தங்கராஜ் கடந்த 28 ஆம் தேதி வெண்டைக்காய் பறிப்பதற்காக தாய் ஞானரதியை அழைத்துச் சென்றார். பின்னர் இரவு வெகுநேரம் ஆகியும் ஞானரதி வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதுபற்றி ராஜமணி, தங்கராஜிடம் கேட்டார். அதற்கு தங்கராஜ், தனக்கு தெரியாது என்று கூறி விட்டார்.
இதையடுத்து ராஜமணி பணகுடி காவல்நிலையத்தில், தன்னுடைய மனைவியை காணவில்லை என்று புகார் செய்தார். காவல்துறை ஆய்வாளர் தாம்சன் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி ஞானரதியை தேடி வந்தார். இதற்கிடையே 2 நாட்களாக தங்கராஜையும் காணவில்லை. இதையடுத்து காவல்துறையினரின் சந்தேக பார்வை தங்கராஜ் மீது திரும்பியது.
இந்நிலையில் பணகுடி வருவாய் ஆய்வாளர் மாணிக்கவாசகத்திடம், தங்கராஜ் நேற்று சரண் அடைந்தார். உடனே அவர் பணகுடி காவல்நிலையத்தில் தங்கராஜை ஒப்படைத்தார். தங்கராஜிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தன்னுடைய தாயை தானே கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து தங்கராஜ் கைது செய்யப்பட்டார்.
காவல்துறையினரிடம் தங்கராஜ் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:
“கடந்த 28 ஆம் தேதி தோட்டத்தில் வெண்டைக்காய் பறிப்பதற்காக என்னுடைய தாயை அழைத்துச் சென்றேன். அப்போது, சொத்தை பிரித்து கொடுத்தால் தற்போது அடமானம் பெற்று விவசாயம் செய்து வரும் நிலத்தை விலைக்கு வாங்கிக் கொள்வேன் என்று கூறினேன். அதற்கு எனது தாயார் இப்போது சொத்தை பிரித்துக் கொடுக்க முடியாது என்று கூறினார். அப்போது எங்கள் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.
வாய்த்தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த நான் கையில் வைத்து இருந்த மண்வெட்டி கம்பால் என்னுடைய தாயின் தலையில் ஓங்கி அடித்தேன். அதில் அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனே பயந்து போன நான், அவருடைய முகத்தில் தண்ணீர் தெளித்து பார்த்தேன். அவர் எழுந்திருக்கவே இல்லை. மூக்கில் விரல் வைத்து பார்த்தேன். அப்போது தான் அவர் இறந்து விட்டது தெரிய வந்தது. என்ன செய்வது என்பது தெரியாமல் திகைத்தேன்.
தாயை, கொலை செய்தது தெரிய வந்தால் காவல்துறையினர் நம்மை கைது செய்து விடுவார்கள். எனவே கொலையை எப்படி மறைப்பது என்று யோசிக்க தொடங்கினேன். அப்போது தான், கொள்ளையர்கள் கொலை செய்து விட்டு நகைகளை பறித்துச் சென்றது போல் செய்துவிட முடிவு செய்தேன். என்னுடைய தாய் அணிந்து இருந்த 12 பவுன் தங்க தாலிச்சங்கிலி, ஒரு பவுன் கம்மல் போன்றவற்றை கழட்டினேன். பின்னர் வெண்டைக்காய் பறிப்பதற்காக எடுத்துச் சென்ற சாக்கில் உடலை கட்டினேன்.
சாக்குமூடையை மோட்டார் சைக்கிளில் எடுத்துச் கொண்டு காட்டுப்பாதை வழியாக சென்றேன். அஞ்சுகிராமம் அருகே நான்கு வழிச்சாலையில் பால்குளத்தின் ஓரத்தில் உள்ள முட்புதரில் சாக்குமூடையை வீசி விட்டு ஊருக்கு வந்து விட்டேன். அதன்பிறகு ஒன்றும் தெரியாதது போல் இருந்து கொண்டேன்.
என்னுடைய தந்தை, அம்மாவை எங்கே என்று கேட்டார். நான் எனக்கு தெரியாது என்று பதில் கூறி விட்டேன். அதன் பிறகு என் தந்தை காவல்நிலையத்தில் மனைவியைக் காணவில்லை எனப் புகார் செய்தார். அப்போது நான் தான், என்னுடைய தாயை அழைத்துச் சென்றதையும் அவர் காவல்துறையினரிடம் கூறி விட்டார். எனவே பயந்து போய் தலைமறைவானேன். எனினும் எப்படியும் என்னைக் காவல்துறையினர் கண்டுபிடித்து விடுவார்கள் என்று பயந்து நானே சரணடைந்து விட்டேன்.”இவ்வாறு தங்கராஜ் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி