செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு மீண்டும் தோல்வி அடைந்தது இந்திய அணி…

மீண்டும் தோல்வி அடைந்தது இந்திய அணி…

மீண்டும் தோல்வி அடைந்தது இந்திய அணி… post thumbnail image
ஹேமில்டன்:-இந்தியா– நியூசிலாந்து அணிகள் மோதும் 2–வது ஒருநாள் போட்டி ஹேமில்டனில் இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கியது. இந்தப்போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. முதல் போட்டியில் விளையாடிய வீரர்களே இடம் பெற்றனர்.நியூசிலாந்து அணியில் ஒரே ஒரு மாற்றும் செய்யப்பட்டு இருந்தது. காயம் அடைந்த வேகப்பந்து வீரர் மிலினுக்கு பதிலாக மில்ஸ் இடம் பெற்றார். இந்திய அணி கேப்டன் டோனி ‘டாஸ்’ வென்று இந்த முறையும் நியூசிலாந்தை முதலில் விளையாட அழைத்தார்.

நியூசிலாந்தின் தொடக்க ஜோடியை முகமது ஷமி எளிதில் பிரித்தார். ரைடர் 20 ரன்னில் அவரது பந்தில் டோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 25 ஆக (5.2 ஓவர்) இருந்தது. 2–வது விக்கெட்டுக்காக குப்திலுடன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்திய பந்து வீச்சை விளாசி தள்ளியது.17–வது ஓவரில் நியூசிலாந்து 1 விக்கெட் இழப்புக்கு 98 ரன் எடுத்து இருந்தபோது மழையால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. மழைவிட்ட பிறகு ஆட்டம் தொடங்கிய சிறது நேரத்தில் குப்தில் விக்கெட்டை ரெய்னா கைப்பற்றினார். அவர் 65 பந்துகளில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 44 ரன்கள் எடுத்தார். அப்போது ஸ்கோர் 114 ஆக இருந்தது.

அடுத்து முன்னாள் கேப்டன் ரோஸ் டெய்லர் களம் வந்தார். வில்லியம்சன் தொடர்ந்து சிறப்பாக விளையாடி 52 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் அரை சதத்தை அடித்தார். நியூசிலாந்து அணி 33.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 170 ரன் குவித்து இருந்தபோது மீண்டும் மழையால் ஆட்டம் தடைபட்டது. வில்லியம்சன் 76 ரன்னும், டெய்லர் 26 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர். மழை நின்றதும் ஆட்டம் மீண்டும் தொடங்கியபோது, 42 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டது. மறுபடியும் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் வில்லியம்சன் 77 ரன்னில் ஆட்டம் இழந்தார்.அடுத்து வந்த கோரி ஆண்டர்சன் குறைந்த ஓவர்களே இருந்ததால் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார். பேட்டிங் பவர் பிளேயை சரியாக பயன்படுத்திய அவர் ஆண்டர்சன் 17 பந்தில் 2 பவுண்டரி, 5 சிக்சருடன் 44 ரன் எடுத்து வெளியேறினார். டெய்லர் 56 பந்தில் 57 ரன் (7 பவுண்டரி) எடுத்தார்.நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவரின் முடிவில் நியூசிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 271 ரன் குவித்தது. முகமது ஷமி 3 விக்கெட்டும், புவுனேஷ்வர் குமார், இஷாந்த்சர்மா, ஜடேஜா, ரெய்னா ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

மழையால் ஆட்டம் தடைபட்டு மீண்டும் தொடங்கியபோது 8.4 ஓவர்களில் 101 ரன்களை குவித்ததால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்திய அணிக்கு 42 ஓவரில் 297 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஒரு ஓவருக்கு 7.07 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்திய அணி ஆடியது. தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. தவான் 12 ரன்னில் சவுத்தி பந்தில் வெளியேறினார். அப்போது ஸ்கோர் 22 ஆக இருந்தது.2–வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மாவுடன் வீராட் கோலி ஜோடி சேர்ந்தார். சிறிது நேரத்தில் ரோகித் சர்மாவும் 20 ரண்களில் ஆட்டமிழந்தார். பின்னர் 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரஹானேவும் கோலியும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்து வந்தனர். எனினும் மேக்லெஹேனின் பந்துவீச்சில் ரஹானேவும் 36 ரண்களில் ஆட்டமிழந்தார்.

4வது விக்கெட்டுக்கு கோலியுடன் டோனி ஜோடி சேர்ந்தவுடன் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 65 பந்துகளில் 78 ரன்களை குவித்த கோலி ஆட்டத்தின் 30-வது ஓவரில் அவுட்டானார். பின்னர் வந்த ரெய்னாவும் அதிரடியாக 22 ரன்களில் 35 ரன்களை குவித்து அவுட்டானார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் 3 பந்துகளில் 20 தேவைப்பட்ட நிலையில் ஆட்டம் மீண்டும் மழையால் தடைபட்டது. எனினும் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 15 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தொல்வியடைந்ததாக நடுவர்கள் அறிவித்தனர்.நியூசிலாந்து அணியில் 77 ரண்களை குவித்த வில்லியம்சன் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். இத்தோல்வியின் மூலம் ஐ.சி.சியின் தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தை இந்தியா இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி