திரையுலகம்,முதன்மை செய்திகள் எந்திரன் மூலம் ரூ 61 கோடி!!: அய்ங்கரன் – ஈராஸ் அறிவிப்பு

எந்திரன் மூலம் ரூ 61 கோடி!!: அய்ங்கரன் – ஈராஸ் அறிவிப்பு

enthiran003

எந்திரன் திரைப்படத்தை வெளியிட்டதன் மூலம் தங்கள் நிறுவனத்துக்கு மட்டும் ரூ 61 கோடி வசூல் கிடைத்துள்ளதாகவும், இது இதுவரை எப்போதும் பெற்றிராத பெரும் தொகை என்றும் அய்ங்கரன் மற்றும் ஈராஸ் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இதுகுறித்து அய்ங்கரன் நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை வைத்துள்ள ஈராஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எந்திரன் தமிழ், தெலுங்கு பதிப்புகள் மட்டும் அமெரிக்காவில் ரூ 20 கோடியை ஈட்டியுள்ளது. இந்திப் பதிப்பும் கணிசமான வசூலைக் குவித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் ரூ 20 கோடியும், பிரிட்டனில் ரூ 8 கோடியும், ஐக்கிய அரபு நாடுகளில் ரூ 7 கோடியும், மலேஷியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ரூ 21 கோடியும், பிற பகுதிகளில் ரூ 5 கோடியும் இதுவரை வசூலித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த வசூல் ரஜினி – ஷங்கர் கூட்டணியில் முன்பு வந்த சிவாஜியை விட பல மடங்கு அதிகமாகும்.

இதுகுறித்து அய்ங்கரன் நிறுவனத்தின் கருணாமூர்த்தி கூறுகையில், “இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பெரும் வெற்றி பெற்றுள்ளது ரஜினியின் எந்திரன் / ரோபோ. ரஜினி, ஷங்கர், ரஹ்மான் என்ற வெற்றிக் கூட்டணி மீண்டும் ஜாக்பாட் அடித்துள்ளது. இந்தப் படம் அனைத்து பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளையும் தகர்த்துவிட்டது. தமிழ்ப் படங்களை அதிக செலவில் தயாரித்து சர்வதேச அளவில் விற்க முடியும் என்ற நம்பிக்கையை அழுத்தமாக விதைத்துள்ளது எந்திரன்” என்றார்.

அய்ங்கரன் நிறுவனத்தின் 51 சதவீத பங்குதாரரான ஈராஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கிஷோர் லுல்லா கூறுகையில், “எந்திரன் தமிழ்/தெலுங்கு பதிப்புகளை உலகமெங்கும் வெளியிட்டவர்கள் என்ற முறையில் பெருமை அடைகிறோம். இந்தப் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் எங்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது…,” என்றார்.

எந்திரன் படத்தை முதலில் ரூ 150 கோடியில் தயாரிக்கத் திட்டமிட்டு படப்பிடிப்பையும் துவக்கியவர்கள் இந்த அய்ங்கரனும் ஈராஸ் நிறுவனமும்தான். ஆனால், சர்வதேச நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, படத்தயாரிப்பிலிருந்து விலகிக் கொண்டனர். அப்போதுதான், இந்தப் படத்தைத் தயாரிக்குமாறு சன் பிக்சர்ஸை கேட்டுக் கொண்டார் சூப்பர் ஸ்டார் ரஜினி என்பது நினைவிருக்கலாம்.

எந்திரன் திரைப்படம் அனைத்து மொழிகளிலும் மொத்தமாக ரூ 318 கோடி வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி