சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியாகி உலகம் முழுக்க வெற்றிக் கொடி கட்டிய எந்திரன் இன்று ஐம்பதாவது நாளைக் கடந்தது.
ஷங்கர் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவான இந்தப் படம் உலகம் முழுக்க 3000 திரையரங்குகளில் கடந்த அக்டோபர் 1-ம் தேதி வெளியாகி வசூலில் புதிய சரித்திரம் படைத்தது. உள்நாடு, வெளிநாடு இரண்டிலும் சேர்த்து இந்தப் படத்தின் மொத்த வசூல் ரூ 350 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் தயாரான படம் மட்டுமல்ல… இந்தியாவிலேயே அதிக வசூலைக் குவித்த படமும் எந்திரனே.
விநியோகஸ்தர்களின் பங்குத் தொகையாக மட்டுமே ரூ 120 கோடியைத் தந்துள்ள ஒரே படம் எந்திரன்தான். இதற்குமுன் அமீர்கானின் 3 இடியட்ஸ் 99 கோடியை வசூலித்தது.
வட இந்தியாவில் டப்பிங் படமாக வெளியான ரோபோவின் வசூல் பெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது. இதுவரை ரூ 30 கோடி வடக்கில் வசூலித்துள்ளது.
தெலுங்கில் புதிய வசூல் சாதனை நிகழ்த்தியுள்ள ரோபோ, இன்னும் பல திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆந்திராவில் மகதீரா படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது ரோபோ.
திருட்டு டிவிடி, இணையதள வெளியீடு என ஒரு படத்துக்கு ஏராளமான சோதனைகள் மலிந்துவிட்ட இந்த நாட்களில், ரூ 350 கோடிக்கும் மேல் வசூலித்த ஒரு படம் 50 நாட்களைக் கடந்தும் ஓடுவது பெரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
குஜராத், ஹரியானா போன்ற வெளி மாநிலங்கள், பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் சில குறிப்பிட்ட திரையரங்குகளில் மட்டும் இந்தப் படம் 50 நாட்களைக் கடந்து ஓடிக் கொண்டிருப்பதாக சன் பிக்சர்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் எந்திரன் படத்தை ஜப்பானில் வெளியிடும் முயற்சிகளில் உள்ளது சன் பிக்சர்ஸ்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி