இரண்டரை மணிநேரம் டென்ஷனே இல்லாம ஜாலியா கதை சொல்லிய இயக்குநர் மணிகண்டனுக்கு ஒரு ஓ! போடலாம். இவர் மறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர்; படத்தில் அதை நன்றாகவே நிரூபிக்கிறார். ஜீவாவின் படங்களில் வருவது போன்ற கலர்புல் காட்சிகள் படம் முழுவதும் ஏராளமாக வருகின்றன.
லண்டனிருந்து கரைக்குடிக்கு பயணமாகும் அர்ஜுன் மற்றும் மதுரைக்கு போகும் அனு இவர்கள் இருவரின் சந்திப்பு; ஊடல் கூடல் இதுக்குள்ள ஒரு ‘ப்ளாஷ் பேக்’. அவ்வளவுதான் படமே! அட இதுக்குள்ள அப்படி என்ன இருக்குன்னு நீங்க நெனைக்கலாம். அங்கதான் நிற்கிறார் இயக்குநர் மணிகண்டன்.
படத்தை அழகாக நகர்த்துவதில் இவர் செமகில்லாடிதான். ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு ஜாலியாக குறும்புடனே நகர்கின்றன. ஆர்யாவுக்கு இரண்டு வேடங்கள். அப்பா மகன் கேரக்டர். இதில் அப்பா கேரக்டரில் வரும் ஆர்யாதான் ரொம்பவே நம்மை இம்ப்ரஸ் பண்ணுகிறார். அப்பா கேரக்டர்னதும் 50க்கு மேலயோனு நெனச்சிர வேணாம். அவருடைய இளமையான காதல் பருவத்தைத்தான் சொல்லியிருக்கிறார்கள். அவருக்கு ஜோடியாக வரும் மீனாள் (ப்ரீத்திகா) ஏதோ நம்ம பக்கத்து தெருவில பார்த்த பொண்ணு மாதிரி இருக்கிறார். இவர்கள் காதலை நம்மை ரொம்பவே ரசிக்க வைக்கிறார்கள். இருவரும் ஒரு கட்டத்தில் பிரியும் போது. நம்மனதையும் வேதனைக்கு ஆளாக்கிவிட்டுப் போகிறார்கள்.
மகன் ஆர்யாவுக்கு ஜோடியாக வரும் ‘ஸ்ரேயா’ படுசுட்டித்தனமாக இருக்கிறார். இவர் சில நேரங்களில் செய்யும் பாவனைகள் ‘ஜெனிலியா’வை ஞாபகப்படுத்திப் போகின்றன. காமடியில் சந்தானம் செமயாக கலக்கியிருக்கிறார். இவர் வரும் காட்சிகளில் எல்லாம் வெடிச் சிரிப்புக்குப் பஞ்சமில்லை. கதையோடு நகரும் ஆர்யாவும் ஸ்ரேயாவும் கூட செம ஜாலி பண்ணுகிறார்கள். ‘லொள்ளுசபா’ சுவாமிநாதன், வையாபுரி, ஜெகன், பாண்டு என கலகலக்க வைக்க ஒரு டீமே இருக்கிறார்கள்.
படத்திற்கு ஒளிப்பதிவு குருதேவ். லண்டன் வீதிகளையும் ஆர்யா ஷரேயா கடக்கும் மலை ஏரியாக்கள் எல்லாவற்றையும் அழகாக படம் பிடித்திருக்கிறது கேமரா. ப்ளாஷ்பேக் காட்சிகளில் செட்டிநாட்டு வீதிகளை அழகாக பதிவுசெய்திருக்கிறார்கள். இசை ஹரி & லெஸ்லி. ‘ஒருநிலா…’ பாடல்கள் திரும்பத் திரும்ப கேட்க தோன்றும் ரகம்.
பின்னணி இசை ‘ப்ரவீன் மணி’ பல இடங்களில் பளிச்சிடுகிறார். அப்பா ஆர்யா காட்சிகளில் ஒரு வித ‘லைட் டோன்’ பயன்படுத்தியிருப்பது காட்சிக்கு மேலும் அழகு சேர்க்கிறது. எந்த ஆர்ப்பாட்டமும் பரபரப்பும் இல்லாமல் ஜாலியாக ரசிக்கும்படியாக படத்தை இயக்கியிருக்கும் இயக்குநருக்கு இன்னொருதடவை ஓ! போட்டாலும் தப்பே இல்லை!
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி