1930களின் ஆரம்பத்தில் சில ஆண்டுகளுக்கு இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் ஆதரவாளராக இருந்தார். சரிந்திருந்த நீதிக்கட்சியின் செல்வாக்கு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தால் மீண்டது. அக்டோபர் 29, 1939 அன்று ராஜகோபாலச்சாரியின் காங்கிரஸ் அரசு இந்திய மாநில அரசுகளைக் கலந்தாலோசிக்காமல் பிரிட்டன் இந்தியாவை இரண்டாம் உலகப் போரில் ஈடுபடுத்தியதால் பதவி விலகியது. சென்னை மாகாணம் ஆளுனரின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது. பிப்ரவரி 21, 1940 இல் ஆளுனர் எர்ஸ்கைன் கட்டாய இந்திக் கல்வி ஆணையைத் திரும்பப்பெற்றார்.
ஈ. வே. ராமசாமியின் தலைமையின் கீழ் நீதிக்கட்சி திராவிட நாடு கோரும் பிரிவினைக் கொள்கை கட்சியின் 14வது வருடாந்திர மாநாட்டில் பிரித்தானிய அரசின் இந்தியச் செயலரின் நேரடி மேற்பார்வையின் கீழ் தமிழருக்கென தனி நாடு உருவாக்கப்பட வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1939 இல் பெரியார் “தனி இறையாண்மையுடைய கூட்டாட்சிக் குடியரசாக” திராவிட நாடு உருவாக வேண்டுமென்று திராவிட நாடு மாநாடொன்றைக் கூட்டினார். 1938 முதல் “தமிழருக்கென தனித் தமிழ்நாடு” கோரி வந்த அவர், டிசம்பர் 17, 1939 இல் “திராவிடருக்கென தனி திராவிட நாடு” என்ற முழக்கத்தை முன்வைத்தார்.
பிரித்தானிய அரசின் போர் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வண்ணம் ஆகஸ்ட் 10, 1941 இல் ஈ. வே. ராமசாமி திராவிடநாடு போராட்டத்தைக் கைவிட்டார். கிரிப்சின் தூதுக்குழு இந்தியா வந்த போது, ராமசாமி, டபிள்யூ. பி. ஏ. சௌந்திரபாண்டியன் நாடார், என். ஆர். சாமியப்ப முதலியார், முத்தையா செட்டியார் ஆகியோர் அடங்கிய நீதிக்கட்சி தூதுக்குழு மார்ச் 30, 1942 இல் கிரிப்சை சந்தித்து திராவிட நாடு கோரியது. ஆனால் கிரிப்சு ஒரு சட்டமன்றத் தீர்மானம் அல்லது பொது வாக்கெடுப்பின் மூலமாக மட்டுமே பிரிவினை சாத்தியம் என்று கூறி விட்டார். இக்காலகட்டத்தில் இரு முறை (1940 மற்றும் 42 இல்) ஈ. வே. ராமசாமி தலைமையில் காங்கிரஸ் ஆதரவுடன் நீதிக்கட்சி அரசு அமைய வாய்ப்பு உருவானது. ஆனால் இரு முறையும் ராமசாமி அரசமைக்க மறுத்துவிட்டார்.
திராவிடர் கழகமாக மாற்றம்:-
பெரியார் ஈ. வே. ராமசாமி நீதிக்கட்சியினைத் தேர்தல் அரசியலிலிருந்து விலக்கிக் கொண்டார். அவரது தலைமையில் அது சமூக சீர்திருத்த அமைப்பாக மட்டும் செயல்பட்டது. “சமூக சுயமரியாதையை அடைந்து விட்டால், அரசியல் சுய மரியாதைத் தானாகக் கிட்டி விடும்” என்பது அவரது வாதமாக இருந்தது. பெரியாரின் ஆதிக்கத்தால் நீதிக்கட்சி பிராமண எதிர்ப்பு, இந்து சமய எதிர்ப்பு மற்றும் இறைமறுப்பு கொள்கைகளைப் பின்பற்றத் தொடங்கியது. 1942-44 காலகட்டத்தில் இந்து சமய நூல்களான பெரியபுராணம் மற்றும் கம்பராமாயணம் இரண்டையும் நீதிக்கட்சியினர் கடுமையாகச் சாடினர். இதனால் இந்தி எதிர்ப்புக்காக நீதிக்கட்சியுடன் கைகோர்த்திருந்த சைவத் தமிழறிஞர்கள் தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டனர். அதுவரை மாணவர்களிடையே பெரிதாக செல்வாக்கு பெற்றிராத நீதிக்கட்சி கா. ந. அண்ணாதுரையின் முயற்சிகளால் மாணவர் ஆதரவைப் பெறலாயிற்று.
ஆனால் ஈ. வே. ராமசாமியின் தலைமையில் ஏற்பட்ட பெரும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளாத சில தலைவர்கள் கட்சியில் ஒரு போட்டிக் குழுவை உருவாக்கி அவரைத் தலைவர் பதவியிலிருந்து இறக்க முயன்றனர். இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தோர் – பி. பாலசுப்பிரமணியன் (சண்டே அப்சேர்வர் இதழின் ஆசிரியர்), ஆர். கே. சண்முகம் செட்டியார், பி. டி. ராஜன், ஏ. பி. பாட்ரோ, சி. எல். நரசிம்ம முதலியார், தாமோதரன் நாயுடு மற்றும் கே. சி. சுப்ரமணிய செட்டியார். டிசம்பர் 27, 1943 இல் கட்சியின் செயற்குழுவைக் கூட்டிய பெரியார் எதிர்ப்பு குழு 1940 க்குப் பின் அவர் கட்சி மாநாட்டை நடத்துவதில்லையென்று குற்றம் சாட்டியது. அவர்களது விமர்சனத்தை எதிர்கொள்ள ஈ. வே. ராமசாமி கட்சியின் வருடாந்திர மாநாட்டைக் கூட்டினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி