திரையுலகம் வில்லன் வேடம் எல்லாம் பிரச்சனையே இல்லை

வில்லன் வேடம் எல்லாம் பிரச்சனையே இல்லை

Tamil, Tamil News,Tamil News paper,   Tamil Newspaper, Tamil daily news paper,   Tamil daily newspaper,Tamilnadu   politics,kollywood,Tamil Cinema

“சிங்கம் புலி’ படத்திற்கு டப்பிங் பேசிக் கொண்டிருந்தார் ஜீவா. படம் சூப்பராக வந்திருப்பது அவரது உற்சாகமான பேச்சிலிருந்தே அறிய முடிந்தது. டப்பிங் பேசி முடிந்ததும் அதே உற்சாகத்தோடு நம்மை வரவேற்றவர், நம் கேள்விகளுக்கு ரிலாக்ஸ்க் பதில் சொல்ல ஆரம்பித்தார்.
இரட்டை வேடத்தில் நடிக்க வேண்டும் என்றுதான் “சிங்கம் புலி’ கதையைத் தேர்ந்தெடுத்தீர்களா?
அந்த மாதிரி எல்லாம் இல்லை. இந்தக் கதை எனக்கு கரெக்ட்டாகவும், என் நடிப்புத் திறமைக்குத் தீனி போடும் வகையிலும் இருந்தது. இந்தக் கதையை வேறு ஒரு ஹீரோவை வைத்து தயாரிப்பதாகத்தான் முதலில் இருந்தது. ஆனால் இயக்குநர் சாய்ரமணி கதையைச் சொன்னபோதே “இதில் நீங்கள்தான் நடிக்கணும்’ என்று பிடிவாதமாகச் சொன்னார். படத்தில் பெண்களை கலாய்க்கிற மாதிரி நிறைய காட்சிகள் இருக்கு.
அந்தக் காட்சிகள் எல்லாம் பெண்களுக்கும் பிடிக்கும். படத்தில் என்னோட இரண்டு கேரக்டரும் முக்கியத்துவமுள்ளதாக இருக்கிறது. ஒரு கேரக்டர் சென்னை பாஷை பேசுகிற மாதிரி. இன்னொன்று கியூட்டான கேரக்டர். அதாவது கார்த்திக் ஸார் ஏற்று நடிக்கும் வேடங்கள் மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்களேன்.
புது இயக்குநர் எப்படி?
நான் நடித்த பெரும்பாலானப் படங்களை புது இயக்குநர்கள்தான் இயக்கியிருக்கிறார்கள். அந்தப் படங்கள் வெற்றியும் பெற்றிருக்கு. சாய்ரமணி இப்படத்தின் கதையைச் சொல்லும்போதே எனக்குப் பிடித்திருந்தது. அவர் கதை சொன்ன விதத்தைப் பார்த்தபோதே அவரால் படத்தை சிறப்பாக எடுக்கவும் முடியும் என்பதை உணர்ந்தேன். இவர் அனுபவமுள்ள பல இயக்குநர்களிடம் வேலை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கதை சொல்லும்போதே ஒரு இயக்குநரின் திறமையை உணர முடியுமா?
ஒருத்தர் ஒரு கதையை சொல்கிற விதத்திலிருந்தே அவரால் அந்தக் கதையை சொன்ன மாதிரி எடுக்க முடியுமா? என்பதை என்னால் தீர்மானிக்க முடியும். அதுமாதிரி முதல் நாள் ஷூட்டிங்கின்போதே அவரோட திறமையை மேலும் அறிய முடியும். “ஈ’ படத்தில் நடிக்கும்போதிலிருந்தே எனக்கு சாய்ரமணியைத் தெரியும், அவரோட திறமை பற்றித் தெரியும்.
இரண்டு வேடங்கள் என்பதால் கெட்-அப் மாற்றம் உண்டா?
இந்தப் படத்தில் அப்படியொன்றும் பெரிய கெட்-அப் சேஞ்ச் கிடையாது. “கற்றது தமிழ்’ படத்தில் கஷ்டப்பட்டு பண்ணினேன். “ஈ’,”ராம்’ ஆகிய படங்களில் எப்படி ஆர்வமாக நடித்தேனோ அது மாதிரி இந்தப் படத்திலும் மிகுந்த ஆர்வத்தோடு நடித்திருக்கிறேன். ஒரு கேரக்டருக்கு கொஞ்சம் எடை குறைந்த மாதிரி பண்ணியிருக்கிறேன். இந்தப் படத்தை நிறைய நாட்களாக எடுத்து வருவதால் கொஞ்சம் ஏறி இறங்கிய மாதிரி இருக்கும்.
நீங்கள் வில்லனாக நடிப்பதாக பேசப்படுகிறதே?
ஆமாம், வில்லனாகவும் நடிக்கிறேன். இதில் எந்த கேரக்டர் வில்லன் என்பதை நீங்கள் படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்களேன்.
கே.வி.ஆனந்த் இயக்கும் “கோ’ படம் முடிவடைந்து விட்டதா?
“கோ’ படமும் நன்றாக வந்திருக்கு. இன்னும் ஐந்து நாட்கள் வேலைதான் பாக்கி. இரண்டு பாடல்கள் எடுக்க வேண்டியிருக்கு. நவம்பர் பதினைந்தாம் தேதியோடு படம் முடியும். உங்க வேலையை நீங்கள் பண்ணினால் மட்டும் போதும் என்று நடிக்கிறவங்களை டென்ஷன் பண்ணாத இயக்குநர் கே.வி.ஆனந்த். அவரோட வேலை வாங்கும் பாணியே தனி. அது எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.
கே.வி.ஆனந்த் ஸார் நிறைய தடவை, “”ஜீவா இல்லைன்னா இந்தப் படத்தை இவ்வளவு சீக்கிரமாக முடித்திருப்பேனா என்று தெரியாது” என்று சொல்லியிருக்கிறார். அவர் நல்ல மனிதர். நல்ல ஹியூமர் சென்ஸ் உள்ளவர். டெக்னிக் தெரிந்தவர். அவரை பார்த்தால் ஒரு எனர்ஜி வந்துவிடும். கேமராவை தூக்கி மலை, காடு என்று போவார். எந்த கஷ்டத்தையும் பொருட்படுத்த மாட்டார். மழை வந்தால் இன்னைக்கு ஷூட்டிங் இருக்காதுன்னு நாம் நினைத்தால், அவர் அந்த மழையிலும் வேலை பார்ப்பார். அவ்வளவு சின்சியரான மனிதர்!
“கோ’வில் ராதாவின் மகள் கார்த்திகாவுடன் நடித்த அனுபவம் குறித்து?
ராதா மேடம் நடித்த “அலைகள் ஓய்வதில்லை’ படத்தை சமீபத்தில் பார்த்த மாதிரிதான் இருக்கு. அதுக்குள்ளே அவருக்கு இவ்வளவு பெரிய பொண்ணா?ன்னு ஆச்சர்யப்பட்டேன். கார்த்திகா அழகாகத் தமிழ் பேசுகிறார். அவங்க கூட நடித்தது நல்ல அனுபவம்தான்.
வசனங்களை சரியாகப் புரிந்துகொண்டு சிறப்பாக நடிக்கிறார். ரொம்பவும் ஃப்ரெண்ட்லியா பழகுவார். மும்பையில் படித்து வளர்ந்தவர். உலக விஷயங்கள் எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கிறார்.
படத்தில் இன்னொரு ஹீரோயினும் இருக்கிறார். அவர் பியா. அவங்களுக்கு யூத் ஃபுல்லான கேரக்டர்.
நீங்கள் நடிக்கும் “வந்தான் வென்றான்’ எவ்வளவு தூரம் வந்திருக்கு?
“ஜெயங்கொண்டான்’, “கண்டேன் காதலை’ ஆகிய வெற்றிப் படங்களுக்குப் பிறகு கண்ணன் இயக்கும் படம் “வந்தான் வென்றான்’. ஐந்து நாட்கள் ஷூட்டிங் நடந்திருக்கு. இந்தப் படத்தில் அர்ஜுன் என்கிற “பாக்ஸர்’ வேடத்தில் நடிக்கிறேன். “ஆடுகளம்’ படத்தில் நடித்து வருகிற டாப்ஸிதான் இதில் கதாநாயகியாக நடிக்கிறார்.
“கச்சேரி ஆரம்பம்’ படத்தில் இடம் பெற்ற “வாடா வாடா பையா…’ பாடல் மாதிரி அடுத்து வரும் படங்களில் இருக்கிறதா?
“வாடா வாடா பையா…’ பாடலை ஒரு நாளைக்கு பல தடவை ஒளிபரப்பி வருகிறார்கள். மக்களிடம் ரொம்பவும் ரீச் ஆன பாடல் அது. அந்தப் பாடல் எனக்கொரு நம்பிக்கையை கொடுத்தது. சின்ன பசங்களை கவரணும்னா நல்லா டான்ஸ் ஆடினால் மட்டும்தான் முடியும். அது மாதிரி, “என்னமோ ஏதோன்னு…’ ஒரு பாடல் “கோ’ படத்தில் பண்ணியிருக்கிறேன். இந்தப் பாடலும் ரசிகர்களுக்கு ரொம்பப் பிடிக்கும்.
வேறு என்னென்னப் படங்களில் நடிக்கிறீங்க?
அடுத்து “ரெளத்திரம்’ படத்தில் நடிக்க இருக்கிறேன். எங்க கம்பெனி தயாரிக்கிற படம். ஹீரோயினாக ஸ்ரேயா நடிக்கிறார். கோகுல் டைரக்ட் பண்றார். இன்னொரு படத்தில் நடிக்கவும் முடிவு பண்ணியிருக்கிறேன். இயக்குநர் பேரு சோழன். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.
இப்படத்தை “அரிது அரிது’ படத்தைத் தயாரித்த நிறுவனம் தயாரிக்கிறாங்க. “த்ரீ இடியட்ஸ்’ படத்தில் நடிக்கவும் கேட்டிருக்காங்க. இப்படத்தை ஷங்கர் ஸôர் டைரக்ட் பண்றார். இதில் விஜய்யும் நடிக்கிறார். இன்னொரு கேரக்டரில் யார் நடிக்கிறார்? என்பது இன்னும் முடிவாகவில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி