்தமான் நிர்வாகத்திற்கு கிடைக்கவில்லை.

இச்சூழலில், தமிழக அரசின் வருவாய் நிர்வாக கமிஷனர் மற்றும் தமிழக அரசின் வருவாய் துறை செயலர் ஆகியோரை உடனடியாக, போர்ட் பிளேருக்கு செல்லுமாறும், மீட்கப்பட்டவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டுள்ளேன்.மேலும், மீட்கப்பட்டவர்களையும், உயர் சிகிச்சை தேவைப்படுபவர்களையும், உடனடியாக அரசு செலவில் விமானம் மூலம், சென்னைக்கு அனுப்பி வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளேன். இது மட்டுமின்றி, இறந்தவர்களின் உடல்களை, அரசு செலவில் சென்னைக்கு கொண்டு வந்து, அங்கிருந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டுள்ளேன்.

இந்த துயர விபத்தில் சம்பந்தப்பட்டவர்களின், உறவினர்கள், விபத்துக்குள்ளானவர்களின் விவரங்களை அறிந்து கொள்ள வசதியாக, வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில், ‘1070‘ என்ற தொலைபேசி உதவி எண் தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து, தலா, 1 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு, அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி