எம்.ஜி.ஆர்., சிவாஜி என்ற இரு மாபெரும் திரை ஜாம்பவான்களுக்கு மத்தியில் தனது கணீர் குரலாலும், நடிப்பாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். ஆலயமணி, காஞ்சித் தலைவன், பூம்புகார், சிவகங்கை சீமை, தெய்வப்பிறவி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற ராஜேந்திரனுக்கு தற்போது 86 வயதாகிறது. சென்னை ஆழ்வார்பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் ராஜேந்திரன்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்காக இவருக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்துள்ளது. இதனால் நேற்றுமுன்தினம் இரவு திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அவர் உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். சளி அதிகமாக இருந்ததால் அவரது உடல்நலம் குன்றியுள்ளதாகவும், தற்போது நன்கு குணமடைந்துள்ளதாகவும், இன்னும் இருதினங்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜேந்திரனை நடிகர்கள் சரத்குமார், ராதாரவி, நடிகை ராதிகா ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி