ஹோம் ரூல் இயக்கத்துடன் மோதல்:-
1916ம் ஆண்டு பிரம்ம ஞான (தியோசோபிகல்) சங்கத்தின் தலைவியான அன்னி பெசண்ட், ஹோம் ரூல் லீகினை உருவாக்கி இந்திய விடுதலை இயக்கத்தில் ஈடுபடலானார். அவரது செயல்பாடுகள் சென்னையை மையமாகக் கொண்டிருந்தன. அவருடைய் அரசியல் ஆதரவாளர்களில் பலர் பிராமணர்கள். அவர் இந்தியாவை ஒரே மாதிரியான சமய, மெய்யியல், பண்பாட்டுக் கூறுகளையும் ஒரு சாதி அமைப்பினையும் கொண்டிருக்கும் ஒன்றுபட்ட அமைப்பாகக் கருதினார். இந்தியப் பண்பாடு குறித்து அவரது கருத்துகளுக்கு புராணங்களும், மனுதர்மமும் வேதங்களும் அடிப்படையாக இருந்தன. சென்னை மாகாணத்தில் ஹோம் ரூல் இயக்கத்துக்கும் பிராமணரல்லாதோர் இயக்கத்துக்கும் மோதல் உருவானது.
ஹோம் ரூல் இயக்கம் துவக்கப்படும் முன்னரே டி. எம். நாயருக்கும் அன்னி பெசண்ட்டுக்குமிடையே உரசல் ஏற்பட்டிருந்தது. நாயர் தனது மருத்துவ ஆய்விதழ் ஆண்டிசெப்ட்டிக் இல் பிரம்மஞானத் தலைவர் சார்லஸ் லெட்பெட்டரின் பாலுறவுப் பழக்கங்களைத் தாக்கி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதனைக் கண்டித்து நாயருக்கு எதிராக பெசண்ட் தொடர்ந்த மான நஷ்ட வழக்கு தோல்வியடைந்திருந்தது.
பெசண்ட் பிராமணர்களுடன் கொண்டிருந்த நட்புறவும், அவரது இந்தியா குறித்த பார்வை பார்ப்பனிய கருத்துகளின் அடிப்படையில் அமைந்திருந்ததும் அவருக்கும் நீதிக்கட்சிக்குமிடையே மோதலை உருவாக்கியது. டிசம்பர் 1916 இல் வெளியான நீதிக்கட்சி கொள்கை அறிக்கையில் ஹோம் ரூல் இயக்கத்திற்கு எதிரான கருத்துகள் இடம் பெற்றிருந்தன. பெசண்டின் நியூ இந்தியா இதழ் அந்த அறிக்கையை விமர்சித்தது. ஹோம் ரூல் இயக்கத்தை எதிர்த்த நீதிக்கட்சி, தனது இதழ்களில் பெசண்ட்டை “அயர்லாந்து பாப்பாத்தி” என்று வருணித்து நீதிக்கட்சி இதழ்கள் செய்திகள் வெளியிட்டன. திராவிட இதழில் “ஹோம் ரூல் என்பது பிராமணர்களின் ஆட்சி” என்ற தலைப்பில் செய்தி வெளியானது. இச்செய்திகளும் கட்டுரைகளும் பின்பு தொகுக்கப்பட்டு “அன்னி பெசண்ட்டின் படிவளர்ச்சி” என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தன. ஹோம் ரூல் இயக்கமானது அரசின் கெடுபிடிகளின் பாதிப்பில்லாத வெள்ளைப் பெண்மணியால் நடத்தப்படும் அரசியல் இயக்கம் என்றும் அதன் விளைவுகள் பிராமணர்களுக்கே சாதகமாக அமையும் என்றும் நாயர் விமர்சித்தார்.
வகுப்புவாரி பிரதிநிதித்துவக் கோரிக்கை:-
20 ஆகஸ்ட் 1917 இல் இங்கிலாந்து அரசின் இந்தியச் செயலர் எட்வின் மொண்டேகு இந்தியாவின் நிர்வாகத்தில் இந்தியரின் பங்கை அதிகரிக்கவும் உள்ளாட்சி அமைப்புகளை வளர்க்கவும் சில அரசியல் சீர்திருத்தங்களை அறிவித்தார். இவ்வறிவிப்பு சென்னை மாகாணத்தின் பிராமணரல்லாத தலைவர்களிடையே பிளவை ஏற்படுத்தியது. ஆகஸ்ட் இறுதியில் நீதிக்கட்சி தனது கோரிக்கைகளை முன்வைத்து பல மாநாடுகளை நடத்தியது. 1909 இல் முசுலிம்களுக்கு வழங்கப்பட்டது போலவே பிராமணரல்லாதோருக்கும் மாகாண சட்டமன்றங்களில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வழங்கும்படி தியாகராய செட்டி மொண்டேகுவுக்கு தந்தி அனுப்பினார். காங்கிரசின் பிராமணரல்லாத தலைவர்கள் நீதிக்கட்சிக்குப் போட்டியாக சென்னை மாகாண சங்கம் ஒன்றை உருவாக்கினர். பெரியார் ஈ. வே. ராமசாமி, கல்யாணசுந்தரம் முதலியார், பெ. வரதராஜுலு நாயுடு, கூட்டி கேசவ பிள்ளை ஆகியோர் இச்சங்கத்தின் தலைவர்கள். இச்சங்கத்துக்கு காங்கிரசின் பிராமணர்கள் மற்றும் தி இந்து இதழின் ஆதரவு இருந்ததால், பிராமணர்களின் கைக்கூலியாக இச்சங்கம் செயல்படுவதாக நீதிக்கட்சி குற்றம் சாட்டியது.
தொடரும் …
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி