கோடம்பாக்கத்தில் மழை மாதிரி கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது படங்கள். ஆனால் அவற்றில் சில படங்கள் தவிர, மற்றெல்லா படங்களும் மண்டைக்குள் இறங்கி மனசுக்குள் போவதில்லை. ‘மகிழ்ச்சி’ கண்களையும் மனசையும் பிழிய பிழிய நனைக்கிறது! படம் முடிந்து வெளியே வரும்போது கைகள் அனிச்சை செயலாக போன் செய்யும்…. அவரவர் அக்கா தங்கைகளுக்கு!
அக்காவுக்கும் தம்பிக்கும் அப்படியரு பாசம். கண்காணாத இடத்துக்கு போய் கண்ணை கசிக்கிகிட்டு நிக்கறதுக்கு, இங்கேயே உள்ளூர் மாப்பிள்ளைக்கு கட்டிக் கொடுத்தா கண்ணு முன்னாடி பார்த்துக்கலாம் என்பது தம்பியின் விருப்பம். சோறு போடுற நிலத்தை விற்று வெகு ஜோராக கட்டிக் கொடுக்கிறார்கள். ஆனால் போனவள் அதே வேகத்தில் கணவனால் விரட்டியடிக்கப்படுகிறாள். வாழாவெட்டி அக்காவுக்காக தன் காதலையே தியாகம் செய்கிறான் தம்பி. வீட்டிலிருக்கிற அக்காவுக்காக அவன் பார்க்கிற வேறொரு மாப்பிள்ளை யார்? அதனால் என்ன நிகழ்ந்தது என்பதுதான் (புரட்சிகரமான) முடிவு.
டைரக்டர் கௌதமன்தான் அந்த பாசக்கார தம்பி. ‘அக்கா…’ என்று அழைக்கும்போதே அரை லிட்டர் கண்ணீர் வழிகிறது அவர் கன்னத்தில். (தாய்மாருங்க ஏரியாவுல சாருக்கு தனி நாற்காலி இருக்கப்போய்…) மறுபடியும் அக்காவையும் அத்தானையும் சேர்த்து வைத்துவிட அவர் எடுத்துக்கொள்ளும் அக்கறையும் பொறுமையும் சகிப்புத்தன்மையும் இப்போதும் கிராமபுறங்களில் கண்முன்னே நடப்பவைதான்! இன்னொரு பக்கம் அஞ்சலிக்கும் இவருக்குமான காதல். அடடா… இந்த ஜோடிகளின் சேட்டையை ரசித்துக் கொண்டேயிருக்கலாம். சண்டைக்காட்சிகளில் கௌதமனின் ரோல் மாடல் விஜயகாந்த் போலிருக்கிறது. ஹ்ம்ம்ம்… நடக்கட்டும்!
அதென்னவோ தெரியவில்லை, கௌமனுக்கு மட்டும் தாராள தரிசனம் கொடுத்திருக்கிறார் அஞ்சலி. அந்த ஊர் ஆற்றுத்தண்ணிக்கும் அத்தனை அதிர்ஷ்டம்! கௌதமனும் அஞ்சலியும் விழுந்து புரண்டு கொஞ்சியிருக்கிறார்கள் அதில். அஞ்சலியிடமும் வழக்கத்திற்கு மாறான துள்ளல். காதல் கைகூடாமல் இன்னொருவருக்கு மனைவியான பின்பு தனது கைக்குழந்தையுடன் வந்து அத்தானுக்கு அட்வைஸ் செய்கிற அந்த காட்சி நிஜமாகவே ஃபீலிங்ஸ் ஆஃப் லவ்!
நடித்ததே அவ்வளவுதானா, அல்லது அதற்குள் சிறைக்குள் போய்விட்டாரா தெரியவில்லை. சீமானின் காட்சிகளில் அளவுக்கு மீறிய சிக்கனம். முதல் காட்சியிலேயே அப்பாவை ரோட்டில் புரட்டியெடுக்கிறார். அப்புறம்தான் தெரிகிறது அது எதற்காக என்று. வருகிற சிற்சில காட்சிகளிலும் சீமான் போதிப்பது அடிக்கு அடி தத்துவத்தைதான்.
கௌதமனின் அக்காவாக நடித்திருக்கிறார் கார்த்திகா. இந்த கதைக்காகவே பிறந்த மாதிரி அப்படியரு பக்குவம் அவரிடம். தம்பிக்காக கொதிக்கிற எண்ணை சட்டியில் கையை விட்டு வடை எடுக்கிற காட்சி நினைத்தே பார்க்க முடியாத சென்ட்டிமென்ட் டச். இவருக்கு தாலி கட்டிய கொடூரனாக சம்பத். தியேட்டர் பக்கம் போகும்போது செவுள் பத்திரம்ணே… (ஆமாம், அடுத்த தெருவில் குடியிருக்கும் இவரை பற்றி தெரியாமலா பெண் கொடுப்பார்கள்?)
நடிகர் நடிகைகள் தேர்வில் அப்படியரு நேர்த்தி. அதிலும் சீமான், கௌதமனுக்கு அப்பாவாக நடித்திருக்கிற நடிகர்கள் கவனத்தை ஈர்க்கிறார்கள். கஞ்சா கருப்புக்கு பாட்டி விருந்து கொடுக்கிற காட்சி ஒன்று தியேட்டரையே குலுக்கி எடுக்கிறது. “பத்து நாளா வாயில ஊறப்போட்ட பாக்கு, ஒரே கடியுல உடைச்சிட்டியே” என்று பாட்டி ஆச்சர்யப்படும்போது கருப்பின் எக்ஸ்பிரஷன்… ஆஹ்ஹ்ஹ்
செழியனின் ஒளிப்பதிவில் அத்தனை காட்சிகளும் அருமை. இருந்தாலும் ஒரு காட்சி உயிர். தனது நிலத்தை விற்பதற்கு முன் காற்றில் சலசலக்கும் பச்சை நாற்றுகளை ஆசையோடு வருடிக்கொடுக்கும் அந்த விவசாயியும், அந்த பசுமையும் அப்படியே கண் முன்னே நிற்கிறது.
படம் துவங்குவதற்கு முன் சொல்லப்படும் வரலாற்று கதை ஒன்றும், அதற்கு வரையப்பட்ட ஓவியமும், பின்னணியில் ஒலிக்கும் பச்சியப்பனின் குரலும் இந்த படத்தின் மிக முக்கியமான நிமிடங்கள். வார்த்தெடுத்த கௌதமனுக்கு ஸ்பெஷல் அப்ளாஸ்!வித்யாசகரின் இசையில் ஒன்றிரண்டு பாடல்கள் இனிமை. ஆனால் அது மட்டும் போதாதே…நமக்கு நெருக்கமானவர்களின் பின் மண்டையில் செல்லமாக தட்டி, “போய் மொதல்ல படத்தை பாரு” என்று சொல்லலாம்! ஏனென்றால் ‘மகிழ்ச்சி’யால் நாமும், நமது உறவுகளும் நிறைய வேண்டிய நேரமிது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி