வரிசையாக படம் தயாராக இருக்க தமிழ் சினிமாவில் வெளியிட தியேட்டர்கள் இல்லை என்ற கொடுமையே இப்போது மேலோங்கி இருக்கிறது. இப்போதெல்லாம் எந்த படத்தையும் 50 நாட்கள் ஓட்டுவதற்கே தியேட்டர்கள் இருப்பதில்லை. இதிலும் பெரிய நிறுவனங்கள் அதிக அளவில் விளையாடுவதால் சிறுநிறுவனங்கள் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது.. இதோ இது இப்போதைய விளையாட்டு..
சன் பிச்சர்ஸ் எந்திரன் ஓடும் தியேட்டர்கள் அனைத்திலும் ஆடுகளத்தை வெளியிட தீர்மானித்து, யாரும் இல்லாத தியேட்டரில் கூட ரோபோடா ரோபோடா என்று பாட்டு பாடுகிறார் சிட்டி, ஆடுகளம் வரை எந்திரன் தனியாக ஐஸ்வர்யாவுடன் டான்ஸ் ஆடிக்கொண்டிருப்பார் என்பதில் எவ்வித ஐயமும் வேண்டாம்.
அடுத்து சைலண்டாக வந்த மைனாவை மன்மதன் அம்பு வரும் வரை தியேட்டர்களில் கூண்டு கட்டி வைக்க சொல்லி இருக்கிறார் உதயநிதி, அதானால் அம்பு வரும் வரை மைனா அசையாது என்றே தெரிகிறது. இவர்களுக்கு இடையே மாட்டிகொண்டு தவிப்பவர் சிறுதயாரிப்பாளர்களே.
க்ளவுட் நைன் தெளிவாக இருக்கிறார், நான் மகான் அல்ல தியேட்டர்களில் கொஞ்சம் பங்கு பிரித்துதான் வ குவாட்டர் கட்டிங்க் ரிலீஸ் செய்தார், அது சரியாக போகவில்லை என்றாலும் பிரச்சனை இல்லை, நான் மகான் அல்ல படமும் 100 நாட்களைத்தாண்டி விட்டது, அதனால் இப்போது நான் மகான் அல்ல குவாட்டர் கட்டிங்க் இரண்டையும் தூக்கி விட்டு ரத்த சரித்திரத்தை வெளியிட்டு விட்டார் தயாநிதி அழகிரி.
இதையெல்லாம் மனதில் வைத்துதான் படார் திடீரென்று பேச ஆரம்பித்திருக்கிறார் கேப்டன் விஜயகாந்த். “என் படத்தை முடக்க நினைக்கிறாங்க. அது எடுபடாது. எப்படி ரிலீஸ் பண்றேன்னு பொருத்திருந்து பாருங்க” என்கிறார். ஆனால் இந்த நிமிடம் வரைக்கும் விருதகிரி எப்போது திரைக்கு வரும் என்று உத்தேசமாகக் கூட அறிவிக்கவில்லை அவர்
இதற்கிடையில் இன்னும் ஆடியோவையே ரிலீஸ் செய்யவில்லை காவலன் படத்திற்கு. அதற்குள் இந்த படத்திற்கும் தியேட்டர் கிடைக்கவில்லை என்ற முணுமுணுப்பு எழுந்திருக்கிறது கோடம்பாக்கத்தில். வரும் 8ம் தேதி இசை என்றும், படம் இம்மாதம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது காவலனுக்கு, ஆனாலும் மேலே சொன்ன முதலாளிகள் எதாவது தியேட்டர்கள் கொடுப்பார்களா என்று காத்திருக்கிறார் காவலனை வாங்கி இருக்கும் ஷக்தி சிதம்பரம்.
யார் யாருடன் மோதிக்கொள்வார்கள் என்று பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி