எந்திரன் திரையிடப்பட்டுள்ள பெங்களூர் திரையரங்குகளில் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வந்த தகவல்களைத் தொடர்ந்து கர்நாடக மாநில வணிக வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
கர்நாடகத்தில் ரூ 9.5 கோடிக்கு எந்திரன் விற்கப்பட்டது. இந்தப் படம் கிட்டத்தட்ட 60 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. பொதுவாக மற்ற மொழிப் படங்களை 24 திரையரங்குகளில் மட்டுமே திரையிட அனுமதிப்பது என்று கர்நாடக பிலிம்சேம்பர் விதி முறை வகுத்துள்ளது. எந்திரனுக்கும் இதே அளவிலான தியேட்டர்களில் மட்டுமே படத்தை திரையிட உத்தரவிடப்பட்டதாம்.
அதேசமயம், எந்திரன் படத்துக்காக இந்த விதி தளர்த்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. இருப்பினும் அப்படி செய்ய்பபடவில்லை என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை விளக்கியுள்ளது.
வர்த்தக சபை குறிப்பிட்ட அளவிலான தியேட்டர்களுக்குப் பதில் கர்நாடகம் முழுவதும் கிட்டத்தட்ட 100 தியேட்டர்களில் எந்திரன்-ரோபோ திரையிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் பெங்களூர் உள்ளிட்ட தென் கர்நாடகத்தில் மட்டும் 58 திரையரங்குகளில் எந்திரன் / ரோபோ ஓடுகிறது.
மிகப் பெரிய விலை கொடுத்து படத்தை வாங்கியுள்ளதால் விரைவிலேயே அதை வசூலித்து விடும் நோக்கில் தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வைத்து விற்கப்படுகிறதாம்.
எந்திரன் திரையிடப்பட்டுள்ள அனைத்து தியேட்டர்களிலும் வழக்கத்தை விட அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறதாம். அதிலும் மல்டிபிளக்ஸ்களில் மிக அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதாம். குறைந்தபட்சமே ரூ 300 வரை வைத்து விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் திடீரென்று பெங்களூரில் எந்திரன் ஓடும் தியேட்டர்களில் திடீர் சோதனை நடத்தினர் வணிக வரித்துறையினர். கூடுதல் கட்டணம் வசூலித்தது உள்ளிட்ட விதி மீறல்கள் தொடர்பாக இந்த சோதனை நடந்துள்ளது.
இந்த சோதனை குறித்து வணிக வரித்துறையினர் கூறுகையில், முறைகேடாக டிக்கெட் கட்டணத்தை உயர்த்திய தியேட்டர்களில் ரெய்டு நடந்துள்ளது உண்மைதான். அவர்களுக்கு கடும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
உத்தரஹள்ளி பகுதியில் உள்ள இரண்டு தியேட்டர்களைக் கொண்ட வளாகத்தில் மிகப் பெரிய அளவில் கட்டணம் வசூலிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த தியேட்டர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது என்று தெரிவித்தனர்.
கர்நாடகத்தில் கன்னடப் படங்களுக்கு முழு வரிவிலக்கு அமலில் உள்ளது. அதேசமயம், கன்னடம் அல்லாத பிற மொழிப் படங்களுக்கு 30 சதவீதம் வரை கேளிக்கை வரி விதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி