2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் (சி.ஏ.ஜி) அறிக்கையில் கூறப்பட்டுள்ளது முழுக்க முழுக்க யூகத்தின் அடிப்படையிலானது என்று உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா கூறியுள்ளார்.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சிங்வி, கங்குலி ஆகியோர் முன்னிலையில் நடந்த விவாதத்தின்போது ராசா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அந்தியர்ஜுனா வாதாடிகையில்,
மனதில் தோன்றிய ஒரு தொகையை சி.ஏ.ஜி. குறிப்பிட்டுள்ளார். பிரமிக்கத்தக்க அளவில் ஒரு தொகையை (ரூ.1.76 லட்சம் கோடி) வருவாய் இழப்பாக சி.ஏ.ஜி. குறிப்பிட்டுள்ளார். இது முழுக்க முழுக்க யூகத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட தொகையாகும். இதை சி.ஏ.ஜி.யின் அறிக்கையை எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த விஷயம் நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்கு குழுவின் ஆய்வில் உள்ளது. இதில் நீதிமன்றம் என்ன முடிவெடுக்க வேண்டும் என விரும்புகிறீர்கள்? என்றனர்.
இதற்கு பதிலளித்த அந்தியர்ஜுனா, எந்த அடிப்படையில் சி.ஏ.ஜி. மதிப்பிட்டுள்ளாரோ, அது மதிப்பீடு செய்வதற்கான தரமான முறையல்ல. 2003ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டுவரையிலான காலகட்டத்தில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்து சி.ஏ.ஜி. விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்துள்ளது. ஆனால், ராசா 2007ம் ஆண்டு மே 16ம் தேதி தான் அமைச்சரானார்.
ராசாவுக்கு முன்பே, அந்தத் துறையின் அமைச்சர்களாயிருந்த தயாநிதி மாறன், அருண் ஷோரி ஆகியோர் 52 நிறுவனங்களுக்கு உரிமங்களை வழங்கிவிட்டனர்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்காற்று ஆணையத்தின் (டிராய்) பரிந்துரைகளின் அடிப்படையிலேயே தொலைத்தொடர்புத் துறை செயல்பட்டுள்ளது. டிராய் அமைப்பின் பரிந்துரைகளை ரத்து செய்யும் அதிகாரம் சி.ஏ.ஜிக்கு கிடையாது.
டிராய் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே செயல்பட்டுள்ளபோதும், இந்த முறைகேடுகளுக்கு முழு பொறுப்பும் ராசாதான் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கும் வகையில் சி.ஏ.ஜியின் அறிக்கை உள்ளது என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சி.ஏ.ஜி. போன்ற அமைப்பு மத்திய அரசும் அமைச்சரும் சொல்வதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயமில்லை என்றனர்.
தொடர்ந்து பேசிய அந்தியர்ஜுனா, ராசா மெளனமாக இருப்பதால் அவர் தன்னை குற்றவாளி என்று ஒப்புக் கொண்டதாக அர்த்தமாகாது. இந்த விஷயம் நீதிமன்ற விசாரணையில் உள்ளதால், ஒரே ஒரு செய்தியாளரிடம் மட்டுமே பேச அவர் ஒப்புக் கொண்டார். ஆனால், அதற்கு முன்னரே ராசாதான் குற்றவாளி என ஊடகங்கள் தீர்ப்பளித்துவிட்டன. ராசாதான் ரூ.1.76 லட்சம் கோடி இழப்புக்கு காரணம் என்ற தோற்றத்தை உருவவாக்கிவிட்டனர்.
அரசியலமைப்புச் சட்டப்படியான பொறுப்பு, அரசியல் நிர்பந்தம், தனது கட்சித் தலைமையின் அறிவுறுத்தல் காரணமாகவே ராசா தனது பதவியை நவம்பர் 14ம் தேதி ராஜிநாமா செய்தார்.
குற்றம்சாட்டப்பட்டவர் யாராக இருந்தாலும் தனது தரப்பு வாதத்தை எடுத்துச் சொல்வதற்கு வாய்ப்பளிக்க வேண்டும். ஆனால், பிரச்சனை நீதிமன்ற விசாரணையில் இருக்கும்போதே, தினம் ஒரு பரபரப்புச் செய்தியை ஊடகங்கள் வெளியிடுகின்றன. இதன் காரணமாக நீதிமன்றத்தின் நம்பிக்கை ஆட்டம் கண்டுவிடக் கூடாது. இதனால் ராசா விரக்தியடைந்துள்ளார் என்றார்.
இதையடுத்து, ராசா அப்படி கருதத் தேவையில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி