செய்திகள் சீனாவின் மிகப்பெரிய மசூதியின் இமாம் படுகொலை!…

சீனாவின் மிகப்பெரிய மசூதியின் இமாம் படுகொலை!…

சீனாவின் மிகப்பெரிய மசூதியின் இமாம் படுகொலை!… post thumbnail image
பீஜிங்:-சீனாவின் சிங்ஜியாங் மாகாணத்தில் வசிக்கும் அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் ஆதரவை பெற்ற கிழக்கு துருக்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கத்தினர் மற்றும் உய்குர் தீவிரவாதிகள் சீனப் படையினரை எதிர்த்து போரிட்டு வருகின்றனர்.அதிகமாக உய்குர் முஸ்லிம்கள் வாழும் சிங்ஜியாங் பகுதியில் சீன ஹான் இனத்தவரின் குடியேற்றம் பெருகி வருவதை கண்டித்து இவர்கள் போராடி வருகின்றனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் எல்லையோரம் பதுங்கியிருக்கும் இவர்கள் அவ்வப்போது தீவிரவாத தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சீனாவின் தலைநகர் பீஜிங்கில் உள்ள டியனன்மென் சதுக்கத்தின் மீது இவர்கள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 5 பேர் பலியாகினர். சீனாவின் பிரபல ரெயில் நிலையங்களுக்குள் கத்தி மற்றும் உடைவாட்களுடன் புகுந்த இவர்கள் ஏராளமான பொதுமக்களையும் வெட்டி சாய்த்துள்ளனர்.இந்நிலையில், சிங்ஜியாங் மாகாணத்தின் கஷ்கர் நகரில் உள்ள 600 ஆண்டுகால பழமை வாய்ந்ததும், சுமார் 20 ஆயிரம் மக்கள் ஒரே நேரத்தில் தொழுகை நடத்தும் வசதி கொண்டதும், சீனாவிலேயே பெரிய மசூதி என்று கருதப்படுவதுமான ‘ஈத் கா’ மசூதியின் தலைமை இமாமாக நியமிக்கப்பட்டிருந்த ஜுமே தாஹிர் என்பவரை நேற்று முன்தினம் (புதன்கிழமை) மசூதிக்குள் புகுந்த மூவர் வெட்டி சாய்த்தனர்.

கொலையாளிகளில் இருவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் ஒருவர் மட்டும் உயிருடன் பிடிபட்டுள்ளதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது. கொலையுண்ட ஜுமே தாஹிர் சீனா முழுவதும் மிகவும் பிரபலமான இமாமாக கருதப்பட்டார்.சீன அரசு மற்றும் ராணுவ அதிகாரிகளுடன் மிக நெருக்கமான தொடர்பும், அதிக செல்வாக்கும் படைத்தவராக அறியப்பட்ட இவரை உய்குர் தீவிரவாதிகள் தான் வெட்டிக் கொன்றிருக்க வேண்டும் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி