செய்திகள்,முதன்மை செய்திகள் கடல் நடுவில் பரபரப்பு …

கடல் நடுவில் பரபரப்பு …

கடல் நடுவில் பரபரப்பு … post thumbnail image

நடுப்பாலத்தில் நின்ற சேது எக்ஸ்பிரஸ்:-

ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு இரவு 8 மணிக்குப் புறப்பட்ட சேது எக்ஸ்பிரஸ் ரெயில் 600–க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றது. இரவு 8.20 மணிக்கு பாம்பன் ரெயில் பாலத்தின் மையப்பகுதியில் சென்றபோது பயணி ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் நடுப்பாலத்தில் ரெயில் நின்றது.

இதையடுத்து இருளில் என்ஜின் டிரைவர் செய்வதறியாமல் திகைத்தார். ரெயில் நிலையத்துக்கு தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. சுமார் 20 நிமிடம் ரெயில் பாலத்தின் நடுவில் நின்றதால் பயணிகள் அனைவரும் அச்சத்துடன் சத்தம் போட்டனர். அப்போது ரெயில்வே போலீஸ்காரர் ஆரோக்கியசாமி சிரமத்துடன் ரெயில் என்ஜின் பகுதிக்கு சென்று டிரைவரிடம் விசாரித்தார்.

ரெயிலின் 2–வது பெட்டியில் இருந்து அபாயச் சங்கிலி இழுக்கப்பட்டு இருப்பதாக போலீஸ்காரரிடம் என்ஜின் டிரைவர் தெரிவித்தார். இதையடுத்து அங்கிருந்து ரெயிலில் இருந்த 2–வது பெட்டிக்கு போலீஸ் டிரைவர் ஆரோக்கியசாமி சென்றார்.

அந்த பெட்டியில் இருந்து அபாய சங்கிலியை பிடித்து இழுத்தது யார்? என்று விசாரித்ததில் கடலூர் மாவட்டம் மதுக்கூரை சேர்ந்த கல்லூரி மாணவர் ஆரோக்கிய சுரேஷ் என்பவர் தான் சங்கிலியை பிடித்து இழுத்தவர் என்பது தெரியவந்தது. ரெயிலை நிறுத்தியது ஏன்? என்று கேட்டு அவரிடம் விசாரித்ததில், கழிவறைக்கு சென்றபோது கையில் இருந்த மோதிரம் தவறி கீழே விழுந்து விட்டது. அதனால் அபாயச் சங்கியை பிடித்து இழுத்ததாக தெரிவித்தார்.

பின்னர் அபாய சங்கிலி சரிசெய்யப்பட்டு 20 நிமிடத்துக்கு பிறகு ரெயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. மாணவர் ஆரோக்கிய சுரேஷ் மானாமதுரையில் உள்ள ரெயில்வே போலீஸ்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அங்கு அவரை எச்சரிக்கை செய்த போலீசார் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அனுப்பி வைத்தனர்.

பாம்பன் ரெயில் பாலத்தில் ரெயிலை நிறுத்தக்கூடாது என்ற எச்சரிக்கை உள்ள நிலையில் பாலத்தின் மையப்பகுதியில் ரெயில் நின்றதால் ரெயில்வே அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி