2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கும் காங்கிரசும் திமுகவிடம் சரணடைந்துவிட்டன என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
நிருபர்களிடம் பேசிய அக் கட்சியின் தலைவர் நிதின் கட்டாரி, முதலில் வந்தவர்களுக்கே முதலில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு என்ற கொள்கையாலும், அதிலும் வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் அது கிடைக்கும் வகையில் செய்யப்பட்ட திடீர் நடைமுறை மாற்றங்களாலும் இதில் பெரும் ஊழல் நடந்திருக்கிறது என்பு நாட்டின் தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.
எந்த வகையில் இந்த ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கீடு செய்வது என்பதைத் தீர்மானிக்க மத்திய அமைச்சர்கள் சிலர் அடங்கிய குழுவை பிரதமர் முதலில் ஏற்படுத்தினார். ஆனால், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை அந்தக் குழு முடிவு செய்யக் கூடாது, துறையின் அமைச்சரே முடிவு செய்ய வேண்டும் என்று திமுக வற்புறுத்தியது. இதை ஏற்று 2006ம் ஆண்டிலேயே அந்த உரிமையை அந்தத் துறையின் அமைச்சருக்கு பிரதமர் மன்மோகன் சிங் விட்டுக் கொடுத்தார்.
இதனால் இந்த முறைகேட்டில் தங்களுக்கு தொடர்பில்லை என்று பிரதமரோ காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாவோ ஒதுங்கிக் கொள்ள முடியாது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு எப்படி நடந்தது, அதில் யார் .யார் பலனடைந்தார்கள் என்பதெல்லாம் பிரதமருக்கும் காங்கிரஸ் தலைமைக்கும் தெரிந்தே இருந்தது என்றார் நிதின்.
எதியூரப்பா நில ஊழல்-முடிவெடுக்க திணறும் பாஜக:
இதற்கிடையே நில மோசடி ஊழலில் சிக்கியுள்ள கர்நாடக முதல்வர் எதியூரப்பாவை மாற்றுவது தொடர்பாக முடிவெடுக்க முடியாமல் பாஜக திணறி வருகிறது.
நேற்றிரவு பாஜக உயர் மட்டக் குழு கூடி இது குறித்து ஆலோசித்தது. எதியூரப்பாவும் தனது விளக்கத்தை தலைவர்களிடம் அளித்தார்.
மேலும் தனது குடும்பத்தினர், உறவினர்களுக்கு தான் ஒதுக்கிய அரசு நிலத்தை திரும்ப ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாகவும் விளக்கம் தந்தார்.
ஆனாலும் அவரை நீக்கிவிட்டு வேறு ஒருவரை முதல்வராக நியமிக்க வேண்டும் என்று கர்நாடக பாஜக எம்எல்ஏக்களில் ஒரு பிரிவினர் கோரிக்கை வைத்துள்ளனர். அதே நேரத்தில் எம்எல்ஏக்களில் பெரும்பான்மையாக உள்ள எதியூரப்பாவின் சமூகமான லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த அவரது ஆதரவாளர்கள் இதை எதிர்த்து வருகின்றனர்.
இதனால் நேற்றைய கூட்டத்தில் முடிவேதும் எடுக்கப்படவில்லை.
முதல்வர் பதவியைப் பிடிக்க அமைச்சர் ஜகதீஷ் ஷெட்டார், மூத்த எம்பி அனந்த்குமார் ஆகியோர் தீவிரமாக முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் பதவியில் இருந்து எதியூரப்பாவை நீக்கினால் அடுத்ததாக முதல்வராக எதியூரப்பா சார்ந்துள்ள லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவரையே முதல்வராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் பாஜக மேலிடம் உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. கர்நாடகத்தில் பாஜக ஆட்சிக்கு வர இந்த சமூகத்தினர் தந்த ஆதரவே முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊழலுக்கு எதிராக மத்திய அரசை எதிர்த்து நாடாளுமன்றத்தில் பெரும் போராட்டம் நடத்திவரும் பாஜக, ஊழல் விவகாரத்தில் சிக்கியுள்ள தங்கள் கட்சியின் முதல்வர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்று தெரியவில்லை.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி