இது நம்ம ஆளு, இன்று போய் நாளை வா போல ஒரு படம் எடுப்பதுதான் தனது அடுத்த ப்ளான் என்று டைரக்டர் பாக்யராஜ் கூறினார். பாக்யராஜ் இயக்கத்தில், அவரது மகன் சாந்தனு நாயகனாக நடித்திருக்கும் படம் சித்து ப்ளஸ் 2. காதல், காமெடி கலந்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த படம் எதிர்பார்த்ததை விட ரசிகர்களின் வரவேற்புடன் தியேட்டர்களில் ஓடி வருகிறது. இந்நிலையில் படம் ஓடும் தியேட்டருக்கு டைரக்டர் பாக்யராஜ், அவரது மனைவி பூர்ணிமா, படத்தின் நாயகன் சாந்தனு, நாயகி சாந்தினி ஆகியோர் சென்று ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்கள். சேலத்தில் உள்ள ஒரு தியேட்டருக்கு சென்ற அவர்கள், ரசிகர்களிடையே பேசினார்கள்.
அப்போது பாக்ராஜ் பேசுகையில், இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல ஆதரவு கொடுத்துள்ளார்கள். இந்த படத்தில் நடனம், சண்டை காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். தமிழ் தெரிந்த ஒரு நடிகை இதில் கதாநாயகியாக நடித்திருப்பது விசேஷமாகும். எல்லா பகுதிகளிலும் இந்த படம் நன்றாக ஓடுவதாக எனக்கு தகவல் வந்தது. சேலம் எனக்கு மறக்க முடியாத ஊர் ஆகும். சுவரில்லாத சித்திரம், புதிய வார்ப்புகள் போன்ற படங்களுக்கு இங்கு தான் கதை எழுதப்பட்டது. அடுத்து இன்று போய் நாளை வா, இது நம்ம ஆளு போன்று ஒரு படம் எடுப்பதுதான் எனது ப்ளான், என்றார்.
படத்தின் நாயகன் சாந்தனு பேசும்போது, ஒவ்வொரு படங்களையும் எனது முதல் படமாக நினைத்தே நான் நடிக்கிறேன். எனது தந்தைக்கு (பாக்யராஜ்) திரை உலகில் நீண்ட கால அனுபவம் உண்டு. அவரிடம் இருந்து நான் நிறைய விஷயங்களை கற்று கொள்கிறேன். அவரின் பாரிஜாதம் படத்தில் நான் இணைந்து பணியாற்றினேன். திரை துறையை பொறுத்தவரையில் அவரின் வளர்ப்பாக தான் நான் உள்ளேன். வார்ப்பாக ஆகவில்லை. வர இருக்கும் ஆயிரம் விளக்கு படத்தில் யதார்த்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். அடுத்த படமான கண்டேனில், ரொமான்டிக் மற்றும் காமெடி இருக்கும். காதல் கதை, சண்டை காட்சிகளுடன் கூடிய கதை என நான் பிரித்து பார்ப்பதில்லை. எல்லா கதாபாத்திரத்திலும் நடிக்க விரும்புகிறேன். எந்த கதாபாத்திரத்திலும் நடிக்கும் வகையில் என்னை தயார்படுத்தி வருகிறேன், என்றார்.
நாயகி சாந்தனி பேசுகையில், இந்த படத்தில் நடித்தது எனக்கு நிறைய அனுபவங்களை கற்று தந்திருக்கிறது. ரசிகர்கள் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு தந்துள்ளார்கள். அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி