ரசிகர்களின் தாறுமாறான கூச்சல்களுக்கு நடுவில் ஜீவா நடித்த ‘சிங்கம்புலி’ படத்தின் ஆடியோ வெளியீடு நடந்தது. நடிகர்களின் சுவாசமே ரசிகர்களின் விசில் சப்தம்தான் என்றாலும், “யோவ்… கொஞ்ச நேரம் அமைதியா இருங்கப்பா” என்று ஜீவாவே உத்தரவு போடுகிற அளவுக்கு போனது கரைச்சல்!
“பதினைஞ்சு வருஷமா போராடுனேன். நான் கதை சொல்லாத ஹீரோவே இல்லை. எங்கப்பா தினமும் என்னை கேட்பாரு. ஏம்ப்பா… வண்ணத்திரை, சினிமா எக்ஸ்பிரஸ், குங்குமத்துல எல்லாம் உன்னை பற்றி நியூஸ் வரும்னு பார்க்குறேன். எப்பப்பா வரும்னு. இந்த படத்தை இயக்குகிற வாய்ப்பு கிடைக்கும்போது அவரு உயிரோட இல்லை. சாமியா இருந்துதான் எனக்கு இந்த வாய்ப்பை அவரு வாங்கிக் கொடுத்திருப்பாருன்னு நினைக்கிறேன்” என்று படத்தின் இயக்குனர் சாய் ரமணி குரல் உடைந்து சொல்ல சொல்ல, ரசிகர்களின் விசில் சப்தம் அப்படியே குறைந்து சாய்ரமணியை உற்சாகப்படுத்துகிற கைதட்டல்களாக மாறியது.
“நானும் சாய் ரமணியும் கேயாரிடம் உதவி டைரக்டர்களாக வேலை பார்த்தோம். நான் எஸ்எஸ்எல்சி வரைக்கும்தான் படிச்சிருக்கேன். அவன் என்னை விட கொஞ்சம் ஜாஸ்தி. ஆனால் படிச்சவங்க எல்லாரும் குழம்பி நின்னப்போ அவ்வளவா படிக்காத அவனாலதான் ஒரு பிராப்ளத்தை சரி பண்ண முடிஞ்சுது. கேயார் இயக்கிய படம் ஒன்றில் 11 பாடல்கள். ஆனால் ஃபைனல் மிக்சிங்குக்கு முன்னாடி எல்லாமே ‘நான்-சிங்க்’ ஆயிருச்சு. பெரிய என்ஜினியர்கள் கூட சரி பண்ண முடியாத அந்த பிரச்சனையை சாய்ரமணிதான் சரி பண்ணினான். எனக்கு தெரிஞ்சு புதுமுக இயக்குனர் ஒருவர் தன் முதல் படத்தையே இரட்டை வேட படமாக இயக்குவது இதுதான்னு நினைக்கிறேன்” என்றார் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன். (இந்த படத்தில் ஜீவாவுக்கு டபுள் ஆக்ட்)
ஜீவாவுக்கு நெருங்கிய நண்பர்களான ஆர்யாவும், ஜெயம் ரவியும் வந்திருந்தார்கள். அதிலும் ஆர்யா அரை டவுசருடன் நிகழ்ச்சிக்கு வர, அத்தனை பேருக்கும் அதிர்ச்சி. சில வால் முளைத்த ரசிர்கள் “அரை டவுசரு…” என்று கூச்சல் போட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கவலையை வரவழைத்தார்கள். “நாங்க ஸ்டார் கிரிக்கெட் விளையாட துபாய் போயிட்டு இப்பதான் வந்தோம். ஏர்போட்ல இருந்து அப்படியே இங்க வந்திட்டேன். முதல்ல வீட்டுக்கு போயிட்டு வந்திரலாம்னு நினைச்சேன். ஆனால் ஜீவாதான் “மாப்ள, பரவாயில்ல. அப்படியே வந்திரு”ன்னு சொன்னான்” என்றார் ஆர்யா கொஞ்சம் வெட்கம் கலந்த முகத்துடன்.
“நண்பேன்டா… என்பதற்கு ஆர்யாதான் உதாரணம். இல்லேன்னா அரை டிராயருடன் விழாவுக்கு வருவாரா? இதுதான் ஜீவாவுடன் ஆர்யா வைத்திருக்கும் நட்புக்கு உதாரணம்” என்றார் ஜெயம் ரவி. “அமீர் படத்தில் நான் நடிக்கிறேன். எனக்கு முன்னாடியே அமீர் இயக்கிய ராம் படத்துல ஜீவா நடிச்சிருக்கார். எஸ்.பி.ஜனநாதன் படத்தில நான் நடிப்பதற்கு முன்னாடியே அவருடைய ஈ படத்தில் நடிச்சிருக்கார்.. அதனால் ஜீவாதான் எனக்கு முன்னோடி” என்று தன் பங்குக்கு பஞ்ச் வைத்தார் ஜெயம் ரவி.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி