செய்திகள்,திரையுலகம் ஆதி தப்பு (2014) திரைவிமர்சனம்…

ஆதி தப்பு (2014) திரைவிமர்சனம்…

ஆதி தப்பு (2014) திரைவிமர்சனம்… post thumbnail image
நாயகன் சந்தோஷ் குமார் கல்லூரியில் முதலாமாண்டு சேருகிறார். அங்கு சீனியர்கள் சந்தோசை ராகிங் செய்கிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பித்த சந்தோஷ் எதிர்பாராதவிதமாக நாயகி யுவலரசினியை அடித்து விடுகிறார். இவர்களின் முதல் சந்திப்பே மோதலில் ஆரம்பிக்க, பிறகு யுவலரசினியிடம் மன்னிப்பு கேட்டு அவருடன் நட்பாகிறார் சந்தோஷ்.

இவர்களின் நட்பு பிறகு காதலாக மாறுகிறது. இவர்கள் பழகுவதை பார்க்கும் அதே கல்லூரியில் படிக்கும் யுவலரசினியின் தாய் மாமன், இருவரையும் எச்சரிக்கிறார். அதிலிருந்து யுவலரசினியிடம் பேசாமல் விலகுகிறார் சந்தோஷ். ஏன் பேசாமல் விலகுகிறாய் என்று யுவலரசினி, சந்தோசிடம் கேட்க, அவர் தன் அப்பாவிற்கு இதெல்லாம் பிடிக்காது என்று கூறுகிறார்.யார் உங்க அப்பா என்று கேட்க, அதற்கு சந்தோஷ் தன் அப்பா ஆதி, தற்போது விவசாயம் செய்வதாகவும் இதற்கு முன் தப்பு அடிக்கும் தொழில் செய்ததாகவும் கூறுகிறார். இதிலிருந்து ப்ளாஸ்பேக்கில் படம் நகருகிறது.

சந்தோசின் அப்பா தப்படிப்பதை ரசிக்கும் மக்கள் இவரை மதிக்காமல் இருக்கிறார்கள். பல இடங்களில் அவமானப்படுகிறார். குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த இவர் தப்படிப்பதனால் மேல் ஜாதி மக்கள் இவரை மிகவும் கீழ்த்தரமாக நடத்துகிறார்கள். இதனால் மனவேதனை அடைகிறார்.ஒரு கட்டத்தில் விழாவில் தப்படிக்கும் இவரிடம் பவானி சிவம் வீண் சண்டை இழுத்து அவரை அடித்து விடுகிறார். இதனால் வருத்தம் அடையும் ஆதி, கடவுளிடம் ஏன் எங்களை இப்படி படைத்தாய், இதற்குமேல் நான் தப்படிக்கும் தொழிலை செய்ய மாட்டேன் என்று சபதம் எடுக்கிறார்.இறுதியில் ஆதி, தன் சபதத்தை மீறி தப்படித்தாரா? யுவலரசினியிடம் இருந்து ஒதுங்கிய சந்தோஷ் மீண்டும் அவரை கைப்பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சந்தோசும், நாயகி யுவலரசினியும் நடிக்க முயற்சி செய்திருக்கிறார்கள். இருவருக்கும் நடிக்க வாய்ப்பும் குறைவு. ஆதியாக நடித்திருக்கும் கர்ணா, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இவருடைய சோகமான முகம் காட்சிகளுக்கு பொருந்தியிருக்கிறது. ஒரு சில இடங்களில் இவருடைய நடிப்பு செயற்கைத் தனமாக இருப்பதுபோன்று தெரிகிறது.படத்தில் ஜீவன் மயில் இசையில் வேல் முருகன் பாடியிருக்கும் பாடல் மட்டுமே ரசிக்கும் படியாக இருக்கிறது. தப்புக்கு அதிக முக்கியத்துவம் உள்ள படத்தில் தப்பு இசை இல்லாதது வருத்தம். எஸ்.ஆர்.குமாரின் ஒளிப்பதிவு காட்சிகள் தெளிவில்லாமல் இருக்கிறது. கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம். பல காட்சிகளில் லைட்டிங் இல்லாமல் திரையில் யார் இருக்கிறார்கள் என்று எண்ணும் அளவிற்கு உள்ளது.தப்படித்து வாழ்பவர்களின் வாழ்க்கையை மையமாக எடுத்துக் கொண்ட இயக்குனர் கருணாநிதி, அதை திரைக்கதையில் கவனம் செலுத்தாமல் விட்டிருக்கிறார். தேவையில்லாத காட்சிகளை தவிர்த்திருக்கலாம். தப்புக்குள்ள காட்சிகளுக்கு வலு சேர்த்திருக்கலாம்.

மொத்தத்தில் ‘ஆதி தப்பு’ தப்பு…..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி