செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு உலகக்கோப்பை கிரிக்கெட்: 98 ரன்களில் வெற்றிபெற்ற நியூசிலாந்து…

உலகக்கோப்பை கிரிக்கெட்: 98 ரன்களில் வெற்றிபெற்ற நியூசிலாந்து…

உலகக்கோப்பை கிரிக்கெட்: 98 ரன்களில் வெற்றிபெற்ற நியூசிலாந்து… post thumbnail image
கிறிஸ்ட்சர்ச் :- உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டம் இன்று அதிகாலை இந்திய நேரப்படி 3.30 மணிக்கு நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள நியூசிலாந்து-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங் தேர்வு செய்தது, அதன்படி அணியின் தொடக்க வீரர்கள் பிரன்டன் மெக்கல்லம் மற்றும் மார்ட்டின் குப்தில் களம் இறங்கி தனது ஆட்டத்தை தொடங்கினர். ஆட்டத்தின் 15.5 ஓவரில் மெக்கல்லம் 65 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹெராத் வீசிய பந்தில் முதல் விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பின் களம் இறங்கிய வில்லியம்சன் தனது ஆட்டத்தை துவக்கினார். மார்ட்டின் குப்திலும், வில்லியம்சனும் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை துவக்கினர். ஆட்டத்தின் 22.2 ஓவரில் மென்டிஸ் வீசிய பந்தில் வில்லியம்சன் 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

அடுத்ததாக இறங்கிய டெய்லர் (14) மற்றும் கிரான்ட் எலியாட்டும் (29) ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து வந்து இறங்கிய ஆண்டர்சன் தனது அதிரடி ஆட்டத்தை தொடங்கினார். ஆண்டர்சனும் லுக் ரோஞ்ஜினும் ஜோடி சேர்ந்து இலங்கையின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். இதில் ஆண்டர்சன் 46 பந்தில் 75 எடுத்து அணியின் ரன்களை உச்சத்திற்கு கொண்டு போனார். இறுதியில் ஆட்டத்தின் கடைசி ஓவர் கடைசி பந்தில் குலசேகரா பந்தில் ஆண்டர்சன் விக்கெட்டை பறிகொடுத்தார், இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 331 ரன்கள் எடுத்து தனது ஆட்டத்தை முடித்தது.

இலங்கை அணி தரப்பில் லக்மல், மென்டிஸ் தலா 2 விக்கெட்களும், குலசேகரா, ஹெராத் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.

இதையடுத்து 332 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் துவக்க வீரர்கள் ஓரளவு ரன் குவித்தபோதும், பின்கள வீரர்கள் சோபிக்கவில்லை. நியூசிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர்.

துவக்க வீரர் தில்ஷான் 24 ரன்களும், திரிமன்னே 65 ரன்களும் எடுத்தனர். சங்ககரா 39 ரன்கள் சேர்த்தார். நெருக்கடியான நேரத்தில் நிதானமாக விளையாடிய கேப்டன் மேத்யூஸ் 46 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன்பிறகு வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, இலங்கை அணி 47-வது ஓவரில் 233 ரன்களில் சுருண்டது. இதனால், 98 ரன்களில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

அந்த அணி தரப்பில் சவுத்தி, போல்ட், மில்னி, வெட்டோரி ஆண்டர்சன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஆண்டர்சன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி