திரையுலகம்,முதன்மை செய்திகள் ரூ 318 கோடி… அனைத்து சாதனைகளையும் தகர்த்தது ரஜினியின் எந்திரன்

ரூ 318 கோடி… அனைத்து சாதனைகளையும் தகர்த்தது ரஜினியின் எந்திரன்

ரூ 318 கோடி… அனைத்து சாதனைகளையும் தகர்த்தது ரஜினியின் எந்திரன் post thumbnail image

enthiran___the-robot

வெளியான மூன்று வாரங்களில் ரூ 318 கோடியை வசூலித்து, அனைத்து பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளையும் தகர்த்துள்ளது சூப்பர்ஸ்டார் ரஜினியின் எந்திரன்.

ரஜினிகாந்த் – ஐஸ்வர்யா ராய் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்த படம் எந்திரன். இந்தியா விலேயே அதிக பட்ஜெட்டில் ரூ 162 கோடி செலவில் உருவானது இந்தப் படம்.

கடந்த அக்டோபர் முதல் தேதி உலகம் முழுவதும் 3000 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியானது. ஜப்பான் போன்ற சில நாடுகளில் இன்னும் இந்தப் படம் வெளியாகவில்லை.

படம் வெளியாகி 15 நாட்கள் முடிந்துள்ள நிலையில், இந்தப் படத்தின் வசூல் விவரங்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வந்தன. ஆனால் சன் பிக்ஸர்ஸ் அமைதி காத்தது. கடந்த வாரம் எந்திரனின் உலகளாவிய வசூல் ரூ 225 கோடி என முதல்முறையாக அறிவித்தது சன் பிக்ஸர்ஸ்.

அமெரிக்காவில் மட்டும் ரூ 24 கோடி வரை (எந்திரன் / ரோபோ) இந்தப் படம் வசூலித்துள்ளளது. பிரிட்டனில் தொடர்ந்து ஓடிக் கொண்டுள்ளது. எந்த இந்தியப் படமாக இருந்தாலும் ஒரு காட்சிக்கே அரங்கு நிறையாத ஸ்கான்டினேவியன் நாடுகளான நார்வே மற்றும் ஸ்வீடனில் ஒரு வாரம் ஓடிய ஒரே படம் எந்திரன்தான் என்கிறார்கள்.

வட இந்தியாவில் எந்திரன் / ரோபோ பெரும் சாதனை படைத்துள்ளது. இந்தியில் டப் செய்யப்பட்ட எந்திரன் 800க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரூ 30 கோடியை வசூலித்துள்ளது.

தெலுங்கில் முன்னெப்போதும் கண்டிராத வெற்றி ரோபோவுக்கு கிடைத்துள்ளது. தெலுங்கில் இதுவரை சாதனை என்று கருதப்பட்ட மகாதீரா வசூலை முதல் வாரத்திலேயே தாண்டிவிட்டது ரோபோ. இந்தப் படத்துக்குப் பிறகு வெளியான மகேஷ்பாபுவின் கலேஜா கூட சுமாராகத்தான் போகிறது. ஆனால் எந்திரனுக்கு இன்றுவரை கூட்டம் குறையவில்லை ஆந்திராவில்.

தெலுங்கு ரோபோவுக்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தமிழில் இந்தப் படம் ரூ 170 கோடியைக் குவித்து மிரள வைத்துள்ளது. இதுவரை தமிழ்ப் பட உலகம் கண்டும் கேட்டுமிராத பெரும் சாதனை இது.

இந்தியா உள்பட உலகளவில் இதுவரை ரூ 318 கோடியை எந்திரன் / ரோபோ குவித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து சத்யம் சினிப்ளெக்ஸின் ஜெயேந்திரா பானர்ஜி கூறுகையில், “இந்த சாதனையை இன்னொரு படம் தொட ரொம்ப நாளாகும் என்று நினைக்கிறேன். ஒரு வேளை மீண்டும் ரஜினியே கூட இதை முறியடிக்கலாம்” என்றார். சத்யம் சினிப்ளெக்ஸில் 80 சதவீத பார்வையாளர்கள் ரோபோவுக்கு வருவதாகவும், எந்திரனுக்கு இன்றும் 100 சதவீத பார்வையாளர்கள் உள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்திய அளவில் வசூலில் சாதனை புரிந்த படமாக 3 இடியட்ஸை கூறிவந்தனர். ஆனால் அந்தப் படம் கடந்த ஆண்டு வெளியாகி, இதுவரை வசூலித்த தொகைக்கும் அதிகமாக மூன்றே வாரத்தில் வசூலித்துள்ளது எந்திரன். இப்போதும் அகமதாபாத், சண்டிகர், ஜோத்பூர் உள்ளிட்ட வட இந்திய நகரங்களில் ரோபோ ஓடுவது சாதாரண விஷயமல்ல என்கிறார்கள்.

அஸ்ஸாமில் வெளியான முதல் தமிழ்ப் படம் எந்திரன் / ரோபோவாகத்தான் இருக்கும் என்கி்றார் பிரபல விநியோகஸ்தர் வினோத் மெஹ்ரா. அதேநேரம், முன்பு ரஜினியின் சிவாஜிக்கு கிடைத்த அளவு வரவேற்பு கொல்கத்தாவில் எந்திரனுக்குக் கிடைக்கவில்லை என்பதையும் அவர் தெரிவித்தார்.

கேரளத்தில் இன்னும் 120 திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை (15 நாளில்) ரூ 6.12 கோடி வசூல் கிடைத்துள்ளதாம். இந்தப் படத்தை வாங்கி வெளியிட்டிருப்பவர் 7 ஆர்ட்ஸ் விஜயகுமார். இவர்தான் குசேலனை எடுத்தவர். அந்தப் படத்தில் விட்டதை, எந்திரனில் பிடித்த தெம்பிலிருக்கிறார். இந்தப்படம் ஒட்டுமொத்தமாக தமக்கு ரூ 9 கோடி வரை வசூலித்துத் தரும் என நம்புகிறார் விஜயகுமார். தீபாவளிக்கும் பல திரையரங்குகள் புதிய மலையாளப் படங்களை விட எந்திரனே இருக்கட்டும் என்று கூறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இப்போதும் 40 திரையரங்குகளில் ஓடும் எந்திரன், புறநகர்ப் பகுதிகளில் மட்டும் சில திரையரங்குகளில் எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த விநியோகஸ்தர், “இங்கெல்லாம் மூன்று அல்லது நான்கு அரங்குகளில் இந்தப் படத்தை ரிலீஸ் செய்திருந்தனர். எனவேதான் பூந்தமல்லி, ஆதம்பாக்கம் போன்ற இடங்களில் ஒரு திரையரங்கில் இந்தப் படத்தை எடுத்துள்ளனர். மற்றபடி வார இறுதி நாட்களில் இப்போதும் டிக்கெட் கிடைக்காத நிலைதான் உள்ளது,” என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி