அரசியல்,முதன்மை செய்திகள் திகார் சிறையிலிருந்து ஆ.ராசா விடுதலையாகிறார்

திகார் சிறையிலிருந்து ஆ.ராசா விடுதலையாகிறார்

DMK minister 2g Spectrum Rasa

காணொளி:-

2ஜி ஊழல் வழக்கில் இன்று வரை சிறையில் இருக்கும் முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவுக்கு இன்று ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து திகார் சிறையிலிருந்து அவர் விடுதலையாகிறார். 2ஜி ஊழல் வழக்கில் ஆ.ராசா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திமுக எம்.பி. கனிமொழி உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டு திகாரில் அடைக்கப்பட்டு அவர்களில் 12 பேர் ஜாமீனில் விடுதலையாகி வெளியே உள்ளனர்.

சமீபத்தில் இந்த வழக்கில் கைதான முன்னாள் தொலைத்தொடர்புத் துறை செயலாளர் சித்தார்த் பெகுரா ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகினார். அவரது வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 9ம் தேதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. பெகுராவுக்கு ஜாமீ்ன் கிடைத்ததையடுத்து தனக்கும் ஜாமீன் கோரி டெல்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ராசா மனு தாக்கல் செய்தார். தனது மனுவில், நான் நிரபராதி, என் மீது பொய்யான வழக்கை சிபிஐ பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுவிட்டதால், என்னையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார் ராஜா.

ராசாவுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று கூறி சிபிஐ பதில் மனு தாக்கல் செய்தது.ராசா தரப்பில் வழக்கறிஞர் ரமேஷ் குப்தாவும், சி.பி.ஐ. தரப்பில் வழக்கறிஞர் பி.பி.சிங்கும் வாதிட்டனர். ராசா தரப்பில் வாதாடிய குப்தா கூறுகையில், பெகுரா மீது என்னென்ன பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதோ அதே பிரிவுகளின் கீழ் தான் ராசா மீதும் வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வழக்கில் பெகுராவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதால், ராசாவுக்கும் ஜாமீன் வழங்க வேண்டும். மேலும் வழக்கின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் விசாரணைக் காலம் முழுவதும் ஒருவர் சிறையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார், ஆனால் ராசா முதல் குற்றவாளி என்று சுட்டிக்காட்டி சி.பி.ஐ. ஜாமீன் வழங்க எதிர்ப்புத் தெரிவித்தது. மேலும் சிபிஐ வழக்கறிஞர் சிங் வாதாடுகையில், 2ஜி விவகாரத்தில் ராசாவுக்கும் அவர் சார்ந்தவர்களுக்கும் சுமார் ரூ. 200 கோடி வரை லஞ்சம் தரப்பட்டுள்ளது. மொரீசியஸ் நாட்டில் உள்ள டெல்பி இன்வஸ்ட்மென்ட் என்ற நிறுவனத்தில் ராசாவுக்காக ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனம் தனது பங்குகளை மாற்றித் தந்துள்ளது. மத்திய அமைச்சராக இருந்து அதிகாரம் பெற்றரவராக இருந்ததால் இவர் சாட்சிகளை கலைக்கும் அபாயம் உள்ளது அதனால் இவருக்கு ஜாமின் வழங்க கூடாது என்றார்.

இதற்கு பதிலளித்த ராசாவின் வழக்கறிஞர் குப்தா, ராசா மீதான குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு விட்டது. குற்றப்பத்திரிகையும் வழங்கப்பட்டு விட்டது. எனவே ராசாவால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. மேலும் கோர்ட்டின் எந்த நிபந்தனையும் அவர் ஏற்க தயாராக உள்ளார். ஆயள் தண்டனை பெறும் அளவிற்கு குற்றம் புரிந்தவர்களுக்கும், கைதிகளுக்கு ஜாமீன் வழங்கலாம் என்பது சட்டத்தில் இடம் இருக்கிறது. ஒரு அமைசசராக இருந்திருப்பதால் இவர் நாட்டை விட்டு ஓடுவார் என சந்தேகிக்க முடியாது. சட்டப்பூர்வ விசாரணைக்கு தொடர்ந்து அவர் ஒத்துழைப்பு வழங்குவார் என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை 15ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இன்று கோர்ட்டுக்கு நீதிபதி சைனி வந்ததும் முதலில் சாட்சிகளிடம் விசாரணை நடந்தது. விசாரணை முடிந்ததும் ஆ.ராசாவிற்கு ரூ.20 லட்சம் சொந்த உத்தரவாத அடிப்படையில் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். ராசாவை இன்னும் சிறையில் வைத்திருப்பதால் எந்தப் பயனும் இல்லை என்று கூறி அவரை ஜாமீனில் விடுதலை செய்தார். ஒருவழியாய் 15 மாதங்களாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆ. ராசா வெளியே வருகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Comments are closed.