சத்யம் திரையரங்க வாசலில் ஏகப்பட்ட போலீஸ் தலைகள். சமீபகாலமாக இலங்கை விவகாரத்தில் மெல்லப்பட்டு வரும் விவேக் ஓபராய் வருவதை ஒட்டிதான் இந்த காவலும் கண்காணிப்புகளும் என்பதை சில நிமிடங்களில் புரிந்து கொள்ள முடிந்தது. ரத்த சரித்திரம் பாடல் வெளியீட்டு விழாவுக்குதான் இத்தனை களேபரங்களும்.
எப்பவும் ஒற்றை போலீஸ் பின் தொடர வந்து கொண்டிருப்பார் மணிரத்னம். (இப்போ அதுவும் இல்லை) ஆனால் இந்த மொத்த கூட்டத்தையும் பார்த்து அவரே அதிர்ந்திருக்கக்கூடும். விழாவில் நாம் எதிர்பார்க்காத முக்கிய நபர் பாலிவுட் நடிகரும் ரஜினியின் ஆஸ்தான குருநாதருமான சத்ருகன் சின்ஹா.
கார்த்தி, ஏ.ஆர்.முருகதாஸ், கே.வி.ஆனந்த் என்று சூர்யாவின் நெருங்கிய வட்டமும் இருந்தது மேடையில். ட்ரெய்லரை பார்த்த ஒவ்வொருவரும் அதுபற்றி பேச, சேம் சைட் கோல் அடித்தார் முருகதாஸ். ராம்கோபால் வர்மா இயக்கிய உதயம் பார்த்துட்டு தமிழ்நாட்டில் ரொம்ப பேரு ரவுடியாகிட்டாங்க. கஞ்சா, அபின் மாதிரிதான் சூர்யாவும். ஒரு முறை பழகிட்டா அதுக்கு அடிமையாகிட சொல்லும்.
நான் எந்த கதையை யோசித்தாலும் அதில் அவரை பொருத்திப் பார்க்க வைப்பார் சூர்யா என்றவர், மணிரத்னம் சாரை இப்பதான் இவ்வளவு குளோஸ் ஆக பார்க்கிறேன். சார்… சென்னையில் ஷூட்டிங் இருக்கும் போது சொல்லுங்க. நான் பத்து நாள் உங்ககிட்ட அசிஸ்டென்ட் டைரக்டரா வொர்க் பண்றேன்னு சொன்னேன் என்றார். அதற்கு பின்பு முருகதாஸ் பேசியதுதான் நெருடல்.
விவேக் ஓபராய் ரொம்ப மனிதாபிமானம் மிக்கவர். சுனாமியால் மக்கள் பாதிக்கப்பட்ட கடலூரில் அவங்களுக்கு இலவசமா வீடு கட்டிக் கொடுத்தவர் அவர். அதுக்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பில் நன்றி என்றார். (இப்ப அந்த வீடுகள் எதுவும் அங்க இல்ல சாமி. வெறும் அஸ்திவாரம்தான் இருக்கு) இவரை தொடர்ந்து பேசிய விவேக் ஓபராய் முழுக்க முழுக்க தமிழில் பேசியதில் ஏதாவது உள் குத்து இருக்குமோ?
மாமா சௌக்யமா? என்று பருத்தி வீரன் டயலாக்கோடு பேச ஆரம்பித்த கார்த்தி, ப்ரியா மணிய அப்ப பார்த்தது. திரும்ப இப்பதான் பார்க்கிறேன் என்று சொல்ல கைதட்டலுக்கு கேட்கவா வேண்டும் ? அண்ணனோட டைமன்ஷன் ஒவ்வொரு படத்துலேயும் வெவ்வேற மாதிரி மெருகேறிகிட்டே இருக்கு. இந்த ட்ரெய்லரை இப்பதான் பார்க்கிறேன். இதைவிட நல்லா செய்யணும்னா நான் என்னை இன்னும் தயார் படுத்திக்கணும் என்றார்.
இவ்வளவு ரத்த களறியாக ஒரு படமா ? என்ற சிலரின் கருத்துக்களுக்கு தனது பேச்சில் பதில் சொன்னார் சூர்யா. இவ்வளவு வன்முறையும் இந்த படத்தில் சொல்லப்பட்டிருக்கும் காரணத்திற்கு முன்னால் கடுகு மாதிரி சின்னதா தெரியும் பாருங்க என்று விளக்கவுரையாற்றினார் சூர்யா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி