திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி, முதல்வர் கருணாநிதிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில், சென்னை ராஜீவ் காந்தி சிலை அவமதிப்பு சம்பவத்தில் முதல்வரையும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரையும் தொடர்புப்படுத்தி அவதூறான பிரசாரத்தில் காங்கிரஸார் ஈடுபட்டுள்ளனர் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கை:
இலங்கைத் தமிழர்களை படுகொலை செய்ததற்காக இலங்கை அதிபர் ராஜபக்சேவை குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று சர்வதேச அளவில் மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நேரத்தில் டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நிறைவு விழாவுக்கு அவரை சிறப்பு விருந்தினராக அழைத்து இந்திய அரசு சிறப்பித்தது. கோடிக்கணக்கான தமிழர்களை அவமதிக்கும் இந்த செயலுக்காக எனது கண்டனத்தைத் தெரிவித்தேன்.
கூட்டணி அரசியலைத் தாண்டி மனிதநேய அடிப்படையில்தான் என் உணர்வுகளைத் தெரிவித்தேன். நாடாளுமன்றத்தில் எனது முதல் உரையில் கூட, இந்திய அரசு தமிழினத்திற்கு மாபெரும் துரோகம் இழைத்துவிட்டது என்பதையே பதிவு செய்தேன். ஈழத் தமிழினத்துக்கு எதிராக எப்போதெல்லாம் சதிச்செயல்கள் அரங்கேற்றப்படுகின்றனவோ அப்போதெல்லாம் விடுதலைச்சிறுத்தைகள் கண்டனம் தெரிவிக்க தவறியதில்லை. அதன்படியேதான் இப்போதும் கண்டித்திருக்கிறோம்.
அதன் அடிப்படையிலேயே தமிழகத்தில் உள்ள காங்கிரஸின் நிலை குறித்தும் எனது கருத்துகளை வெளியிட்டேன். நாகரிகத்தின் எல்லை மீறாமல் தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் சில கருத்துகளை நான் கூறியிருந்தேன். ஆனால், கருத்துக்குக் கருத்தை முன்நிறுத்தாமல் வன்முறையைத் தூண்டும் வகையில், ஒரு சிலர் செயல்படத் தொடங்கியுள்ளனர்.
எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் சிலர் தி.மு.க. கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் சதி வேலைகளில் இறங்கியுள்ளனர்.
சென்னை, அசோக் நகர் பகுதியில் உள்ள ராஜீவ் காந்தியின் சிலையை அவமதித்ததாக விடுதலைச் சிறுத்தைகள் மீது பழிபோட்டு சாலைமறியல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு, தமிழகம் தழுவிய அளவில் வன்முறையைத் தூண்டிவிட முயற்சித்து வருகின்றனர்.
கொள்கை ரீதியான கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் தலைவர்களை அவமதிப்பது போன்ற கீழ்த்தரமான செயல்களை விடுதலைச் சிறுத்தைகள் ஒருபோதும் செய்ததில்லை.
எத்தகைய கருத்து மோதல்கள் இருந்தாலும் தனி மனித உறவுகளில் நாகரிகமான அணுகுமுறைகளையே கையாண்டு வருகிறோம். ராஜீவ் சிலை அவமதிப்புக்கும், விடுதலைச் சிறுத்தைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை உண்மையான காங்கிரஸ் காரர்களுக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
ராஜீவ் சிலையை அவமதித்ததில் தமிழக முதல்வரையும் தொடர்புபடுத்தி அவருடைய தூண்டுதலில்தான் இது நிகழ்ந்திருக்கிறது என்று அவதூறு பரப்புவதிலிருந்து, அத்தகைய நபர்களின் அரசியல் உள்நோக்கத்தையும், சதித் திட்டத்தையும் அப்பாவி காங்கிரஸ் தொண்டர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி