கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் கிச்சீஸ் என்ற கேக் ஷாப் உருவாக்கப்பட்டுள்ளது. பிரபல ஷாம்பூ தயாரிப்பாளர் வெல்வெட் ராஜ்குமாரின் மகள் க்ரிஷிக்கா உருவாக்கிய இந்த கடையை நடிகர் மற்றும் இயக்குனரான பாண்டியராஜன் திறந்து வைத்தார். அந்த விழாவில் அவர் பேசியதாவது-
இங்கு நான் வந்தவுடன் எனக்கு ஒரு பொக்கே கொடுத்தார்கள். அதை கையில் வாங்கும்போதே இதுல ஏதோ ஒரு ஸ்பெஷல் இருக்குன்னு மனசுக்கு தோணுச்சு. நான் நினைச்ச மாதிரியே அது பொக்கே வடிவத்தில் செய்யப்பட்ட சாக்லெட் என்றார்கள். எதை செய்தாலும் அதில் புதுமை செய்யணும்னு நினைக்கிற இந்த குடும்பம், இந்த கேக் விஷயத்திலும் அதையே பின் பற்றியிருப்பதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.
புருஷன் எனக்கு அரசன் என்ற படத்தில் நான் நடிச்சிகிட்டு இருந்தப்போ நடந்த சம்பவம் அது. அந்த படத்தில் எனக்கு ஜோடியாக கனகா நடிச்சிருந்தாங்க. எஸ்.எஸ்.சந்திரன் தயாரிக்க, இராம.நாராயணன் இயக்கியிருந்தார். அதில் கனகா குளிக்க போற மாதிரி ஒரு காட்சி. சோப்பு டப்பாவெல்லாம் ரெடி. குளிக்க வேண்டிய கனகாவும் ஈரத்தோடு வந்து உட்கார்ந்து விட்டார். திடீர்னு கொஞ்சம் நிறுத்துங்க சார்னு குரல் கொடுத்தேன் நான். எல்லாரும் என்னவோ ஏதோன்னு பயந்துட்டாங்க. பாய்ஞ்சு தெருவுக்கு ஓடிய நான் எதிர் கடையில் இருந்து அதை வாங்கிக் கொண்டு ஓடி வந்து அங்கிருந்த சோப்பு டப்பாவில் வச்சேன். ஏதோ பெரிய சஸ்பென்ஸ் இருக்குன்னு நினைச்சுகிட்டு இருந்த யூனிட் மொத்தமும் நான் செஞ்ச அந்த விஷயத்தை பார்த்து இதுக்காகவா இவ்வளவு ஆர்ப்பாட்டம்னு கூட யோசிச்சிருக்கலாம்.
ஆனால் அதுதான் பின்னாடி இந்த படத்தையே ரிலீஸ் பண்ணப்போவுதுன்னு அவங்க யாருக்குமே தெரிஞ்சுருக்காது. நான் என்ன செய்தேன் தெரியுமா? கனகாவின் பக்கத்தில் இருந்த சோப்பு டப்பாவில் ஒரு வெல்வெட் ஷாம்பூ பாக்கெட்டை வைத்தேன்.
என்னோட நண்பர் வெல்வெட் ராஜ்குமாருக்காக நான் செஞ்ச சின்ன உதவி அது. படத்தின் பிரிமியர் ஷோவில் அதை கவனிச்ச ராஜ்குமார், என்னை கேட்காமலே அந்த படத்துக்கு மவுண்ட் ரோட்டில் 100 உயரத்தில் பேனர் வைச்சார். எதுக்காக சொல்றேன்னா பிரதிபலன் பார்க்காம செய்யுற ஒரு விஷயம், நமக்கு எப்படியெல்லாம் உதவுது என்பதை தெரிஞ்சுக்கறதுக்காகதான்.
படம் முடிஞ்சு ரிலீசுக்கு தயாரானோம். அப்போ அந்த படத்தை எந்த விநியோகஸ்தர்களும் வாங்க முன்வரலை. அந்த நேரத்தில் நான் சோகமா இருந்தேன். என்னிடம் விஷயத்தை கேட்ட ராஜ்குமார், கவலையை விடுங்க. நானே இந்த படத்தை தமிழகம் முழுவதும் ரிலீஸ் பண்றேன்னு சொன்னார். ஏதோ அந்த நேரத்தில் ஆறுதலுக்கு சொல்லாமல் சொன்னபடியே படத்தை எஸ்.எஸ்.சந்திரனிடம் இருந்து முழுவதுமாக வாங்கி தமிழகம் முழுக்க வெளியிட்டார். ஆனால் படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை.
இன்று ஒரு தயாரிப்பாளரையும், டைரக்டரையும் படம் முடிஞ்ச பிறகு ஒரே மேடையில் பார்ப்பதே அபூர்வமாக இருக்கிறது. ஆனால் இத்தனை வருஷம் ஆகியும், அந்த படத்தின் நஷ்டத்திற்கு பிறகும் என்னிடம் பழைய மாதிரி அன்பு வைத்திருக்கிறார் ராஜ்குமார். இதுதான் நட்பின் அடையாளம் என்றார் பாண்டியராஜன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி