பொதுவாழ்வில் பண்பாடுடன் நடந்து கொள்வோர் எப்போதும் மெயின் ரோட்டில் ஊருக்குள் தலைநிமிர்ந்து செல்லலாம். மோசமானவனா இருந்தா ப்ளாட்பாரம் கூட கிடைக்காது, பைபாஸ்ல ஊருக்கு வெளிய போக வேண்டியதுதான், என்றார் ரஜினிகாந்த்.
தமிழக முதல்வர் கருணாநிதி கதை வசனம் எழுதிய இளைஞன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னையில் நடந்தது. சத்யம் திரையரங்கில் நடந்த விழாவில் முதல் இசைத் தட்டை முதல்வர் கருணாநிதி வெளியிட, ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியது:
மதுரையில் நடந்த மத்திய அமைச்சர் முக அழகிரியின் மகன் திருமண விழாவில் கலந்து கொண்டுவிட்டு, வீடு திரும்பியதும் முதல்வரிடமிருந்து போன் வந்தது. வருகிற 5-ம் தேதி ஊரில் இருக்கிறீர்களா? என்று கேட்டார். ஆமாம் என்றேன். வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறீர்களா என்றார். இல்லை என்றேன். அதன் பிறகு இந்த இளைஞன் பட இசை விழா இருக்கிறது. நீங்க வரணும்னு ஆசைப்படறோம்… வரமுடியுமா என்றார். நான் உடனே சரி சொல்லிவிட்டேன்.
அவர் வயசென்ன, இருக்கிற நிலை என்ன.. அவர் வயசுக்கு என்கிட்ட இவ்ளோ தூரம் கேட்டிருக்க வேண்டாம். இந்த நிகழ்ச்சி இருக்கு வாங்கன்னு கூப்பிட்டிருந்தாலும் வந்திருப்பேன். ஆனால், அந்த பண்பாடு… பக்குவமான அணுகுமுறை… இதுதான் என்னை வியக்க வைத்தது. அதனாலதான் அவர் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுவாழ்க்கையில் இருக்கிறார்.
ஒண்ணு சொல்லிக்கிறேன்… பண்பாடுள்ள மனிதனால் மட்டும்தான் நேர்வழில, மெயின் ரூட்ல போக முடியும். இல்லேன்னா பிளாட்பாரத்துல கூட நடக்க முடியாது. பைபாஸ்லதான் போயாகணும். அதாவது ஊருக்குள்ள நுழையவே முடியாது… ஊருக்கு வெளியே அப்படியே சுத்திக்கிட்டு கண்ணுக்கு மறைவா போயிட வேண்டியதுதான்.
இந்த மழை வெள்ள நேரத்துல, முதல்வருக்கு ஏராளமான மக்கள பிரச்சினை இருக்கும். வெள்ள சேதம் நிறைய இருக்கும், மக்கள் அவதிப் படற இந்த நேரத்துல, அதிகமா டைம் எடுத்துக்க விரும்பல.
என்னை வித்தியாசமாக காட்டியவர் டைரக்டர் சுரேஷ்கிருஷ்ணா. அண்ணாமலை படத்தில் ஒரு வித்தியாசமான ரஜினிகாந்தை காட்டினார். தொடர்ந்து பாட்ஷா, வீரா ஆகிய படங்களில் என்னை மாறுபட்ட கதாபாத்திரங்களில் காட்டினார்.
இந்த படத்தின் டிரைலர் பார்த்தேன். ஷங்கர் படங்கள் அளவுக்கு பிரமாண்டமாக இருந்தது. ஒரு நல்ல நடிகராக பா.விஜய்யை பார்த்தேன். இந்த வயதிலும் இளைஞர்களுக்கு வாலி பாட்டு எழுதுகிறார். அதேபோல் இந்த சின்ன வயதில் வாலி அளவுக்கு பாட்டு எழுதும் பா.விஜய்யை பாராட்டுகிறேன்.
எனக்கு நடிகர் நம்பியாரை ரொம்ப பிடிக்கும். அவர் எப்போதுமே சந்தோஷமாக இருப்பார். அவரிடம், உங்களுக்கு வயது என்ன ஆகிறது? என்று கேட்டேன். “என் உடம்புக்கு வயது 80. மனசுக்கு வயது 18” என்றார்.
அதேபோல் தான் கலைஞரும் இளைஞராக இருக்கிறார். கலைதான் அவரை இவ்வளவு சந்தோஷமாக, ஆரோக்கியமாக வைத்து இருக்கிறது. அவருடைய பேனாவுக்கு இன்னும் வயது ஆகவில்லை. இன்னும் அவர் நீண்டகாலம் வாழ்ந்து நாட்டுக்கும், கலைக்கும் சேவை செய்ய வேண்டும்,” என்றார் ரஜினி.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி