சேலத்தில் நேற்று தே.மு.தி.க., கட்சி சார்பில், “மக்கள் உரிமை மீட்பு மாநாடு” நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் ஆரவாரத்துடன் கலந்து கொண்டனர். மாநாட்டில் கின்னஸ் சாதனை படைக்கும் வகையில் 1000 கி.மீ., தொலைவிற்கு பேனர் அமைக்கப்பட்டிருந்தது.
சேலத்தில் நடைபெற்ற தே.மு.தி.க., மாநாட்டில், தமிழகம் முழுவதும் 1000 கி.மீ., தொலைவிற்கு வரவேற்பு பேனர்கள், சுவரொட்டிகள், வரவேற்பு அலங்கார வளையங்கள் என பிரம்மாண்டமான வரவேற்பு ஏற்பாடுகள் கட்சித் தலைவர் திரு.விஜயகாந்திக்கு செய்யப்பட்டிருந்தது. இந்த மாநாடானது, வரும் சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி ஆயத்த மாநாடாகவே நேற்று காட்சியளித்தது.
சேலம் மாவட்ட எல்லையான தீவட்டிப்பெட்டியில், விஜயகாந்திற்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிற்பகல் 12.34 மணிக்கு 250 வாகனங்கள் பின் தொடர, விஜயகாந்த் பிரச்சார வேனில் தீவட்டிப்பட்டி வந்தடைந்தார். அங்கு தொண்டர்கள் வெற்றியை உணர்த்தும் வகையில் மிகச் சிறந்த முறையில் அவரை வரவேற்றனர்.
பின்பு, 250 வாகனங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த கட்சித் தொண்டர்களின் வாகனங்களும் பின் தொடர, சரியாக 1.25 மணிக்கு விஜயகாந்த் மாநாட்டு திடலை அடைந்தார். 1.45 மணிக்கு திரு.விஜயகாந்த் பிரச்சார வேனில் இருந்தபடியே கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். அதன்பின், திருமதி.பிரேமலதா விஜயகாந்த் மாநாட்டு திடலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி சாமி கும்பிட்டார்.
விஜயகாந்த் வருகையின் போது, ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக, சேலம் தேசிய நெடுஞ்சாலையின் போக்குவரத்து பாதித்தது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
மாநாட்டில் பேசிய விஜயகாந்த், கட்சியையும், கட்சித் தொண்டர்களையும் ஒருபோதும் நான் அடகு வைக்க மாட்டேன். கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன். உங்கள் தன்மானம் கெடாத அளவிற்கு கட்சியின் செயல்பாடு இருக்கும் என்று அவர் கூறினார்.
மேலும், ஸ்பெக்ட்ரம் ஊழலில் தான் குற்றமற்றவன் என்று கூறும் கருணாநிதி, ராமாயணத்தில் சீதை தீக்குளித்து தன்னை நிரூபித்தது போல, தீயில் குதிக்க வேண்டியது தானே. ஏன் ராஜாவின் ஜாதியை சொல்லி தப்பிக்கிறார். 1967ம் ஆண்டு அண்ணாவின் மறைவிற்கு பிறகு, கருணாநிதி ஜாதியை சொல்லித் தான் ஆட்சியை பிடித்தார் என்றும் கூறினார்.
ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும் என கருணாநிதி கூறினார். ஆனால், கருணாநிதி இருக்கும் வரை ஏழைகள் இருப்பார்கள் என்று நேற்று விஜயகாந்த் கூறினார். மக்களின் வரிப்பணத்தில் இலவசங்களை வாரி வழங்குகிறார் கருணாநிதி. இவர் ஆட்சியில் தான் கொலை, கொள்ளை, வழிப்பறி, குழந்தை கடத்தல், திருட்டு போன்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது என்று அவர் கூறினார்.
ஏழைகளின் வயிற்றில் அடித்துப் பிழைக்கும் கருணாநிதியின் ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று திரு.விஜயகாந்த் கூறினார்.
விஜயகாந்த் கூட்டணி அமைப்பாரா? மாட்டாரா? என்று பலரும் எதிர்பார்த்திருந்த வேளையில், கட்சித் தொண்டர்களை நான் ஒருபோதும் அடகு வைக்க மாட்டேன். ஒவ்வொரு கூட்டணியிலும் கட்சிகள் அடிமைப்பட்டு கிடக்கிறது. நமக்கு வயது இருக்கிறது. போராடுவோம், நான் அடிமையாக மாட்டேன் என்று கூறினார்.
கூட்டணி அமைப்பது பற்றி தொண்டர்களிடம், மாநாட்டின் போது விஜயகாந்த் கேட்டார். அப்போது பலரும் ஆதரவு தெரிவித்தனர். வேண்டாம் என்று யாரும் கை தூக்கவில்லை. இருப்பினும், கூட்டணி பற்றி நான் பார்த்துக் கொள்கிறேன். உங்கள் தன்மானம் கெடாத அளவிற்கு கட்சியின் செயல்பாடு இருக்கும் என்று கூறி, கூட்டணி அமையுமா? இல்லையா? என்பதை உறுதியாக கூறாமல் குழப்பதிலேயே தன் உரையை முடித்து விட்டார் திரு.விஜயகாந்த்.
234 தொகுதிகளுக்கும் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் இருவரும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், எங்களை பெண்கள் மற்றும் தொண்டர்கள் என அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்றும் திருமதி.பிரேமலதா கூறினார்.
இம்மாநாட்டில் விஜயகாந்த், பிரேமலதா, கட்சித் தொண்டர்கள், பெண்கள், இளைஞரணி, ஆதரவாளர்கள் என லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
Comments are closed.