எதார்த்தமான காதல் கதையை சொல்ல வேண்டும் என்று மலை ஏறி இருக்கிறார் இயக்குநர் பிரபுசாலமன். அது தேனியில் இருந்து தேக்கடிக்கும் மேலே உள்ள குரங்கனி.
அந்த பச்சை பசேல் மலை வட்டாரத்தில ஐம்பது குடித்தனங்கள். அதில சுருளியின் வீடு ஒன்று. சுருளிக்கு சிறுவயதிலேயே படிப்பு மண்டையில் ஏறாததால் வேலைக்கு செல்கிறான். அப்படி வேலைக்கு சென்ற இடத்தில் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் வெளியே பிடித்து தள்ளிய மைனாவையும், அவளது அம்மாவையும் அழைத்து வந்து தனது பாட்டி வீட்டில் தங்க வைத்து அவர்கள் வாழ்க்கைக்கு உதவுகிறான்.
மைனாவின் படிப்புக்கு உதவுவது, தாயின் பனியார கடை வேலைக்கு உதவுவது என அவர்களின் நல்லது கெட்டது என எல்லாவற்றுக்கும் உதவுகிறான். மைனாவும் சுருளி மீது உயிரேயே வைத்திருக்கிறார்.
கால ஓட்டம் பெரிய மனிதர்களாகின்றனர். பெரிய மனுஷியாகிறாள் மைனா. அவளுக்கு பச்சை ஓலை கட்டுகிறான் சுருளி. அவர்களின் வறுமைக்கா இரவு பகல் பாராது உழைத்து உதவுகிறான். இருந்தும், இருவரும் சேர்ந்து விடுவார்களோ என்று பயப்படும் மைனாவின் தாய், மைனாவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க போவதாக கூற, சுருளிக்கு கோபம் வந்துவிடுகிறது. அதை வெளிப்படுத்த அவள் போலீசுக்கு செல்கிறாள்.
பெரியகுளம் கிளைச்சிறையில் பதினைந்து நாள கைதியாக இருக்கும் சுருளிக்கு, மைனாவின் தாய; அவசர அவசரமாக திருமணம் செய்யப்போவதாக கேள்விப்பட்டதும், சிறையில் இருந்து தப்பித்து, அவளை அவர்களிடம் இருந்து காப்பாற்றி, தேடி வந்த போலீசிடம் மாட்டுகிறார். அதன் பிறகு அவர்களது வாழ்க்கை பயணத்தில நடக்கும் சம்பவங்கள் மீதி படம்.
தெளிவான கதை. பரபரப்பான சம்பவங்கள் இல்லை என்றாலும் எதிர்பார்ப்போடு படத்தை பார்க்க வைக்கும் திரைக்கதை. முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் விறுவிறுப்பு கூடுதல்.
சுருளி கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் விதார்த். காதலியின் படிப்புக்காக சைக்கிள் ஓட்டி வெளிச்சம் தருவது, அவளுடைய சடங்கு விழாவுக்காக ராப்பகலா கஷ்டப்படுவது, எந்த மகராசனோ என்று சொன்ன பெண்மணியை கொட்டுவது, மைனாவின் அம்மாவிடம் மல்லுக்கு நிற்பது, ஆணி குத்திக்கொண்ட மைனாவை தூக்கி செல்வது, பஸ்ஸில் பாஸ்கரை காப்பாற்றுவது என பல இடங்களில் தனது திறமையை நிறுபித்திருக்கிறார்.
அதே போல மைனாவாக அமலாபால், காதலியாகவே வாழ்ந்திருக்கிறார். மேக்கப் இல்லாத அவரது முகமும், வார்த்தையை உச்சரிக்கும் உதடுகளும், நம்பும் கண்களும் அடடா.
போலீஸ் அதிகாரி பாஸ்கர் பாத்திரத்தில் நடித்திருக்கும் சேது, படு எதார்த்தமாக நடித்திருக்கிறார். அதே போல நகைச்சுவை, வில்லதனம், செண்டிமெண்ட் மூன்றிலும் முத்திரை பதிக்கிறார் தம்பிராமைய்யா.
குருவம்மாவாக வரும் பூவிதா, பேச்சியம்மாவாக வரும் மீனாட்சி, கிறுக்கு மாயியாக வரும் செவ்வாழை, மண் ரோடு மாணிக்கமாக வரும் கார்த்திக் என பலரும் அந்த பாத்திரமாகவே வாழ்ந்திருக்கின்றனர்.
நான் தான் படத்தின் நாயக்ன் என்பதை படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை அறிவிக்கிறார் ஒளிப்பதிவாளர் சுகுமார். மலையும் பச்சையும் பிரமிப்பும் குளிர்ச்சியும் என படத்தை கொண்டு செல்வது அவர்தான்.
அடுத்து அந்த ஏரியாவை தேடியிடித்து பிரேம் வைக்க உதவிய ஆர்ட் டைரக்டர் வைரபாலன். அவர் போலீஸ்காரர் பாஸ்கர் மைத்துனராகவும் நடித்து கோபத்தை கொட்டியிருக்கிறார். பலே.
டி.இமானின் இசையில் ஏக்நாத் எழுதி பென்னி தயாள், ஷ்ரேயா கோஷல் பாடிய, “நீயும் நானும்…”, யுகபாதி எழுதி ஷான் பாடிய “மைனா மைனா…”, ஹரிச்சரண் பாடிய, “என் உசிநே நீதானடி…”, பேபி ஹரினி, ஸ்ரீரஞ்சனி, ஸ்ரீமதி, ஆத்ரேயா, லட்சுமணன் அரவிந்தன், சோலார் சாய் ஆகியோர் பாடிய “கிச்சு கிச்சு தாம்பளம்..” கேட்க இதம். பின்னணி இசையிலும் பிரமாதப் படுத்தி இருக்கிறார் இமான்.
சில இடங்களில் லாஜிக் இல்லை என்றாலும் பல இடங்களில் இயல்பான காட்சிகள் இதயத்தை தொட்டு செல்கிறது. தரமான படத்தை ரவேண்டும் என்று காடு மலைகள் சென்று கதை களம், நடிகர்கள், கதை சொன்ன விதம் எல்லாவற்றிலும் இயல்பை கையாண்டிருக்கிறார் இயக்குநர் பிரபுசாலமன். அவரது இந்த முயற்சியை பாராட்டுவோம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி