இந்திய சினிமாவின் திரைக்கதை மன்னன் எனப் புகழப்படும் கே பாக்யராஜின் சித்து ப்ளஸ்டூ படமும், விஜய்காந்த் முதல்முறையாக இயக்கி நடிக்கும் விருதகிரியும் நாளை வெளியாகின்றன.
இருவருக்குமே மிக முக்கியமான படங்கள் சித்து ப்ளஸ்டூவும் விருதகிரியும்.
பாக்யராஜ் கடைசியாக இயக்கி வெளியிட்ட படம் பாரிஜாதம். 2006-ல் வந்தது. வணிகரீதியாக ஓரளவு நல்ல வெற்றியைத் தந்த படம் அது.
அந்தப் படத்துக்குப் பிறகு, மகன் சாந்தனுவை ஹீரோவாக வைத்து அவர் ஆரம்பித்ததுதான் சித்து ப்ளஸ்டூ. கடந்த பொங்கலுக்கே வந்திருக்க வேண்டிய படம். ஆனால் தயாரிப்பு, வெளியீட்டு சிக்கல்கள் இத்தனை நாட்களாய் படத்தை பெட்டியிலேயே காக்க வைத்துவிட்டது.
இதுவரை தான் இயக்கியதில், தனக்கே வித்தியாசமான அனுபவம் தந்த படம் இது என்கிறார் பாக்யராஜ். அந்த அனுபவம் பார்க்கும் ரசிகர்களுக்கும் கிடைக்கும் என்று நம்புவோமாக!
விஜயகாந்த் இயக்கத்தில், அவர் மச்சான் சுதீஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் விருதகிரி. எம்எல்ஏவாக தான் வெற்றிபெற்ற தொகுதியின் பெயரையே இந்தப் படத்துக்கு சூட்டியுள்ளார் விஜயகாந்த். வரிசையாக 6 படங்களின் தோல்விக்குப் பிறகு, வேறு எந்த இயக்குநரையும் நம்பாமல் விஜயகாந்த் களமிறங்கியுள்ளார், இயக்குநராக.
படம் முழுக்க அரசியல் பஞ்ச், அடிதடி பஞ்ச் என வழக்கமான மசாலாத்தனங்கள் நிறைந்த படம் இது என விஜயகாந்தே சொல்லிவிட்டார். போதாக்குறைக்கு ரசிகர்கள் அவரை பல படங்களில் பார்த்துப் பழகிய காக்கி யூனிபார்மையே இந்தப் படத்திலும் மாட்டிக் கொண்டுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி