இதற்கு முன் காணாத பெரும் நெருக்கடியில் உள்ளது தமிழ் சினிமா. எந்தப் படமாக இருந்தாலும் இரண்டு வாரங்கள் கூட தாக்குப் பிடிக்காத நிலை ஏற்பட்டுள்ளது. காரணம் தியேட்டர் பற்றாக்குறை… அல்லது குறிப்பிட்ட சிலரின் ஆதிக்கத்தில் திரையரங்குகள் இருப்பது.
நல்ல படங்கள் கூட கட்டாயமாக 1 வாரத்துக்குள் தூக்கப்படும் நிலை இதனால் ஏற்பட்டுள்ளது. உதாரணம் தா எனும் படம். நல்ல படம், ஓரளவு நல்ல கூட்டம் எல்லாம் இருந்தும் இரண்டாவது வாரமே இந்தப்படத்தை தூக்கச் சொல்லி நிர்பந்தப்படுத்துகிறார்களே என்று புலம்புகிறார் தயாரிப்பாளர்.
தியேட்டர்கள் தட்டுப்பாடு மட்டுமின்றி, தயாரிப்பாளர்களின் திட்டமிடல் இன்மையும் கூட இதற்குக் காரணமாக உள்ளது.
வாராவாரம் 4 படங்களுக்குக் குறையாமல் ரிலீஸாகின்றன. அந்த வகையில் இந்த வாரமும் 4 படங்கள் வெளியாகின்றன. அடுத்த இரு வாரங்களில் மேலும் 8 படங்கள் வெளியாக உள்ளன!
சசிகுமார் இயக்கத்தில் ஈஸன், சக்தி நடித்துள்ள ஆட்ட நாயகன், வெண்ணிலா கபடி குழு தயாரிப்பாளர்களின் நில் கவனி செல்லாதே மற்றும் வாடா போடா நண்பர்கள் ஆகியவை நாளா மறுநாள் வெளியாகவிருப்பவை..
இவற்றில் எந்தப் படம் தேறும், இரண்டு வாரங்களைத் தாக்குப்பிடித்து ஓடும் என்பதே கணிக்க முடியாததாக உள்ளது. ஈசன் படம் குறித்து ஓரளவு எதிர்ப்பார்ப்பு இருந்தாலும், இந்தப் படத்தை அடுத்த வாரம் வெளியாகும் மன்மதன் அம்பு பாதிக்குமோ என்று கவலைப்படுகின்றனர் விநியோகஸ்தர்கள்.
இப்படி வரைமுறையில்லாமல் படங்களை வெளியிடுவது தற்கொலைக்கு சமம் என்று கதறுகின்றனர் விநியோகஸ்தர்கள். ஆனால் எங்களுக்கு வேறு வழியில்லை, பெட்டிக்குள் கிடந்தால் வட்டி கட்டி மாளாது என்று சிணுங்குகின்றனர் தயாரிப்பாளர்கள். இதற்கு தீர்வு காணப்பட்டே ஆக வேண்டும் என்று ஒருமித்த குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது திரையுலகில்!
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி