திண்டிவனத்தில், அதிமுக தொண்டர் முருகானந்தம் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிக்கையிலிருந்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ராமதாஸ் உள்பட 6 பேரின் பெயர்களை நீக்கியதற்கு திண்டிவனம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கை மீணடும் விசாரிக்குமாறும் அது உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் திண்டிவனத்தில் இருந்த முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகத்தின் வீட்டில் அதிமுகவினர் கூடியிருந்தனர். அப்போது ஒரு கும்பல் உள்ளே புகுந்து சண்முகத்தை வெட்டிக் கொல்ல முயன்றது. இதில் முருகானந்தம் என்பவர் பலியானார்.
அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி, ராமதாஸின் உறவினர்கள் உள்பட 21 பேர் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தனர் போலீஸார். ஆனால் பின்னர் திண்டிவனம் கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தபோது ராமதாஸ், அன்புமணி, அவரது உறவினர்கள் உள்பட 6 பேரின் பெயர்கள் மட்டும் நீக்கப்பட்டு விட்டன. இதையடுத்து இவர்களின் பெயர்களையும் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார் சி.வி.சண்முகம். இதனால்தான் அதிமுக, பாமக கூட்டணியே உடைந்தது. சண்முகத்தின் கோரிக்கையைப் பரிசீலித்த உயர்நீதிமன்றம் இதுகுறித்து விசாரிக்குமாறு திண்டிவனம் கோர்ட்டுக்கு உத்தரவிட்டிருந்தது. இதை விசாரித்த திண்டிவனம் கோர்ட், ராமதாஸ் உள்ளிட்ட 6 பேரின் பெயர்களை நீக்கியதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.
இன்று இதுகுறித்து உத்தரவிட்ட மாஜிஸ்திரேட், ராமதாஸ் உள்ளிட்ட 6 பேரின் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் குற்றப்பத்திரிக்கையில் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இது தவறு. கண்டனத்துக்குரியது. வழக்கை போலீஸார் மீண்டும் விசாரித்து புதிய குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். திண்டிவனம் கோர்ட்டின் உத்தரவால் டாக்டர் ராமதாஸின் சொந்த ஊரான திண்டிவனம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிராமங்களில் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி