செய்திகள்,முதன்மை செய்திகள் இறந்தவர் கணக்கில் இருந்து 50 லட்சம் எடுத்த வங்கி அதிகாரி கைது…

இறந்தவர் கணக்கில் இருந்து 50 லட்சம் எடுத்த வங்கி அதிகாரி கைது…

இறந்தவர் கணக்கில் இருந்து 50 லட்சம் எடுத்த வங்கி அதிகாரி கைது… post thumbnail image
மும்பை:-சண்டிகரைச் சேர்ந்த கோபிந்த் கவுர் என்பவர் இங்கிலாந்தில் வாழ்ந்து வந்தார். அவருக்கு இந்தியாவில் ஐசிஐசிஐ வங்கிக் கிளையில் சேமிப்பு கணக்கு இருந்துள்ளது.

மும்பையில் உள்ள ஐசிஐசிஐ வங்கியின் தாதர் கிளையில் கடந்த இரண்டரை வருடங்களாக வாடிக்கையாளர் சேவை மேலாளராக மகேந்திர கவுரவ்(32) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடன்கள் இருந்ததினால் அவற்றை திருப்பி செலுத்த குறுக்கு வழியில் பணம் புரட்ட நினைத்தார். அப்போது வங்கியில் தொடர்ந்து செயல்படாமல் இருக்கும் சேமிப்புக் கணக்கிலிருந்து பணத்தை எடுக்கலாம் என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியது. இதற்குத் துணையாக தன்னுடைய நண்பர் ராஜேஷ்குமார்(39) மற்றும் அவரது நண்பர் பல்லு கேட் என்கிற சந்தீப் கேல்( 32) ஆகியோரை சேர்த்துக்கொண்டார். இவர்கள் போலியான ஒரு வங்கிக் கணக்கையும் தொடங்கினர்.

கோபிந்த் கவுரின் மாதிரிக் கையெழுத்தை வங்கியிலிருந்து பெற்ற மகேந்திர கவுரவ் அக்கையெழுத்தை உபயோகித்து அவருடைய வங்கிக் கணக்கிலிருந்த பணத்தை எடுக்க ஆரம்பித்தார். இதுபோல் ரூ.49.28 லட்சத்தை போலியான கணக்கில் சேர்ப்பித்து அதில் பெரும்பாலான பணத்தை எடுத்தும் விட்டார். வங்கியின் உள்விசாரணைக் குழு இந்த வங்கிக்கணக்கின் செயல்பாடுகள் மீது சந்தேகம் கொண்டதில் சண்டிகரின் வங்கிக்கிளை கோபிந்த் கவுரின் மகனைத் தொடர்பு கொண்டு கணக்கை சரிபார்த்துக் கொள்ளுமாறு கூறியது. அப்போதுதான் கோபிந்த் கவுர் கடந்த டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி இறந்துவிட்டது தெரிய வந்துள்ளது.

இந்த ஆண்டு ஒன்றாம் தேதியன்று இந்த கையாடல் குறித்த தகவல் தாதர் கிளையின் துணை மேலாளரான ரேகா லடுக்குத் தெரிவிக்கப்பட்டது. சோதனைகளுக்குப் பின்னர் இதனை உறுதி செய்துகொண்ட வங்கி நிர்வாகம் காவல்துறையிடம் புகார் அளித்தது. மாதுங்கா காவல்துறையினர் இந்த மூவரையும் கைது செய்து 10 ஆம் தேதி வரை காவலில் வைத்துள்ளனர்.

இவர்கள் கையாடல் செய்த பணத்தில் ரூ.15.5 லட்சம் ரொக்கமும், ரூ.11 லட்சம் இருப்புடன் கூடிய ஒரு வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட வங்கி நிர்வாகி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நல்ல சம்பளத்தில் இருந்தபோதும் கடன்களை அடைப்பதற்காக அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு மோசடியில் இறங்கிய மகேந்திர கவுரவ் மற்றும் அவரது கூட்டாளிகள் இருவர் மீதும் நம்பிக்கை துரோகம், மோசடி, ஏமாற்று போன்ற பிரிவுகளில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி