செய்திகள்,திரையுலகம் சங்கராபரணம் (2015) திரை விமர்சனம்…

சங்கராபரணம் (2015) திரை விமர்சனம்…

சங்கராபரணம் (2015) திரை விமர்சனம்… post thumbnail image
சிவன் கழுத்தில் இருக்கும் ஆபரணம் என்னும் பொருள்படும் வகையில் தலைப்பிடப்பட்ட ‘சங்கராபரணம்’ திரைப்படம் 35 ஆண்டுகளுக்கு பின்னர் ரசிகர்களின் விழிகள், செவிகள் மற்றும் கருத்துக்கு மீண்டும் விருந்தளிக்க தமிழ் மொழிபெயர்ப்புடன் நவீன தொழில்நுட்பத்தில் தற்போது வெளியாகியுள்ளது. உணர்வுகளையும், இசையையும் மையமாக வைத்து உலகத்தரமான படத்தை இந்தியர்களாலும் தயாரிக்க முடியும் என்பதையும், தெலுங்கு சினிமா என்றாலே கனவுப் பாடல்களில் வண்ண வண்ண உடைகளுடன் வந்து குதித்து, குதித்து நடனமாடும் காட்சிகள்தான் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பையும் ஒருசேர புரட்டிப் போட்ட படமாகவும் அந்நாள் திரை விமர்சகர்களால் சங்கராபரணம் புகழப்பட்டது.

அன்னையின் ஆசைப்படி கொடுமைக்கார ஜமீன்தாருக்கு மனைவியாக மறுத்து, வீட்டை விட்டு தப்பியோடிவரும் இளம்பெண்ணுக்கு வயதான கந்தலாடை பாடகர் இசை பயிற்சி அளிக்கிறார். அந்த புனிதமான குரு-சிஷ்யை உறவை இந்த சமூகம் எப்படி கொச்சைப்படுத்தப் பார்க்கின்றது? என்பதே இப்படத்தின் மையக்கரு. இதில் எந்த நடிகரையும் தேடி அடையாளம் காணுவது கடினம் என்று கூறுமளவுக்கு நடித்துள்ள அனைவருமே கதாபாத்திரங்களாகவே மாறி காணப்படுவது தனிச்சிறப்பு. வசனங்களற்ற- வெறும் இசை மற்றும் பாடல்களுடன் கூடிய படமாக வெளிவந்திருந்தாலும் இப்படத்தின் கதைமாந்தர்களின் உணர்ச்சிபூர்வ நடிப்பு மற்றும் திரை இசை திலகம் கே.வி.மகாதேவனின் தேனினும் இனிய இசை சங்கராபரணத்தை நிச்சயமாக வெற்றிப்படமாக்கி இருக்கும் என நம்பலாம். இருப்பினும், சாட்டையடியாய் வரும் சில வசனங்கள் பல தலைமுறைகளுக்கு பாடமாக அமைந்துள்ளது. உதாரணத்துக்கு, ‘சம்பிரதாயங்கள் என்பது உடலையும், ஆன்மாவையும் தூய்மைப்படுத்துவதற்கு தானேயொழிய.., மதத்தின் பெயரால் மக்களை பிரித்துப் பார்த்து, தனிமைப்படுத்த அல்ல’ என்பது போன்ற கருத்தாழம் மிக்க வசனங்களும் இந்தப் படத்துக்கு பக்கபலமாகவே அமைந்துள்ளது.

சோமையாஜூலு, மஞ்சு பார்கவி, சந்திரமோகன் ஆகியோர் வெறும் நடிகர்களாக மட்டும் இல்லாமல் இந்தப் படத்தின் ஜீவநாடிகளாகவும் வாழ்ந்து காட்டியுள்ளனர். ஒளிப்பதிவில் தோன்றும் பிரமாண்டத்தைக் கண்டு மெய்மறந்தவர்கள் ஒளிப்பதிவாளரின் பெயரைத் தேடும்போது ‘அது நான்தான்’ என்று மறைந்த பாலு மகேந்திராவின் கைவண்ணம் கட்டியம் கூறுகிறது. இந்தியப் படங்கள் உலகத்தரத்துக்கு இணையாக உருவாவதில்லை என்ற தவறான கருத்துக்கும், வாதத்துக்கும் 35 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த படத்தின் மூலம் பலமாக பதில் அளித்த இயக்குனர் கே.விஸ்வநாதன் இந்த ஒருபடத்தை இயக்கிய பின்னர் சினிமா தொழிலை விட்டே விலகிப் போய் இருந்தாலும்.., ‘சங்கராபரணம்’ ஒன்று போதும், அவரது பெயரை ஆயிரம் தலைமுறைகளுக்கு நினைவுப்படுத்த என்று கூறும் அளவுக்கு ‘கேமரா காவியமாக’ உருவான இந்தப் படம், மொழி எல்லைகளை எல்லாம் கடந்து 1980-களில் தமிழகத்தின் மூலைமுடுக்குகளில் எல்லாம் ஓராண்டுக்கும் மேலாக ஓடி வெற்றிவிழா கண்டது. சிறந்த இயக்குனராக என்.விஸ்வநாதனுக்கும், சிறந்த இசையப்பராளராக கே.வி.மகாதேவனுக்கும், சிறந்த பின்னணி பாடகர் மற்றும் பாடகியாக எஸ்.பி.பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராமுக்கும் நான்கு தேசிய விருதுகளை தேடித்தந்த இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஓங்கார நாதானு, ராகம் தானம் பல்லவி, சங்கரா நாதசரீரா வரா, யே திருக நானு, மாணிக்க வீணா, பலுகே பங்காரமையான, தொராகுன இதுவந்தி சேவா உள்ளிட்ட இனிய பாடல்களின் ரீங்காரம் காதுகளை விட்டு நீங்க பல நாட்கள் ஆகும். தற்போது, தமிழில் மொழிபெயர்ப்பாகி மெருகூட்டப்பட்ட புதிய பதிப்பாக வெளியாகியுள்ள சங்கராபரணம், இந்த ரிலீசிலும் ஓராண்டை கொண்டாடும் என்று எதிர்பார்க்கலாம்.

மொத்தத்தில் ‘சங்கராபரணம்’ ஒரு சகாப்தம்…………….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி