கமல்ஹாசன் ஒரு நடமாடும் பல்கலைக்கழகம் என்று நடிகை த்ரிஷா கூறியுள்ளார். கமல்ஹாசனின் மன்மதன் அம்பு தனது ஆசை மற்றும் ஏக்கத்தை நிறைவேற்றி விட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், மாதவனுடன் த்ரிஷா நடித்து,
தியேட்டர்களில் கலகலப்பாக ஓடிக் கொண்டிருக்கும் படம் மன்மதன் அம்பு. இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து த்ரிஷா அளித்துள்ள பேட்டியில், கமல்ஹாசனை புகழோ புகழென்று புகழ்ந்து தள்ளியிருக்கிறார். அவர் கூறுகையில், கமல் சாருக்கு உலக விஷயங்கள் அனைத்தும் தெரியும்.
எதைப் பற்றிக் கேட்டாலும் அதற்கான சரியான பதிலை உடனே சொல்வார். சின்ன சந்தேகம் கேட்டால்கூட அதைப் பற்றிய விரிவான தகவலை எடுத்துச் சொல்வார். ஒரு நாட்டை சுற்றிப் பார்க்கும்போது அந்த நாட்டைப் பற்றிய தகவல்கள், சிறப்பம்சங்கள், வரலாறு உள்ளிட்ட பல அம்சங்களை விரல் நுனியில் வைத்திருப்பார். “இவ்வளவு தகவல்களை தனது மூளையில் சேமித்து வைத்திருக்கிறாரே என்று நான் பலமுறை வியந்திருக்கிறேன்.
கமல் சார் ஒரு நடமாடும் பல்கலைக்கழகம்தான்! எந்த நாட்டைப் பற்றி கேட்டாலும் இங்கே, இந்தந்த வருடங்களில் இதுவெல்லாம் நடந்தது; அந்தச் சம்பவங்களுக்குப் பின்னால் இருக்கும் உண்மையான அரசியல் நிலவரம் என்ன? அந்த நாட்டில் முன்பு ஆட்சி செய்த மன்னர்கள் யார்? அவர்களைப் பற்றிய சிறப்பம்சங்கள் உள்ளிட்ட பல தகவல்களைப் பொழிவார்.
என்னைப் பொருத்தவரை சினிமாவில் கதாநாயகியாக நடிப்பவர்கள் ஒரு படத்திலாவது கமல் சாரோடு இணைந்து பணிபுரிய வேண்டும். அவரிடம் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன, என்றார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஜெஸ்ஸி கேரக்டர் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. ஜெஸ்ஸி பாத்திரத்துக்குப் பிறகு, அதே மாதிரியான கேரக்டர் மறுபடியும் கிடைக்குமா என்ற ஏக்கத்தில் இருந்தேன்.
மன்மதன் அம்பு எனது ஏக்கத்தை நிறைவேற்றி வைத்துவிட்டது. அம்புஜாக்ஷி என்கிற வித்தியாசமான பாத்திரத்தை கே.எஸ்.ரவிக்குமார் சார் அமைத்திருந்தார். ஜெஸ்ஸி பாத்திரத்தைப் போன்ற மாறுபட்ட பாத்திரம்தான் இதுவும். ரசிகர்கள் இந்தப் பாத்திரத்தையும் ஏற்றுக்கொண்டது சந்தோஷமாக இருக்கிறது, என்றும் த்ரிஷா கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
Comments are closed.